என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் லலிதா.
    X
    தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் லலிதா.

    பாய்லர் வெடித்து 2 பேர் பலியான சம்பவம்-தொழிற்சாலை தற்காலிகமாக இயங்க தடை

    சீர்காழி அருகே பாய்லர் வெடித்து 2 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சாலை தற்காலிகமாக இயங்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மீன் எண்ணை, மீன் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 

    இந்த தொழிற்சாலையில் நீராவி கொதிகலன் வெடித்து சிதறியதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரன், பல்ஜித்ஓரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ரகுபதி, மாரிதாஸ், ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, எஸ்.பி. சுகுணாசிங் தொழிற்சாலையை ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரித்தனர். 

    அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா சம்பவ இடத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

    விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தனியார் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். அதுவரை தற்காலிகமாக தொழிற்சாலை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள், உடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மற்ற தொழிலாளர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    அப்போது சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் சண்முகம், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தனர்.
    Next Story
    ×