என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 10 மணிக்கு மேல் காவேரிப்பட்டணத்தில் சேலம் மெயின் ரோடு, பனகல் தெரு, கோவிந்த செட்டி தெரு அவற்றை இணைக்கும் சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து அத்தியாவசிய தேவை இன்றி சுற்றி திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி, மகாதேவன் மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
    கந்திகுப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் போலீசார் எலத்தகிரி பாறைகோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 23), நாகராