என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
     
    இக்கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. 
    சிவனின் மூன்று கண்களில் இருந்து 3 பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இந்த கோவிலில் 3 குளங்கள் விளங்குகின்றன.

    சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகம், அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
     
    பித்ரு லோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம். இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா 
    ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    கொடி மரத்திற்கும், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கொடி ஏற்றி வைத்தார். 

    இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாசி மாத பிறப்பையொட்டி சீர்காழி சட்டநாதர் கோவிலில் கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
     
    திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற தலம் ஆகும் . இக்கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது  முன்னதாக கோசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பசு மாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

    தொடர்ந்து கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
     
    இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் பசுமாடு மற்றும் கன்றுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர் . 

    இதேபோல் மாசி மாத பிறப்பையொட்டி அஸ்திர தேவர் தீர்த்தவாரி நடந்தது . கோவிலில் உள்ள பிரம்மத் தீர்த்தத்தில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம், பால், தயிர் முதலான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 

    தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் 50-ம் ஆண்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருவிக்கிரம நாராயணப் பெருமாள் என்னும் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். உற்சவர் தாடாளன்பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். 

    108 திவ்ய தேசங்களில் 23வது திவ்ய தேசமான இக்கோவிலில் மூலவர் திருவிக்ரம நாராயண பெருமாள் எனும் உலகளந்த பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுதோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே இக்கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் தைமாத கடை வெள்ளியை முன்னிட்டு 50-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், வீட்டில் செல்வவளம் மற்றும் மகிழ்ச்சி பெருகும், அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

    மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் வேண்டும் எனவும். திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நீண்ட நாள் நிலைக்கவும் வேண்டி விளக்கேற்றி மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை கே.கே.சி.சீனுவாச சுவாமி மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோர் செய்திருந்தினர். பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    குத்தாலம் அருகே 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் சப்&இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (வயது 36) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது 2 கிலோ எடையுள்ள 5 பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

    இதையடுத்து, தனிப்படை போலீசார் மணிகண்டனை குத்தாலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    தொடர்ந்து, நிலைய ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    செம்பனார்கோவில் அருகே உள்ள கீழையூரில் கீழையூரில் பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கீழையூர் கிராமத்தில் சப்தமாதா உடனாகிய பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
     
    வடக்கு திசை நோக்கி சப்த மாதாக்களோடு பிடாரி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்டு கன்ம மகரிஷி வழிபட்ட கோவிலாகும். 

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது.
     
    4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹீதிக்குப்பின் கடங்களை வேதவிற்பனர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். 

    அப்போது மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    சீர்காழி வடபாதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி வடபாதி மாரியம்மன் கோவிலில் நடை பெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் அலகுக் காவடி, பறவைக் காவடி எடுத்துவந்து வழிபட்டனர்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள்கள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் கடந்த 2&ம் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் பால்குடம், அலகுக் காவடிகள், பறவைக் காவடிகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64).

    இவர் மயிலாடுதுறை நகராட்சி 19&வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டுகிறார். 

    நேற்று அன்னதாட்சி தொண்டர்களுடன் காலையில் வாக்கு சேகரித்தார். தை கடைசி வெள்ளியான நேற்று காலை அன்னதாட்சி விரதம் இருந்துள்ளார்.

    மதியம் உணவு அருந்திய அவர் மாலை சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட போது மயக்க மடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு 38&வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. 

    நகர பூக்கடை வியபாரிகள் சங்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் விரதமிருந்த காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடங்களை எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.

    மேளவாத்தியங்கள் முழங்க சிவன், பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பூக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
    கொள்ளிடம் பகுதியில் ஆயிரக்கணக்கில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர சரஸ்வதி விளாகம், கொண்ண காட்டுபடுகை, கீரங்குடி, பாலூரான் படுகை, மேலவாடி, கீழவாடி, பனங்காட்டான்குடி, வடரங்கம், நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, முதலைமேடுத்திட்டு, நாணல்படுகை, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 வருட காலங்களில் மயில்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது.

