என் மலர்
மயிலாடுதுறை
திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
மாசி மாத அமாவாசையில் ஆண்டுதோறும் நடைபெறும் மயானக் கொள்ளை உற்சவத்தின் போது பக்தர்களால் வழங்கப்படும் வேகவைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இந்தக் கோவிலில் இந்த ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்ட்டது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாலை கோவிலின் எதிரே அமைந்துள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த சர்க்கரை வள்ளி கிழங்கு, சவாரிகட்ட கிழங்கு, பயறு, உளுந்து, காராமணி பயறு, உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் வாரி இரைக்கும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடந்தது.
இதை உட்கொள்ளும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், பில்லி சூனியம் அகலும் என்பது ஐதீகம். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகம் நடைபெற்றன. முன்னாள் அறங்காவலர் சின்னதுரை, பிரகாஷ், குலதெய்வம் குடும்பதார்கள் கிராமவாசிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி ரம்மாளு (வயது 34). மயிலாடுதுறை அருகே கீழமருதாநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சரத்குமார் (28). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் ரம்மாளுவின் ஆபாச படத்தை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி சரத்குமார் பணம் கேட்டுள்ளார். இதனால் பயந்து போன ரம்மாளு ரூ.70 ஆயிரத்தை சரத்குமார் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மேலும் ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சரத்குமார் பணம் கேட்டுள்ளார். ஆனால் ரம்மாளு பணம் தர மறுத்துள்ளார்.
இந்தநிலையில் ரம்மாளுவின் ஆபாச படங்களை முகநூலில் சரத்குமார் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்மாளு, தமிழக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு வந்துள்ளது.
இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மயிலாடுதுறை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், வெங்கடேசன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரம்மாளுவை மிரட்டி சரத்குமார் பணம் கேட்டதும், அதனைத்தொடர்ந்து முகநூலில் ரம்மாளுவின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரம்மாளுவை மிரட்டி பணம் பறித்ததோடு, பெண்ணின் ஆபாச படத்தை முகநூலில் பதிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக சரத்குமார் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சரத்குமாரை மயிலாடுதுறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் பள்ளி வேன் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்-டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்காக ஆந்தக்குடி, மாப்படுகை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் அரசு பஸ், தனியார் வேன் மூலம் மயிலாடுதுறை நகருக்கு வந்து படித்து செல்கின்றனர்.
அந்தவகையில் மயிலாடுதுறை நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களை பள்ளி முடிந்து ஏற்றிக் கொண்டு வந்த தனியார் வேன் மயிலாடுதுறை வடக்கு சாலிய தெரு வழியாக வேகமாக வந்தபோது பாதாள சாக்கடை உள்ள பகுதியில் நிலை தடுமாறிய போது திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி மாணவ-மாணவிகளுடன் கவிழ்ந்தது.
மாணவர்களின் அலரல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.
இதில் காயம் அடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கே தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். 14 பேர் லேசான காயமடைந்தனர்.
வேனில் வந்த மாணவ, மாணவிகள் கூறுகையில் வேன் வேகமாகவும், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றனர். தகவலறிந்த மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் ராகவன் ஆகியோர் மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பள்ளி வேன் டிரைவர் நீடூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறையில் இருந்து கோடங்குடி வழியாக நெடுமருதூர் கிராமத்துக்கு ஒரே ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கோடங்குடி மார்க்கமாக இயக்கப்படும் இந்த பஸ் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ&மாணவிகள் அவதியடைந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப்படி இயக்கப்படாத அந்த பஸ் கோடங்குடி வந்தபோது சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், மதியம், இரவு என கூடுதலாக ஒரு பஸ்சை இயக்க வேண்டும், தினமும் 5 முறை மயிலாடுதுறை முதல் கோடங்குடி மார்க்கமாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உங்களது கோரிக்கைகள் மேல் அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைக்கப்படும் என்று போலீசார் கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீர்காழி அடுத்த கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடைபெற்றது.
