என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் மாதையன். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு சென்றார்.

    நேற்று காலை மாதையன் வீட்டில் மேல் மாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 150 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கிராமங்களுக்கு விலங்குகள் படையெடுக்காமல் இருக்க வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டிகளிலும் தொடர்ந்து நீர் நிரப்பப்படுகிறது.

    தேன்கனிக்கோட்டை:

    ஓசூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள செயற்கை குட்டைகளில், கோடையை கருத்தில் கொண்டு வனத் துறையினர் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி நிரப்பி வருகின்றனர். அதில் விலங்குகள் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் ஜவளகிரி, தேன்கனிக் கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி வனச்சரகங்கள் யானைகள் நடமாட்டமுள்ள பகுதி. இங்குள்ள காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.

    கோடையில் வனப் பகுதியில் போதிய மழையின்றி வறட்சி ஏற்படும். அப்போது இயற்கை நீருற்று மற்றும் குட்டைகள் வறண்டு, விலங்குகள் நீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு படையெடுக்கும். இதனால் வனத்துறையினர் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் மற்றும் செயற்கை குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்புவது வழக்கம்.

    தற்போது இயற்கை குட்டைகளில் கூட ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. இருந்தாலும் கிராமங்களுக்கு விலங்குகள் படையெடுக்காமல் இருக்க வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டிகளிலும் தொடர்ந்து நீர் நிரப்பப்படுகிறது.

    இதை யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் குடித்து தாகம் தீர்த்து செல்கின்றன. இக்காட்சிகள் வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் உள்ள சாமை ஏரி உள்ளிட்ட இயற்கை குட்டைகளிலும், யானைகள் தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. தொடர்ந்து 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 14-ந் தேதி வரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 55 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

    தற்போது தினமும் தடுப்பூசி போட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசிக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி இருப்பு உள்ள வரையில் தினமும் போடப்பட்டு வருகிறது. இன்று (சனிக்கிழமை) மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னையில் இருந்து வருகின்றன. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    சூளகிரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள எலசமாக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் ராஜேந்திரன் (55) என்பவருடன், மோட்டார் சைக்கிளில் சூளகிரியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், கணேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி கொண்டன. இந்த விபத்தில், கணேஷ், ராஜேந்திரன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேடுபள்ளியை சேர்ந்த அருண்குமார், சந்திரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் கணேஷ் இறந்தார். மற்ற 3 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தளி அருகே ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் நரேஷ்பாபு (வயது 28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 12-ந் தேதி இரவு நரேஷ்பாபு சிக்கன் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நரேஷ்பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 20ந் தேதி தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த உமேஷ் என்பவர் கொலையில் தொடர்புடைய நரேஷ்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த லட்சுமிபதி (26), ஆசிக் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
    கொரோனா வழிகாட்டுதல்களை மீறி ஊர்வலம் நடத்தியதாக பஞ்சாயத்து தலைவர் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை பகுதியில், கிராம தேவதை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.

    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடக்க வில்லை. நடப்பாண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால், திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முன் அனுமதியின்றி பல்லக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதுகுறித்து பாகலூர் கிராம நிர்ராக அலுவலர் பழனிவேலு கொடுத்த புகார்படி, கொரோனா வழிகாட்டுதல்களை மீறி ஊர்வலம் நடத்தியதாக பாகலூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயரமான் உள்பட 60 பேர் மீது, பாகலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதார சூழ்நிலை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு அதில் வருபவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். 773 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. வருகிற 15 நாட்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மையத்திற்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கொரோனா அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டினானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வயது 61 வயது முதியவர், மற்றும் 32, 29, 51 வயதுள்ள கொண்ட பெண்கள், 30 வயது ஆண் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள், அந்தக் குடியிருப்பு பகுதியில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கொரோனா அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி அருகே ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி 3-வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி நடந்து வருகிறது.

    இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மாலை கட்டிடத்தின் 3-வது மாடியில் மேஸ்திரியாக ஒரிசா மாநிலம் கஞ்சன் மாவட்டம் ஜீரபாடி கிராமத்தை சேர்ந்த பீமாபத்ரா(47) மகன் ஜெகாபத்ரா(20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில், அவருக்கு தலை, உடம்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ஓசூரில் தனியார் நிறுவன மேலாளரை பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா அபார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் புஷ்கர் பால்சிங் (வயது 28). இவர் அசோக் லேலண்ட் யூனிட் 2-ல் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ந் தேதி இரவு இவர் சாலையோர கடையில் சாப்பிட நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசினர். பின்னர் புஷ்கர் பால்சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மேலும் 2 வாலிபர்களை வரவழைத்தனர். அவர்கள் 4 பேரும் காரில் புஷ்கர் பால்சிங்கை கடத்தி சென்றனர். தொடர்ந்து 4 பேரும் பணம் கேட்டு புஷ்பர் பால்சிங்கை மிரட்டி உள்ளனர். அவர் பணம் தராததால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் அவரை சரமாரியாக தாக்கினர்.

    ஒரு கட்டத்தில் அவரது செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டு புஷ்கர் பால்சிங்கை, மைசூர்-ஊட்டி சாலையில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். அங்கிருந்து ஓசூர் வந்த புஷ்கர் பால்சிங் நடந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் வாசவி நகரை சேர்ந்த அடீப் ஆரிப் (எ) ரோஷன் (21), பேடரப்பள்ளியை சேர்ந்த யார்ப் (21), பெங்களூரு பொம்மசந்திராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இர்பான் (24), ஜீவா ஆகிய 4 பேரும் புஷ்கர் பால்சிங்கை கடத்தி சென்று பணம் பறித்தது தெரிந்தது. இதையடுத்து ரோஷன், யார்ப், இர்பான் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த ஜீவாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி யிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பாதித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 58 பேரில் 42 பேர் மட்டும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி யிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    குறிப்பாக ஓசூரில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொழில் சாலைகளில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் ஏராளமானோர் வேலைக்கு ஓசூருக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஓசூர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

    ஓசூர் ஜூஜூவாடி சக்தி வேல் நகர்-1, நல்லூர்-1, ஓசூர்-18, அச்செட்டிப்பள்ளி-1, தின்னூர்-1, கெலமங்கலம்-1, வசந்த் நகர்-1, மூக்கண்டப்பள்ளி-3, ராயக்கோட்டை அட்கோ-2 மற்றும் சூளகிரி-2, குருப்பட்டி-1, நாகமங்கலம்-1, ஊத்தங்கரை-2, பர்கூர்-1, போச்சம்பள்ளி-1 என மொத்தம் 58 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் ஓசூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தளியில் பிரபல ரவுடி ஓட, ஓட சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் நரேஷ் (வயது 28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    இவர் நேற்று இரவு சிக்கன் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் தளி பகுதிக்கு வந்தார். அங்குள்ள உருது பள்ளி அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அவர் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரவுடி நரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த நபர்கள் விடாமல் நரேசை ஓட, ஓட விரட்டி சென்று தலையில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் நரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொலையை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் அங்கிருந்து ஓடினார்கள்.

    நரேஷ் இறந்து விட்டதை உறுதி செய்த அந்த நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முரளி மற்றும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட நரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட நரேஷ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் நரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தளியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×