என் மலர்
மயிலாடுதுறை
செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கீழப்பள்ளம் கொல்லை பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 21).
இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கீழப்பள்ளம் கொல்லையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கிடாரங்கொண்டான் மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-&இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த போது ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படையினரால் 7-வது வார்டில் நேற்று இரவு ரூபாய் 17,500 பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் குத்தாலம் பேரூராட்சி உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பார்வையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படை அதிகாரி சிவபழனி மற்றும் குத்தாலம் தலைமை காவலர்கள் செல்வேந்திரன், விக்ரம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் 35 வெள்ளைநிற கவர்களில் தலா ரூபாய் 500 வீதம் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.மேலும் அந்த கவர்களுடன் 7-வது வார்டு வாக்காளர் பட்டியலும் கிடந்தது.
இதன் அடிப்படையில் தூக்கி வீசப்பட்ட பணம் ரூபாய் 17,500 பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீர்காழி நகராட்சி வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைக்கப்பட்டதை ஆர்.டி.ஓ ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14,340,பெண் வாக்காளர்கள் 15,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் 36 அமைக்கப்பட்டுள்ளன இதில் 15 வார்டுகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில்24 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மையத்தில் சீர்காழிநகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் ஆர்டிஓ நாராயணன் பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் 36 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நலன் கருதி 36 கேமராகளும் வாக்கு என்ணும் மையத்தில் 45 கேமராக்களும் மொத்தம் 81 ஒரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன பதட்டமான 15 வாக்கு சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் 200 ஆண்டுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி அம்பிகையை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.
திருமணமாகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை பூஜித்து வேண்டிக் கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மாசி மக பெருவிழா
200 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறுகிறது.
இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் வீதிஉலா காட்சி நடைபெற்ற நிலையில் 9-ஆம் நாள் திருவிழாவான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருநடனம் புரிந்தவாறு வந்து தேரில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, தக்கார் இளையராஜா மற்றும் கோவில் ஊழியர்கள்
செய்திருந்தனர்.
இவ்விழாவினை தொடர்ந்து இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குத்தாலம் அருகே கொள்முதல் நிலைய இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது.
இந்நிலையில், திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராம விளையாட்டு மைதானத்தில் இருந்த கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வைத்த நிலையில், அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் தொடங்கியது. இதனால் பழைய இடத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிக தொலைவு உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்துச் செல்வதில் சிரமமும், கூடுதல் செலவும் ஏற்படும் என்றும், சமீபத்தில் தங்கள் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி, பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், கடந்த 15 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்த இடத்தில் நெல் மூட்டைகளுடன் நேற்றுமுதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
விவசாயி தங்க ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மருத்துவர் செல்வராஜ், தங்கமகேஸ்வரன், ஜீவானந்தம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மீண்டும் தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும் எனத் தெரிவித்து, இரவிலும் போராட் டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி பகுதியில் அதிக எண்ணிக்கையில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிக்கு அளவீடு நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆவாஸ் ப்ளஸ்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1587 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள வீடுகள் அனைத்துக்கு அளவீடு செய்யும் பணி புங்கனூர், சட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம், திருவெண்காடு, திருநகரி, மங்கைமடம், திருப்புன்கூர், எடக்குடிவடபாதி உள்ளிட்ட 37 பஞ்சாயத்துக்களிலும் தொடங்கியது.
இந்த பணிகள் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங் கோவன், அருள்மொழி, உதவி பொறியாளர்கள் தெய்வானை, கலைசெல்வன், சிவக்குமார் மற்றும் பணிதள மேற்பார்வையாளர்கள் வேலழகன், பிருந்தா, ஓசைநாயகி, சந்திரசேகரன் புங்கனூர் ஊராட்சி தலைவர் ஜுனைதா பேகம் கமாலுதீன் முன்னிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அளவீடு செய்யப்பட்டது.
இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகளுக்கு அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மாஸ் மார்க்கிங் என்ற பெயரில் வீடு கட்டும் பணிகள் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்டி முடித்து தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மத்திய மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 வீதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கான்கிரீட் வீட்டுக்கும் 104 மூட்டை சிமெண்ட் மற்றும் 120 கிலோ கம்பி வழங்கப்படுகிறது என்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
குத்தாலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அண்ணாமலை, மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தார்.
அப்போது இந்தியாவின் தொன்மை மிக்க ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்ற அண்ணாமலை, அங்கு திருவாவடுதுறை ஆதீனம்
24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
அவருக்கு குருமகா சன்னிதானம் நினைவு பரிசினை வழங்கினார். அப்போது கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் ஊழலின்றி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மயிலாடுதுறையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது.
தமிழகத்துக்கு கூடுதலாக மருத்துவ சீட் கிடைத்துள்ளன. நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி களுக்கு வரும் நிதியில் 85 சதவீதம் மத்திய அரசின் நிதி, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் உள்ளாட்சி மூலமாகத்தான் மக்களை வந்தடைகின்றன.
பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் திட்டங்கள் ஊழல் இல்லாமல் நேரடியாக மக்களை வந்தடையும். சட்டசபை தேர்தலின் போது 517 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. 7 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் சுகாதாரமாக இல்லை.
மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி சேர்க்கை குறைந்துள்ளது.
இதனால் நீட் தேர்வை தி.மு.க எதிர்க்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்துக்கு 1650 கூடுதலாக சீட் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கொள்ளிடம் அருகே நான்குவழிச் சாலைக்காக சுடுகாட்டை அகற்றியதால் இறந்தவர்களை சாலையின் நடுவே புதைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம் கிராமத்தில் நடுவே நான்கு வழிச்சாலை காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடுக்காய்மரம் கிராமத்தை சேர்ந்த சம்பந்தம் (78) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
அவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் நான்கு வழிச்சாலையின் நடுவே இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்தனர். இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக
அரசு உடனடியாக கடுக்காய்மரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழையூரில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 405 விவசாயிகள் நகைக் கடன் பெற்றுள்ளனர்.
இதில் 10 விவசாயிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கீழையூர் நடுக்கரை, கிடாரங்கொண்டான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நகைக்கடன் பெற்ற 395 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததோடு, நகை கடன் தள்ளுபடி செய்த நபர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கபாடி.பாண்டியன் தலைமையில் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய நகைக்கடன் அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் திருவாளசுந்தரி, பிரேம்குமார், நித்தியபாரத், சியாமளா ஸ்ரீதர், மேகநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊரடங்கால் முடங்கிப்போன தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருவதால் புத்துயிர் பெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாட்கள் என்று பாராமல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துவருகிறது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கொரோனா பொது முடக்கம் தளர்வுகளுக்கு பிறகு ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கதுடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.
2 ஆண்டு காலத்திற்குள் கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
400 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்டுத்திய பொருட்கள், 1200-ம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.
மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட விடுமுறை நாள்கள் என பாராமல் நாள்தோரும் ஆயிரக்கணக்கானோர், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடற்கரையில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.
இங்கே அபுர்வ காற்றான ஓசன் காற்று காலை, மாலை, என வந்து செல்வதால் சிறப்பு அம்சத்தை பெற்றது. இந்ந தரங்கம்பாடி கடற்கரை என்பது குறிப்பிடதக்கது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு வருகிற 19ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் கமான்டோ படையினரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.
சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து தொடங்கி மேல வீதி, கீழவீதி, சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக போலீசாரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் முடிவடைந்தது.
தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சீர்காழி கோட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிறப்பு காவல் படையினர், கமாண்டோ படையினர், காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பில் பங்குபெற்றனர்.