சீர்காழி
சீர்காழி அடுத்த கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடைபெற்றது. கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மணலகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வந்தனர்.
தலைமைஆசிரியை மேகலா தலைமை வகித்து வரவேற்றார்.தொடர்ந்து களப்பயணமாக அருகில் உள்ள அஞ்சலகம், பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். பரிமாற்றத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியை சுமதி செய்திருந்தார்.
முன்னதாக கீராநல்லூர் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை பத்மாவதி, இடைநிலை ஆசிரியை பிரியா ஆகிய இருவரும் மணலகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் சென்று உயர்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீராநல்லூர் பள்ளி வளங்கள், ஊரின் சிறப்புகள் குறித்து விளக்கி கற்பித்தார்கள்.
கோமல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பொறியாளர் சுகுமார் வரவேற்றார். செயலாளர் ரவீந்திரபாரதி, பொருளாளர் இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை ஸ்டூடன்ஸ் விஷன் அகாடமி தலைவர் கல்வியாளர் ராஜாராமன் கருத்தரங்கை நடத்தினார்.
கல்வியாளர் வசந்தி ராஜாராமன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். இதில், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீர்காழியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் அரசு மருத்துவமனை, பேருந்துநிலையம், நகராட்சி வளாகம் ஆகிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் மருதவாணன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
எம்.பன்னீர்செல்வம் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்து குழந்தைக்கு சொட்டுமருந்து வழங்கினார்.சீர்காழி நகர ஆரம்ப சுகாதாரநிலையத்தில் டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம், துணை ஆளுனர் வைத்தியநாதன், செயலாளர் குமார் ஆகியோர் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்தனர்.
சீர்காழி நகராட்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரதாப்குமார் குழந்தைக்கு சொட்டுமருத்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில், திருமுல்லைவாசல், திருவெண்காடு, பூம்புகார், பழையார், கொள்ளிடம் உட்பட சீர்காழி வட்டம் முழுவதும் 110 மையங்கள், 2 நடமாடும் வாகனங்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் வடநாட்டினர் சிலர் தங்கி விவசாய உபகரணங்களான மண்வெட்டி, அரிவாள், கோடாரி உள்ளிட்ட இரும்பு பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் சாலையோரம் தற்காலிக குடில்கள் அமைத்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடமாடும் போலியோ சொட்டு மருந்து வாகனத்துடன் சாலையோரம் அமைக் கப்பட்ட வடநாட்டினர் குடில் பகுதியில் முகாமிட்டு அனைத்து குழைந்தைகளுக்கும் சொட்டு மருந்து செலுத்தினர்.மேலும் முகாமில் சொட்டு மருந்து போடாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள், செவ்வாய்கிழமைகளில் இல்லம் தேடி சென்று சொட் டுமருந்து குழந்தைகளுக்கு இட உள்ளனர்.
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும். இந்த ஆண்டு மயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது.
சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 26 முதல் மார்ச் 1-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் சென்னை கோவை சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தின் மூலம் அஞ்சலி செலுத்த உள்ளனர். விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை கௌரவத் தலைவர் ஏ.ஆர்.சி விசுவநாதன் தலைமை வகித்தார்.
அறங்காவலர்கள் மருத்துவர் செல்வம், சிவலிங்கம், ரவிச்சந்திரன், பாண்டுரங்கன், செந்தில்வேல், ஏ.ஆர்.சி. அசோக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன், பிரிட்டன் தமிழ் பக்தி தலைமை நிர்வாகி லட்சுமிகாந்தன், சென்னை டிஎம் நெட்வொர்க் எக்ஸிக்யூட்டிவ் துணைதலைவர் ரமேஷ், ஹோட்டல் சதாபிஷேகம் நிர்வாக இயக்குனர் குமரன், மயூரநாதர் ஆலய துணை கண்காணிப்பாளர் கணேசன், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சுரன்ஸ் தலைமை நிர்வாகி முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டனர்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினருமான முனைவர் மதிவாணன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
முதல் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கோவை, சென்னை உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாதிரவேளூரில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளதை கட்டுமான தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் சார்பில் மணல் குவாரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டு குவாரி தொடங்கியது.