    10 வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் ஒரு மயில் கூட பார்க்க முடியாத நிலை மாறி இன்று கரையோரம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்கள் மற்றும் காடுகள், வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் பல ஆயிரக்கணக்கான மயில்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்ப்பதற்கு வசதியாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியை மயில்கள் பெரிதும் விரும்பி அங்கேயே வாழ்ந்து வருகின்றன.


    ஆற்றின் கரையோரப் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று இறை தேடுகின்றன. பின்னர் மீண்டும் ஆற்றின் கரையோரப் பகுதியில் வந்து தங்கிவிடுகின்றன. 

    வெயில் காலங்களில் மயில் உள்ளிட்ட பல பறவைகள் ஆற்றில் உப்பு நீராக மாறி விடுவதால் குடிநீர் தேடி அலைந்து சிரமத்துக்கு உள்ளாகின்றன.

    மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அதிக எண்ணிக்கையில் பெருகி வரும் மயில்களை சிலர் மறைமுகமாக வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    ஒருபுறத்தில் மயிலை தெய்வமாக நினைத்து வழிபட்டு பாதுகாத்தும் வருகின்றனர். இன்னொரு புறத்தில் சிலரால் மயில்கள் வேட்டையாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

    எனவே எந்த விதத்திலும் மயில்கள் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாக பறந்து திரிவதற்கு வாய்ப்பு அளிக்கவும், அதனை முழுமையாக பாதுகாக்கவும் வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழியில் நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
    சீர்காழி:

    மாணவர்களின் நலனுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வை ஆதரித்தும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் கடைவீதியில் இந்து மக்கள் கட்சியினர் பொது மக்களிடம் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து பெற்றனர். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார். 

    மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் நீ.தனசேகரன், மாவட்ட துணைசெயலாளர் செந்தில், விவசாய அணித்தலைவர் அய்யப்பன், ஒன்றிய துணை செயலாளர் அம்மன் சங்கர், பழையார் பாலா, அசோக், கண்ணன், பாரதிய ஜனதா மீனவரணி செயலாளர் ஸ்டாலின், தேவேந்திரகுல பாசறை அருளழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    சீர்காழியில் நகராட்சி தேர்தலையொட்டி அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற பிப். 19ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு சீர்காழி தனியார் மண்டபத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாசியர் நாராயணன் கலந்து கொண்டு தேர்தலில் பணியாற்றுவது குறித்து விளக்கம் அளித்தார். நகாரட்சி தேர்தல் அதிகாரியான செல்லதுரை, காதர்கான், ஜேம்ஸ் சார்லஸ் கலந்து கொண்டு எவ்வாறு தேர்தல் பணியில் ஈடுவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

    இந்த பயிற்சி வகுப்பில் அரசு ஊழியர்கள் சுமார் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இநிகழ்ச்சியில் சீர்காழி நகராட்சி (பொ) ஆணையர் முகம்மது இப்ராகிம், அரசு மருத்துவர் கனிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
    கொள்ளிடம் அருகே சென்னியநல்லூரில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் அகரஎலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

     இந்த ரேஷன் கடையில் 1300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த கடைக்கு சென்னிய நல்லூர் கிராமத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 
    4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். 

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடரங்கம் கிராமத்திற்கு சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 4 கி.மீ. தூரம் நடந்தும் இரு சக்கர வாகனங்களிலும் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள் வடரங்கம் கிராமத்துக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு தேவையில்லாத கால விரயத்தை சந்தித்து வருகின்றனர். 

    வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 1986-ம் ஆண்டு முதல் இப்படி 4 கிலோ மீட்டர் தூரம் சென்று வடரங்கத்திலுள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னியநல்லூரில் தனியாக ஒரு புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டால் இங்குள்ள கிராம மக்கள் சிரமமின்றி அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் சிரமமின்றி வாங்க முடியும். 

    மேலும் கால விரயத்தையும் தவிர்க்க முடியும். 

    எனவே சென்னியநல்லூர் கிராமத்தில் உள்ள 350 குடும்ப அட்டைதாரர்களின் நலன்கருதி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் 10 ஆண்டு கோரிக்கையான புதிய ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
    ×