என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கி.செந்தில்நாதன் (37) இவர் செம்பதனிருப்பு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரா.செல்வராஜ் பட்டா மாற்றம் செய்ய கடந்த 23 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பதிவு செய்துவிட்டு வி.ஏ.ஓ செந்தில்நாதனை அனுகினாராம். அப்போது விஏஓ பட்டா மாற்றம் செய்து தர
ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்வராஜ் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.ஐந்தாயிரம் பணத்தில் ரசாயனப் பொடி தடவி செல்வராஜிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதனை விஏஓ செந்தில்நாதனிடம் வழங்கிட, விவசாயி செல்வராஜ் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது விஏஓ செந்தில்நாதன் சட்டநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
விவசாயி செல்வராஜ் வி ஏ ஓ செந்தில்நாதனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் அப்போது தான் சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற செல்வராஜ் தான் எடுத்து வந்த ரசாயனப் பொடி தடவிய பணத்தை விஏஓ செந்தில்நாதனிடம் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சித்திரைவேலு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், மற்றும் போலீசார் வி.ஏ.ஓ செந்தில்நாதனை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு தனிஅறையில் வைத்து சுமார் 3மணிநேரத்திற்கு மேல் விசாரனை செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதனை கைது செய்து அழைத்துக்கொண்டு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளி தற்கொலையில் திடீர் திருப்பம்&சித்தப்பாவை கொலை செய்ததை போதையில் உளறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45). டீக்கடையில் வேலை பார்த்துவந்த நாகராஜ் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தூக்குமாட்டி இறந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்காமல் நாகராஜின் உடலை 20 தேதி மாலை அடக்கம் செய்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று நாகராஜின் அண்ணன் மகன் கூலித்தொழிலாளியான பாலசிகாமணி (33) குடிபோதையில் தனது சித்தப்பாவை கொன்றது நான்தான் என அப்பகுதியினரிடம் உளறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த தனது சித்தப்பா நாகராஜ் தன்னை திட்டியதால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன்பின்னர் துண்டால் கழுத்தில் சுற்றி ஜன்னலில் கட்டி விட்டதாகவும், அப்போது தானும் குடிபோதையில் இருந்ததாகவும் பாலசிகாமணி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்தையா பொறையார் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் நாகராஜின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர்.
மேலும், பாலசிகாமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புங்கனூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை ஊராட்சிமன்ற தலைவர் ஜூனைதா பேகம் தொடங்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
முகாமில் பொது மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, மற்றும் குழந்தைகள் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி மற்றும் சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் டாக்டர்கள் சம்பத்குமார், ஜாஸ்மின், சித்த மருத்துவர் டாக்டர் பொம்மி, சுகாதார செவிலியர்கள் அருள்ஜோதி, மரகதம் மற்றும் ஆய்வக நுட்பனர் கல்யாணம் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ், வஜீருதீன் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம செயலாளர் சத்தியமூர்த்தி பவன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறையில் மாமனார் பிறந்த நாளை முன்னிட்டு தாய்ப்பாலை தானமாக வழங்கி பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தனது மாமனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தாய்ப்பாலை தானமாக வழங்கி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் ஒரு பெண்.
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அல்லது பிரசவத்தின்போது ஏற்படும் மன உளைச்சலின் காரணமாக தாய்க்கு பால் சுரக்காமல் போவது, பிரசவத்தின் போது தாய் உயிரிழந்து விடுவது ஆகிய காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகக்கூடும்.
இத்தகைய குழந்தைகளுக்கு புட்டிப்பால் வழங்கினால் அக்குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்த மயிலாடுதுறை அறக்கட்டளையின் அறங்காவலரான, 4 மாத குழந்தைக்கு தாயான வினிதா சுதாகர் என்பவர், தனது குழந்தைக்கு தாய்ப்பால் தேவைப்படுவது போன்றே, தாயை இழந்த அல்லது தாயால் பால் தரமுடியாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாய்ப்பாலின் அவசியத்தைப் புரிந்து, தனது மாமனாரும், மயிலாடுதுறை அறக்கட்டளையின் நிறுவனருமான தமிழ்ச்செல்வனின் 67-வது பிறந்த நாளில் தாய்ப்பாலை தானமாக வழங்கி நெகிழ்ச்சி ஏற்படுத்திதியுள்ளார்.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தாய்ப்பால் தானம் விழிப்புணர்வுக்காக 2 லிட்டர் தாய்ப்பாலை, மாவட்ட மருத்துவ அலுவலர் மகேந்திரன், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர், குழந்தைகள் நல மருத்துவர்கள் பாலாஜி, பரத்குமார் முன்னிலையில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதனிடம் தாய்ப்பாலை தானமாக வழங்கினார்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை அறங்காவலர் வழக்கறிஞர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிவனின் மூன்று கண்களில் இருந்து மூன்று பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இந்த கோவிலில் மூன்று குளங்கள் விளங்குகின்றன. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பித்ரு லோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம்.
இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவில் வைரமுத்து சுவாமி வழிபாடு தேர்த்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடந்துகொண்டிருந்தன தொடர்ந்து நேற்று இரவு தெப்போற்சவம் நடைபெற்றது.
முன்னதாக முன்னதாக சந்திரசேகர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகர சுவாமி எழுந்தருளி மகா தீபாராதனை காட்டப்பட்டது அதன்பின்னர் அக்னி தீர்த்த குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தற்போது கண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
சீர்காழி தென்பாதி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் என்னும் அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி பத்து நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சிவராத்திரி உற்சவம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவ கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர்
நாகேஸ்வரமுடையார் கோவில் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் அலகு காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மயான சூறை மார்ச் 1 சிவராத்திரி அன்று நடை பெற உள்ளது.
கொள்ளிடம் அருகே அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே உள்ள கோதண்டபுரம் அரசு உதவிபெறும் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் 117-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ரோட்டரி துணை ஆளுநர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெம்பிள்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிங்.ஆறுமுகம் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான 50 பிளாஸ்டிக் சேர்கள், 200 முகக்கவசங்கள், கணினிக்கு தேவையான பேப்பர் கட்டுகள்வழங்கினார், மரக்கன்றுகள் வழங்கினார்.
இதேபோல் சீர்காழி காமராஜர் வீதியில் டெம்பிள் டவுன் ரோட்டரிசங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைவர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், துரை, ரவிச்சந்திரன், முன்னாள் செயலாளர் துரைராஜ் கலந்துக்கொண்டு 300 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று இந்து புரட்சி முன்னணி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரில் இந்து புரட்சி முன்னணி அமைப்பின் அறிமுக விழா, பொறுப்பாளர் அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், இந்து புரட்சி முன்னணி நிறுவனத் தலைவர் சந்திரகுமார், மாநில பொதுச்செயலாளர் வளசை.பிரியா, பாரதமாதா ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாக்குழு நிறுவனர் ராமலிங்கம், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு எழுது உபகரணங்களையும், பொதுமக்களுக்கு நலஉதவிகளையும் வழங்கினர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் அறநிலையத் துறை சொத்துக்களை பாதுகாக்க சீப் விஜிலன்ஸ் ஆபிசரை நியமிக்க வேண்டும்,
சிலை பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள உலோகச் சிலைகளை உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீர்காழியை நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 1.10.1972-ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக அமைக்கப் பெற்றது. பின்னர் 1979ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீர்காழி நகரின் மக்கள்தொகை 34 ஆயிரத்து 880ஆகும். இதில் ஆண்கள் 17,215. பெண்கள் 17,663 பேர் உள்ளனர். சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.
நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் தி.மு.க.வை சேர்ந்த 11 பேர், அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர், பா.ம.கவை சேர்ந்த 2 பேர், தே.மு.தி.க, ம.தி.மு.க.வில் தலா ஒருவர் மற்றும் சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வரும் மார்ச் 4&ம் தேதி சீர்காழி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே நகர்மன்ற தலைவர் பதவியை பெற 13 உறுப்பினர்கள் தேவையான நிலையில் தனி பெரும்பான்மையில்லாத தி.மு.க மேலும் தேவையான இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவை பெற்று சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவியை பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே திமுக கூட்டணி கட்சியான ம.தி.மு.கவை சேர்ந்த முழுமதி வெற்றி பெற்றுள்ளார். இவர் ம.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மார்கோனி தாயார் ஆவார்.