குவாரி முழுமையாக செயல்படுவதற்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.
மணல் குவாரியிலிருந்து மணல் அள்ளுவதற்கு ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் குவியல் குவிக்கும் பணி, ஆற்றில் எளிதாக கனரக லாரிகள் சென்று மணல் ஏற்றிக்கொண்டு வந்துசெல்லும் வகையில் தற்காலிக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாதிர வேளூரில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி தீவிரமாக ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், குவாரியிலிருந்து தினந்தோறும் எடுத்துச்செல்லப்படும் மணல் சேகரிப்பதற்காக அருகில் உள்ள குன்னம் கிராமத்தில் அரசு விதிமுறைப்படி மணல் கிடங்கு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் மேம்படுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.
பல வருடங்களுக்கு பிறகு கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரி திறக்கப்படுவதால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், கட்டுமான தொழிலை சார்ந்துள்ள பலஆயிரம் குடும்பத்தினர் வாழ்வு மேம்படும் என்பதால் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மணல் தட்டுப்பாடு, கொரோனா தொற்று பரவல் போன்ற காரணங்களால் கடந்த சில வருடங்களாக கட்டுமான தொழில் மிகவும் நலிவடைந்திருந்த நிலையில் அரசின் இந்த முடிவு கட்டுமான தொழிலை சார்ந்துள்ள பலஆயிரம் குடும்பத்தினரின் வாழ்வு மேம்பட வழி பிறந்துள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
அரசு நிர்ணயித்த விலையில் மணல் விற்பனை செய்யப்படுவதை உறுதிசெய்து கண்காணிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே பசுமாடு ஈன்ற இரட்டை தலை கன்று இறந்துள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவரது பசு மாடு நேற்று காலை இரட்டைத் தலையுடன் ஒரு கன்று ஈன்றது.
இதனை பார்த்த மாட்டின் உரிமையாளர் ரவி மற்றும் குடும்பத்தினர் வியப்புடன் பார்த்தனர், பிறந்து சில மணி நேரத்தில் கன்று இறந்ததை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் இரட்டைத் தலையுடன் கூடிய கன்றை பார்க்க ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
பசுமாடு, தான் ஈன்ற கன்று இறந்தது தெரியாமல் கன்றை முட்டி எழுப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டது. இதை பார்த்த மாட்டின் உரிமையாளர் பொது மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கம்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு வழங்கப்பட்ட புதிய 108ஆம்புலன்ஸ் சேவையை எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அவசரகால சிகிச்சைபெறுவதற்காக அவசரகால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது.
அண்மையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்துவசதிகளும் அடங்கிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.
அதில் ஒன்றாக திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு புதிதாக 108ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.
புதிய ஆம்புலன்ஸ் முறையாக திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒப்படைத்து அதன் சேவை தொடங்கும் விழா கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்குதன், மாலினி, மஞ்சரிதேவி, திமுக ஒன்றிய செயலாளர் மலர்விழி, பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மீனவரணி துணை அமைப்பாளர் செல்லப்பன், திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள், சேவிலியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேரழந்தூரில் இலவச மண், நீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலமாக இலவச மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
குத்தாலம் வட்ட வேளாண்மை உதவி இயக்குனர்வெற்றிவேலன் வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் திவ்யபாரதி, வேளாண் உதவி அலுவலர் வேம்பு, ஆய்வக உதவியாளர்கள் புஷ்பராஜ் சத்யமூர்த்தி, ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, முகாமை நடத்தினர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வயல்களில் இருந்து மண் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு பெற்றுக்கொள்ளபட்டது. ஏற்பாடுகளை பவுண்டேஷன் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.






