என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை நகராட்சியில் 36 இடங்களில் 24 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியாகி உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை என 2 நகராட்சிகள் உள்ளன. இதில் சீர்காழி நகராட்சியில் 24 இடங்களில் தி.மு.க. 11 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், 6 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன.

    மயிலாடுதுறை நகராட்சியில் 36 இடங்களில் 24 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தி.மு.க. 15, கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 1, காங்கிரஸ் 1 மற்றும் அ.தி.மு.க. 6, பா.ம.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    குத்தாலம் பேரூராட்சியில் தபால் வாக்குகளை எண்ணும் போது முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் வழங்கப்பட்டிருந்த 21 தபால் வாக்குகளில் 16 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து இல்லை என ஒரு வாக்கினை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முகவர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 
     
    இதைத்தொடர்ந்து மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன் கோயில் பேரூராட்சிகளுக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
    மயிலாடுதுறை நகராட்சி தபால் ஓட்டுகள் மொத்தம் 38. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 24. திமுக- 6, காங்கிரஸ் 1, பாமக 1, அதிமுக 6.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் மிகவும் மந்தமான நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டது வரும் சூழலில் மயிலாடுதுறை தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.
    குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. மே 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்று தருமபுரம் ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்னவனமுலை நாயகி சமேத 
    உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 

    தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் கடும் தவத்தின் பலனாக பரதமா முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். 

    இதற்கு அடையாளமாக சுவாமி தனது பாதுகைகளையும், கைலாயத்தில் இருந்து தனக்கு நிழலாக வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. 

    இதன்காரணமாகவே இவ்வூர் உத்தாலம் என்றழைக்கப்பட்டு, பின் மருவி குத்தாலம் என ஆனது.

    மேலும், இத்தலத்தில் உத்தால மரமே தலவிருட்சமாக உள்ளது. காசிக்கு இணையான இத்தலத்தில் எழுந்தருளியுள்ள உக்தவேதீஸ்வரரை சூரியபகவான் வழிபட்டதாகவும், இங்கு எழுந்தருளியுள்ள மங்கல சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கும் எனவும், சுந்தரர் தனது சரும நோய் தீர இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை தரிசிக்க உடற்பிணி நீங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. 

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ6ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட குருமகா சந்நிதானம் திருப்பணி வேலைகளை பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம், இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதுன லக்னத்தில் காலை 9 மணியிலிருந்து 10:30-க்குள் நடைபெறும் என அறிவித்தார். நிகழ்ச்சியில் ஆதீனத் தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழி காமிராக்களின் எல்.இ.டி திரை இயங்கவில்லை என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, சுயேட்சை வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது.24 வார்டுகளில் அமைக்கப்பட்டிருந்த 36 வாக்கு சாவடிகளில் பதிவான 36 வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளிக்கு சனிக்கிழமை நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும் அப்பகுதி முழுவதும் 31 கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து நான்கு அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயிலில் உள்ள சில காமிராக்களின் பதிவு அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் ஓடவில்லையாம். 

    இதனை பார்வையிட்டு அறிந்த தேமுதிக வேட்பாளர் ராஜசேகர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் விவரம் கேட்டார். இந்த தகவல் வேகமாக பரவியது. 

    இதனையறிந்த அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர், பாஜக வேட்பாளர்கள், பாமக நகர செயலாளர் சின்னையன், மற்றும் 50&க்கும் மேற்பட்டவர்கள் வாக்குஎண்ணும் மையத்தில் திரண்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தகவல்அறிந்த சீர்காழி டி.எஸ்.பி லாமெக், தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம், வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சிலரை அழைத்து கண்காணிப்பு காமிராக்கள் அனைத்து செயல்பாட்டின் 
    பதிவு திரை உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர். 

    அங்கு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டதிலிருந்து பதிவான சிசிடிவி பதிவுகளை திரையில் ஓடவிட்டு ஓளிபரப்ப செய்து எந்த தவறும் நடைபெறவில்லை எனவும், நான்கு அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கினர்.

    பக்கவாட்டு நுழைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 காமிராக் களின் பதிவுகள் மட்டும் வெளிப்புறம் அமைக்கப் பட்டுள்ள எல்இடி திரையில் தெரியவில்லை. 

    அதற்கு பவர் சப்ளை பிரச்சனையால் திரையில் தெரியவில்லை எனவும், ஆனால் காமிரா பதிவுகள் ஹார்ட் டிஸ்கில் பதிவாகியுள்ளது என விவரம் கூறப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் கலைந்து சென்றனர். 

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இது காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் புதனின் பரிகார ஸ்தலம். சிவனின் 3 கண்களில் இருந்து 3 பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இக்கோவிலில் 3 குளங்கள் விளங்குகின்றன. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகம், அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பித்ருலோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம். இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இக்கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, சுவாமி -அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி- அம்பாள் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி திருத்தேரும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் எழுந்தருளிய தேர் என 3 தேர்கள் நான்கு வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர்.





    சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான தனியார் பஸ் நேற்று இரவு சிதம்பரத்திலிருந்து சீர்காழி வழியாக காரைக்கால் நோக்கி சென்றது. 

    அப்போது சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து திரும்பும்போது 15-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மேல மணக்குடி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (27) மற்றும் சீர்காழி பகுதியை சேர்ந்த டிரைவர் பத்மநாபன் (20) இருவரையும் அடித்து உதைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சபரிநாதன், பத்மநாபன் இருவரும் சீர்காழி போலீசில் புகார் செய்தனர். 

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    சீர்காழி அருகே பாய்லர் வெடித்து 2 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சாலை தற்காலிகமாக இயங்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மீன் எண்ணை, மீன் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 

    இந்த தொழிற்சாலையில் நீராவி கொதிகலன் வெடித்து சிதறியதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரன், பல்ஜித்ஓரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ரகுபதி, மாரிதாஸ், ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, எஸ்.பி. சுகுணாசிங் தொழிற்சாலையை ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரித்தனர். 

    அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா சம்பவ இடத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

    விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தனியார் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். அதுவரை தற்காலிகமாக தொழிற்சாலை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள், உடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மற்ற தொழிலாளர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    அப்போது சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் சண்முகம், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தனர்.
    டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்க செல்லாததால் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்புப்படைந்துள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகளிலும், 300 பைபர் படகுகளிலும், 250 நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். 

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் பழையாறு துறைமுகத்தில் இயங்கி வரும் பங்கில் மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசல் விலை, தனியார் பங்கைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இதனை கண்டிக்கும் வகையில் பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

    இந்த நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முன்னேற்ற சங்க தலைவர் மதுரைவீரன் தலைமை தாங்கினார். மீனவ பிரதிநிதிகள் சுதர்மன், மணிவாசகம், செல்வம், நக்கீரன் உள்ளிட்ட விசைப்படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தின்போது தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், டீசல் விலை உயர்வை குறைக்கும் வரை தொடர்ந்து மீன்பிடிக்க செல்வதை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
    கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
    சீர்காழி: 

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம். 

    சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. 

    இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி: 

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம். 

    சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. 

    இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் 31 கண்காணிப்பு காமிரா பொருத்தி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி நகர் மன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. 24 வார்டுகளில் 36 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவு நிலவரப்படி சீர்காழி நகராட்சி தேர்தலில் 67.54 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணிக்கு மேல் சில வாக்காளர்கள் வாக்களிக்க மையத்திற்கு வந்தனர். ஆனால் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் அவர்கள் வாக்களிக்க இயலவில்லை. அதனால் வாக்குப் பதிவுக்கு மையத்தில் அந்த வாக்காளர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் சீர்காழி நகர மன்றத் தேர்தல் நடைபெற்ற 24 வார்டுகளிலும் கொரோனா தொற்றாளர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க வில்லை.

    இதனிடையே 6 மணிக்கு மேல் 24 வார்டுகளில் உள்ள 36 வாக்குப் பெட்டிகளும் வட்டார தேர்தல் பார்வையாளர் நாராயணன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காதர் கான், செல்லதுரை, சார்லஸ் மற்றும் பாலசுப்பிரமணியன் தேர்தல் பணியாளர்கள் ராஜ கணேஷ், ராஜரத்தினம், உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் 3 மண்டலங்களாக வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இரவு 3 மணி வரை மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு டிஎஸ்பி லாமெக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ள நிலையில் 5168 பேர் வாக்களித்தனர். 78.91 சதவீத வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

     அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் மருதுபாண்டியன் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான மயிலாடுதுறை பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    மதியம் 12.10 மணியளவில் தொழிற்சாலையில் அமைந்துள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் பாய்லர் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா(வயது25), பல்ஜித்ஓரான்(20) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் இதில் பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு பகுதி ரகுபதி(53), பந்தநல்லூர் பகுதி மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த ஜாவித்(29) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.

    3 பேரையும் சக பணியாளர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தொழிற்சாலையில் குவிந்தனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடனடியாக விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமுல்லைவாசல் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பானு சேகர், ஒன்றிய ஆணையர்ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் வரவேற்றார். ஒன்றிய கணக்காளர் கஜேந்திரன் அறிக்கையைப் படித்தார். பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள்.

    அங்குதன் (திமுக) வேட்டங்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முத்தரையர் கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லட்சுமிபாலமுருகன் (திமுக) மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி. சிதம்பரத்திலிருந்து காட்டூர் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.கோட்டையமேடு கிராமத்தில் மக்கள் யாரும் வசிக்காததனால் தனி தீவாக இருந்து வருகிறது. 

    எனவே அங்கு சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியந்துறை ஊராட்சியில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் கோயில் கும்பாபிஷேகம் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். கொள்ளிடத்தில்தனி தாலுகாவாக அமைக்க வேண்டும்.

    மாலினி பூவரசன் (திமுக) திருமுல்லைவாசல் ஊராட்சியில்புதிய பஸ் நிலையம் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாத நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தெரு விளக்குகளுக்குஎல், இ, டி பல்புகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    திருமுல்லைவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.அதனை தடுக்கும் விதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ரீகன் (அதிமுக) ஆரப்பள்ளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவபாலன் (பாமக) கோதண்ட புரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பில் படுகை கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

    பானு சேகர் (காங்) புத்தூரில் இருந்து கொள்ளிடம் வரை சாலையோர தூய்மை பணிகளை அதிகரிக்க வேண்டும். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில் மாதம் ஒருமுறை உறுப்பினர்கள் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தவா கரை கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும்.

    ஒன்றிய ஆணையர். கொள்ளிடம் ஒன்றியத்தில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 847 பயனாளிகள் உள்ளனர் இதில் அனைவருக்கும் வீடு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்றிய குழு தலைவர். கொள்ளிடத்தை மையமாகக்கொண்டு தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகள்ஆனைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், ஆகிய பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொள்ளிடம் ஒன்றியத்தில் இந்த ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அந்த ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து முடிக்கப்படும். மேலும் படிபடியாக அடுத்து ஆண்டு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்படும். கொள்ளிடத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா ராணி. அரசு மருத்துவர் சிவனேசன், ஒன்றிய பொறியாளர் தாரா, வட்டார கல்வி அலுவலர் நாராயணன். மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து நன்றி கூறினார்.
    ×