தி.மு.க தலைமையிடம் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.விற்கு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவியை கேட்டு பெற ம.தி.மு.க தரப்பில் முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது. அவ்வாறு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவி ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் தி.மு.கவின் 11 உறுப்பினர்கள் மற்றும் தேவையான சுயேச்சைகளின் ஆதரவை பெற்று ம.தி.மு.க நகர்மன்ற தலைவர் பதவியை பெற்றிட முனைப்பு காட்டிவருகின்றனர்.
இவ்வாறு சீர்காழி நகர்மன்ற தலைவர் பதவிக்கு தனிபெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காததால் யார் சீர்காழி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு சீர்காழி மக்களிடம் மேலோங்கியுள்ளது.
தற்போது 6 வருடங்களுக்கு பிறகு சீர்காழி நகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் யார் சீர்காழி நகராட்சியை கைப்பற்றபோகிறார்கள் என்ற ஆவல் மக்களிடையே கூடியுள்ளது.
சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 24 வார்டுகளில் 13 பெண்கள் வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தலில் இம்முறை 24 வார்டுகளில் 13 வார்டுகளில் பெண்கள் வெற்றிகனியை அள்ளி சென்றுள்ளனர்.
நடந்து முடிந்த சீர்காழி நகராட்சி தேர்தலில் 24 வார்டுகளில், 2வது வார்டில் ரஹ்மத்நிஷா (சுயே), 3வது வார்டில் கஸ்தூரிபாய் (திமுக), 4வது வார்டில் ரமாமணி (அதிமுக), 5வது வார்டில் கலைச்செல்வி (சுயே), 7 வது வார்டில் நித்யாதேவி (சுயே), 8வது வார்டில் நாகரெத்தனம் (அதிமுக), 10வது வார்டில் சூரியபிரபா (பாமக), 14வது வார்டில் ஜெயந்தி (சுயே), 16வது வார்டில் வள்ளி (திமுக), 17 வது வார்டில் ரம்யா (திமுக), 21வது வார்டில் முழுமதி (மதிமுக), 23வது வார்டில் ரேணுகாதேவி (திமுக), 24வது வார்டில் துர்காபரமேஸ்வரி (திமுக) என மொத்தம் 5 வார்டில் திமுக, 2வார்டில் அதிமுக, 4 வார்டில் சுயேட்சை, தலா 1வார்டில் மதிமுக, பாமக என 13 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்றனர்.
சீர்காழி 14-வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் திரில் வெற்றி பெற்றார்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 14-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் அருணா, தி.மு.க வேட்பாளர் சிவபிரியா, நாம்தமிழர் கட்சி நித்யா, பா.ம.க மைவிழி, மக்கள் நீதி மய்யம் ரேகா, சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி 250 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் சிவபிரியா 249 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்த வார்டில் தபால் வாக்கு 1 செல்லாதவையாக நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
1 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரை, சுயேட்சை வேட்பாளர் வென்றிருப்பது 14-வது வார்டில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகள் திமுக 11 இடங்களிலும், சுயேட்சை 6 இடங்களிலும் வென்றனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14, 340 பெண் வாக்காளர்கள் 15,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். கடந்த 19 தேதி நடந்துமுடிந்த சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 133 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் மொத்தம் 20 ஆயிரத்து 1வாக்கு பதிவாகி 67.54% வாக்குப்பதிவாகின. நகராட்சியில் 24 வார்டுகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் காலை வாக்குகள் என்னும் பணி தொடங்கின.
முன்னதாக சீர்காழி சப்-கலெக்டர் ஜி.நாராயணன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராகிம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காதர் கான், செல்லதுரை, சார்லஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டது. மொத்தம் 46 தபால் வாக்கு பதிவாகின. அதில் 5வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டு 41வாக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.பின்னர் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
அதில் 11வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது.6வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றிபெற்றனர். வார்டுவாரியாக வெற்றிபெற்றவர்களின் விவரம் வருமாறு,
வார்டு 1 (அதிமுக) வெற்றி 1.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) 161 வெற்றி. 2.டேவிட் (திமுக) 149 தோல்வி. வார்டு 2 (சுயேட்சை) வெற்றி
1. ரஹமத்நிஷா (சுயே) 508 வெற்றி. 2.சிராஜூன்னிஷா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 207 தோல்வி. வார்டு 3 (திமுக) வெற்றி. 1.கஸ்தூரிபாஸ் (திமுக) 381 வெற்றி 2.காயத்ரி (அதிமுக) 284 தோல்வி.
