என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நாகூர் தர்காவில் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்கா, பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததை அடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017&ம் ஆண்டுமுதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், ஊழல் புகார்களுக்கு உள்ளான நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகிகள் அலாவுதீன் மற்றும் அக்பர் ஆகியோரை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து, தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க உத்தரவிட்டது.

    ஆனால், இடைக்கால நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் நாகூர் தர்கா அலுவலகம் வந்த தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தர்கா வளாகம், தர்கா கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் மார்க்கெட் போன்றவைகளை நேரடி ஆய்வு மேற்கொண்ட அவர்கள் இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளை 
    பூட்டி சீல் வைத்தனர்.

    மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதித்ததுடன், தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வர வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர். 

    தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு உள்ளாகி நீக்கம் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகிகள் அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து, வக்பு தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே தலைமை ஆசிரியர் பிரிவுபசார விழாவில் திடீரென அவ்வழியாக வந்த அமைச்சர் பங்கேற்றார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அரசன் கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் மரகதவள்ளி. 

    இவர் பணி மாறுதல் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். நேற்று பள்ளி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் தனபாலன் வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி தனபாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகாலிங்கம், மாலதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த பவுன் சுப்பிரமணியன் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்பொழுது வேதாரண்யம் வழியாக நாகை சென்ற அமைச்சர் விழா நடப்பதை அறிந்து காரை நிறுத்தி இறங்கி சென்று விழாவில் கலந்துகொண்டு ஆசிரியருக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசினார். 

    விழாவில் திடீரென அமைச்சர் வந்து கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர சுவாமி&மனோன்மணி அம்மாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு 29.1.22 அன்று மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்திருவிழா, தெப்பதிருவிழா, திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதில் ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், யாழ்பாணம் வரணீ ஆதினம் பண்டார சந்நிதி, நகராட்சி பொறியாளர் மனோகரன், காலபைரவர் வழிபாட்டு குழு தலைவர் தம்புசாமி உட்பட ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், ஓதுவாமூர்த்தி பரஞ்சோதி முனிவரின் தேவார இன்னிசையும் நடந்தது.

    செம்போடை கடைத்தெருவில் உள்ள கடைகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வேண்டும் என அரசுக்கு வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்: 

    வேதாரண்யம் தாலுகா செம்போடை கடைத்தெருவில் நான்கு தலைமுறையாக உப்பனாற்று ஓரமாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் 
    கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

    இந்த கடைகளை நீர் நிலை புறம்போக்கில் உள்ளதாக பொது பணி துறையினர் 21 நாட்களுக்குள் காலி செய்துகொள்ள நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.

    பல தலைமுறையாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடை வைத்து மளிகை பால், ஹேட்டல், காய்கறி, முடிதிருத்தும் கடை சலவை கடை என பல தரபட்ட கடைகள் இந்த கடைவீதியில் அமைந்துள்ளது.

    இந்த கடை வியாபாரத்தை நம்பி ஆயிரக்கனக்கான குடும்பங்கள் உள்ளது மேலும் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இந்த கடைவீதியை நம்பி நாள்தோறும் பல்வேறு விதமாக காய்கறிகள், கீரைகள், மீன் போன்ற பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

    பல கடைகாரர்கள் வங்கி மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி கடை நடத்தி வருகின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளாக சுனாமி, காஜாபுயல், டெங்கு காய்ச்சல், கொரோனா என பலவகையிலும் வர்த்தகர்கள் பாதிக்கபட்டு மீளமுடியதா நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் திடிரென்று 21 நாளில் கடைகளை அகற்ற சொல்வது வர்த்தகர்களை நிலைகுலைய செய்துள்ளது.

    எனவே கடைகளை அகற்று போதிய கால அவகாசம் வேண்டும் என செம்போடை வர்த்தக சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு முடிவின்படி, இதர 37 மாவட்டங்களிலும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக, நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்காத, மாவட்ட மகளிர் திட்ட அலுவலரைக் கண்டித்து, நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரை ஆற்றினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க தலைவர் குருசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சித்ரா, நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சார செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், அரசு ஊழியர் சங்க வேதாரண்யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நிறைவுரை யாற்றினார்.மாவட்டப் பொருளாளர் அந்துவஞ்சேரல் நன்றியுரையாற்றினார். 
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.இராஜூ, எம்.மேகநாதன், வீ.உதயகுமார், மாவட்ட தணிக்கையாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டு, என்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    வேதாரண்யம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பழமையான முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சிவன், நந்தி, விநாயகர், மரக்கிளைகள் மற்றும் செட்டிப்புலத்தில் எடுக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்புள்ள முதுமக்கள் தாழி ஆகியவை வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து கோட்டாட்சியர் துரைமுருகன் இந்த அரிய பொருள்களை நாகை அருங்காட்சியகத்திற்கு  அனுப்பி வைக்க உத்தரவிட்டார். 

    தொடர்ந்து தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி தாசில்தார் வேதையன் மற்றும் அலுவலர்கள் இந்த முதுமக்கள் தாழி மற்றும் சிலைகளை வேனில் நாகை அருங்காட்சியகத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை முருகன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    பில்லாளியிலிருந்து மத்தளங்குடி வரை செல்லும் சாலை சேதமடைந்து கிடைப்பதை பார்வையிட்டார். 

    தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார். 

    அதைத் தொடர்ந்து பில்லாளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அரசு அறிவித்தபடி 40 கிலோ 650 கிராம் எடை சரியாக அளவீடு செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருமருகல் ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ஒரே நாளில் அடுத்தடுத்து 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைதான மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக உங்களை கைது செய்கிறோம் என கூறினர். அதற்கு தமிழக மீனவர்கள் நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் தான் மீன் பிடிக்கிறோம் என்றனர். இதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சின்னத்துரை உள்பட 9 மீனவர்களையும் கைது செய்து யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

    காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை காரைக்காலை சேர்ந்த வீரமணி (35) என்பவர் தனது படகில் செல்வமணி, ரமேஷ், தீலிபன், நாகையை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், சுரேஷ் , நவின்குமார், பால்மணி, கவியரசன், ஆறுமுகசாமி, கிஷோர், கோகுல் ஆகிய 12 பேருடன் படகில் மீன்பிடிக்க புறப்பட்டார். தமிழக எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது வந்த இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வீரமணி, செல்மணி உள்பட 13 மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் அடுத்தடுத்து 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைதான மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பின்னர் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். மறுபுறம் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்கின்றனர். தொடரும் இந்த அட்டூழிய சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்: 

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கிவைக்கபட்டு இருந்த 3 லட்சம் மதிப்பு 2800 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்பு, அதனை பறிமுதல் செய்த போலீசார் சாராய பதுக்கி வியாபாரம் செய்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்தனர்.

    வீட்டில் பதுக்கி சாராயம் விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 8&ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தங்க பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் நாச்சியார்களுடன், சவுரிராஜப்பெருமாள், தெப்பத்தில் எழுந்தருளினார்.கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி திருக்குளத்தில் மூன்று முறை நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், திருமருகல் ஒன்றியக்குழு தலைவருமான இரா.ராதாகிருட்டிணன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார் மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம் நகராட்சியில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:

    வார்டு 1  அனிஸ்பத்திமா திமுக 483, ராணி அதிமுக 327, வார்டு 2 ரோஸ்னாபேகம் திமுக 363, ரபீயத்துல் பச்ஜீரியா சுயேச்சை 246, வார்டு 3 அம்சவள்ளி திமுக 328, செந்தமிழ்ச்செல்வி அதிமுக 156, வார்டு 4 இமயா திமுக 682, ராதா அதிமுக 560, 

    வார்டு 5 இளவரசி திமுக 512, செல்வி அதிமுக 456, வார்டு 6 பாலசுப்பிரமணியன் திமுக 384, பன்னீர் செல்வம் அதிமுக 290, வார்டு 7 அன்னலெட்சுமி திமுக 630, அம்சலேகா அதிமுக 283, வார்டு 8 மலர்கொடி திமுக 573, சத்யா அதிமுக 361, வார்டு 9 ரம்யாதிமுக 496, ஜெகிலா அதிமுக 278, வார்டு 10 திருக்குமரன் திமுக 522, சீனிவாசன் அதிமுக 384, 

    வார்டு 11 தங்கதுரை காங்கிரஸ் 458, குமரபாரதி அதிமுக 427, வார்டு 12 உமாபுகழேந்தி திமுக 463, புனிதா அதிமுக 391, வார்டு 13 மயில்வாகனன் சுயேட்சை 361, குமார் அதிமுக 266, வார்டு 14 மங்களநாயகி திமுக 479, வசந்தி அதிமுக 419, வார்டு 15 ராஜு திமுக 413, ரமேஷ் அதிமுக 379, வார்டு 16 புகழேந்தி திமுக 669, பாபுராஜன் அதிமுக 310, வார்டு 17 சுப்பிரமணியன் திமுக 520, சத்யா அதிமுக 374, வார்டு 18 நமச்சிவாயம் அதிமுக 419, சுப்பிரமணியன் திமுக368, வார்டு 19, செல்வம் திமுக 522, இளங்கோவன் அதிமுக 450, வார்டு 20 நாகராஜன் திமுக 507, கற்பகம் அதிமுக 297, வார்டு 21 ஆயிஷா ராணி திமுக 582, மணி நஞ்சான அதிமுக 383, மொத்த வார்டு21 திமுக 18, காங்கிரஸ் 1 அதிமுக 1 சுயேட்சை 1 வெற்றிபெற்று உள்ளார்கள்.
    திருமருகல் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப் பூதனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

    இந்த கொள்முதல் நிலையத்தில் அதிக அளவில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல் கொள்முதல் நிலையங் களில் ஏற்படும் தவறுகளை சரி செய்யும்படி உத்தர விட்டுள்ளார்.
     
    அதன் பேரில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலைய அலுவலக உதவியாளர் சுப்புரத்தினம், கொள்முதல் இயக்க துணை மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் தரக்கட்டுப்பாடு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அரசு அறிவித்த படி 40 கிலோ 650 கிராம் எடைக்கு மாறாக 42 கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அளவைவிட அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருந்ததால் அதிகாரிகள் தற்காலிகமாக நெல் கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டனர். 
    மேலும் துறை சார்ந்த தவறுகள் சரி செய்யப்பட்டது கொள்முதல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் விவசாயிகளிடம் கூறிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் கூறிய தாவது:
    மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரி களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

    அந்த ஆய்வின் போது 40 கிலோ 650 கிராம் தான் ஒரு மூட்டை எடை இருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக 42 கிலோ, 42 கிலோ 200 கிராம் என அதிக எடை கொண்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வரிசை படி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் விருப்பப்படி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தவறுகளை தற்போது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். மேலும் ஒரு விவசாயிடம் எந்த அளவிற்கு நெல்லை கொள்முதல் செய்யப்பட வேண்டுமோ அதைவிட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. 
    இதனை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
    ×