search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் காரில் கடத்தல்- 3 பேர் கைது

    ஓசூரில் தனியார் நிறுவன மேலாளரை பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா அபார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் புஷ்கர் பால்சிங் (வயது 28). இவர் அசோக் லேலண்ட் யூனிட் 2-ல் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ந் தேதி இரவு இவர் சாலையோர கடையில் சாப்பிட நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசினர். பின்னர் புஷ்கர் பால்சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மேலும் 2 வாலிபர்களை வரவழைத்தனர். அவர்கள் 4 பேரும் காரில் புஷ்கர் பால்சிங்கை கடத்தி சென்றனர். தொடர்ந்து 4 பேரும் பணம் கேட்டு புஷ்பர் பால்சிங்கை மிரட்டி உள்ளனர். அவர் பணம் தராததால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் அவரை சரமாரியாக தாக்கினர்.

    ஒரு கட்டத்தில் அவரது செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டு புஷ்கர் பால்சிங்கை, மைசூர்-ஊட்டி சாலையில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். அங்கிருந்து ஓசூர் வந்த புஷ்கர் பால்சிங் நடந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் வாசவி நகரை சேர்ந்த அடீப் ஆரிப் (எ) ரோஷன் (21), பேடரப்பள்ளியை சேர்ந்த யார்ப் (21), பெங்களூரு பொம்மசந்திராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இர்பான் (24), ஜீவா ஆகிய 4 பேரும் புஷ்கர் பால்சிங்கை கடத்தி சென்று பணம் பறித்தது தெரிந்தது. இதையடுத்து ரோஷன், யார்ப், இர்பான் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த ஜீவாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×