என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
    X
    பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

    குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

    குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. மே 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்று தருமபுரம் ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்னவனமுலை நாயகி சமேத 
    உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 

    தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் கடும் தவத்தின் பலனாக பரதமா முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். 

    இதற்கு அடையாளமாக சுவாமி தனது பாதுகைகளையும், கைலாயத்தில் இருந்து தனக்கு நிழலாக வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. 

    இதன்காரணமாகவே இவ்வூர் உத்தாலம் என்றழைக்கப்பட்டு, பின் மருவி குத்தாலம் என ஆனது.

    மேலும், இத்தலத்தில் உத்தால மரமே தலவிருட்சமாக உள்ளது. காசிக்கு இணையான இத்தலத்தில் எழுந்தருளியுள்ள உக்தவேதீஸ்வரரை சூரியபகவான் வழிபட்டதாகவும், இங்கு எழுந்தருளியுள்ள மங்கல சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கும் எனவும், சுந்தரர் தனது சரும நோய் தீர இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை தரிசிக்க உடற்பிணி நீங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. 

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ6ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட குருமகா சந்நிதானம் திருப்பணி வேலைகளை பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம், இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதுன லக்னத்தில் காலை 9 மணியிலிருந்து 10:30-க்குள் நடைபெறும் என அறிவித்தார். நிகழ்ச்சியில் ஆதீனத் தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×