வார்டு 4 (அதிமுக) வெற்றி. 1.ரமாமணி (அதிமுக) 228 வெற்றி. 2.விஜயரெங்கன் (வி.சி.க) 214 தோல்வி. வார்டு 5 (சுயேட்சை) வெற்றி. 1.கலைசெல்வி (சுயே) 347 வெற்றி. 2.குணவதி (திமுக) 289 தோல்வி. வார்டு 6 (சுயேட்சை) வெற்றி. 1.பாலமுருகன் (சுயே) 423 வெற்றி. 2.லெட்சுமி (அதிமுக) 310 தோல்வி. வார்டு 7 (சுயேட்சை) வெற்றி. 1.நித்யாதேவி (சுயே) 599 வெற்றி. 2.மஞ்சுளா (காங்) 329 தோல்வி.வார்டு 8 (அதிமுக) வெற்றி. 1.நாகரெத்தினம் (அதிமுக) 232 வெற்றி. 2.தனவள்ளி (திமுக) 193 தோல்வி. வார்டு &9 (திமுக) வெற்றி. 1.தேவதாஸ் (திமுக) 443 வெற்றி. 2.நடராஜன் (சுயே) 150 தோல்வி. வார்டு 10 (பாமக) வெற்றி. 1.சூரியபிரபா (பாமக) 470 வெற்றி. 2.உமாவதி (திமுக) 378 தோல்வி.
வார்டு &11 (சுயேட்சை) வெற்றி. 1.ராஜேஷ் (சுயே) 240 வெற்றி. 2.கோபி (திமுக) 192 தோல்வி. வார்டு 12 (திமுக) வெற்றி. 1.ராமு (திமுக) 239 வெற்றி. 2.பாலகுமரன் (சுயே) 183 தோல்வி. வார்டு 13 (திமுக) வெற்றி. 1.முபாரக்அலி (திமுக) 276 வெற்றி. 2.காவேரி (சுயே) 156 தோல்வி. வார்டு 14 (சுயேட்சை) வெற்றி. 1.ஜெயந்தி (சுயே) 250 வெற்றி. 2.சிவபிரியா (திமுக) 149 தோல்வி. வார்டு &15 (திமுக) வெற்றி. 1.சாமிநாதன் (திமுக) 254 வெற்றி. 2.நடராஜன் (சுயே) 130 தோல்வி. வார்டு 16 (திமுக) வெற்றி. 1.வள்ளி (திமுக) 461 வெற்றி. 2. ஜெயந்தி (அதிமுக) 345 தோல்வி. வார்டு 17 (திமுக) வெற்றி. 1.ரம்யா (திமுக) 640 வெற்றி. 2. பூங்குழலி (அதிமுக) 322 தோல்வி. வார்டு 18 (திமுக) வெற்றி. 1.சுப்பராயன் (திமுக) 443 வெற்றி. 2. நவநீதன் (பாமக) 173 தோல்வி. வார்டு 19 (திமுக) வெற்றி. 1.பாஸ்கரன் (திமுக) 406 வெற்றி. 2. வினோத் (அதிமுக) 314 தோல்வி.
வார்டு 20 (தேமுதிக) வெற்றி. 1.ராஜசேகரன் (தேமுதிக) 466 வெற்றி. 2.மணிவண்ணன் (அதிமுக) 195 தோல்வி. வார்டு 21 (மதிமுக) வெற்றி. 1.முழுமதி (மதிமுக) 402 வெற்றி. 2. அஸ்மாநாச்சியா (சுயே) 175 தோல்வி. வார்டு 22 (பாமக) வெற்றி. 1.வேல்முருகன் (பாமக) 525 வெற்றி. 2.குகன் (திமுக) 296 தோல்வி. வார்டு 23 (திமுக) வெற்றி. 1.ரேணுகாதேவி (திமுக) 434 வெற்றி. 2.நீலா (அதிமுக) 194 தோல்வி. வார்டு 24 (திமுக) வெற்றி. 1.துர்காபரமேஸ்வரி (திமுக) 183 வெற்றி. 2.திரிபுரசுந்தரி (அதிமுக) 154 தோல்வி.






