என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில் மின்சார கம்பி அறுந்து அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விழுந்தது. இது குறித்து கிராம மக்கள் காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நேற்று தேர்தல் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைக்க வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கோவிலூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் முகிலன் (வயது 7) என்ற சிறுவன் தோட்டத்திற்கு சென்றான். அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் சிறுவன் உயிர் இழக்க நேர்ந்ததாக கூறி கிராம மக்கள் நேற்று இரவு தளிஅள்ளி கூட்டு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்களை எடுத்து சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த பகுதியிலேயே நின்றன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74.23 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
பர்கூர்- 79.00%
ஓசூர்-70.21%
கிருஷ்ணகிரி-78.50%
தளி-76.49%
ஊத்தங்கரை-78.30%
வேப்பனஹள்ளி-66.00%
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.
காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 3 1/2 மணி நிலவரப்படி 54.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஊத்தங்கரை - 53
பர்கூர் - 55
கிருஷ்ணகிரி - 61
வேப்பனப்பள்ளி - 53
ஓசூர் - 45
தளி-61
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 5 மணிக்கு அதிவேக காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. காற்றின் வேகத்திற்கு, கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றுக்கு பறந்தன. இதே போல் மின்சார வயர்கள், மின்கம்பங்கள் உடைந்ததால், கிருஷ்ணகிரி நகர் முழுவதும் மாலை 5 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், குடிசை இடிந்து விழுந்ததில் பலியானார்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்னஏரிக்கரை சாலையின் பின்புறம் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷா மசூதியை புதியதாக கட்டி வருகின்றனர். இதனால் புதியதாக கட்டி வரும் மசூதியின் முன்பு இருந்த காலி இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொழுகை செய்ய பெரிய அளவில் குடிசை அமைத்திருந்தனர். இங்கு இஸ்லாமியர்கள் தினமும் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை இங்கு 25க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடித்த சூறாவளிக் காற்றால், இந்த குடிசை இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் வெளியே ஓடிவிட்ட நிலையில், ஜாபர் (வயது 60) என்பவர் குடிசையின் அடியில் சிக்கிக்கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜாபர் பரிதாபமாக இறந்தார்.
பலியான ஜாபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் டீ கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்று வசித்து வந்தார். தற்போது சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குடிசை இடிந்து விழுந்ததில் அவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி அவர், தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில் பிரசாரத்தை முடித்து கொண்டு இரவில் மகேந்திரன் லாட்ஜூல் தங்கியிருந்தார்.
அப்போது திடீரென லாட்ஜிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்கள் 2 பேருடன் வந்தனர். பின்னர் மகேந்திரனிடம், அறையை சோதனையிட உள்ளதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து படுக்கை அறை, குளியல் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை முடிவில் மகேந்திரன், தனது செலவுக்காக வைத்திருந்த ரூ.350 மட்டுமே சிக்கியது. மேற்கொண்டு வேறு பணமோ, பொருட்களோ எதுவும் சிக்கவில்லை.
இதனால் பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஓசூர் அரசனட்டி அமிர்தா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஆர்ஷியா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆர்ஷியா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை ஸ்ரீதர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவியை, குழந்தையுடன் கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அனில் (27) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், ஊத்தங்கரையில் 12 பேரும், பர்கூரில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 15 பேரும், தளியில் 12 பேரும், ஓசூரில் 18 பேரும், வேப்பனப்பள்ளியில் 15 பேரும் என மொத்தம் 86 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதில், ஊத்தங்கரையில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 51 பேரும், பர்கூரில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 269 பேரும் வாக்களிக்க உள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேரும், வேப்பனப்பள்ளியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேரும் வாக்களிக்க உள்ளனர். ஓசூரில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 224 பேரும், தளியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 579 பேர் என மொத்தம் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக 2,258 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஊத்தங்கரையில் 56 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதே போல், பர்கூரில் 70-ம், கிருஷ்ணகிரியில் 98-ம், வேப்பனப்பள்ளியில் 39-ம், ஓசூரில் 120-ம், தளியில் 43-ம் என மொத்தம் 426 பதற்றமான வக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 150-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இன்றும் (திங்கட்கிழமை) இந்த பணி நடக்கும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், சீனிவாசன், கலைவேந்தன், இக்பால் பாஷா, வாஷீம்அகமத், சக்திவேல், மூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்கினர். மேலும், வாகன ஓட்டிகளிடம் முககவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வாகன ஓட்டிகளுக்கு முககவசங்களை சுகாதாரத்துறையினர் வழங்கினார்கள்.






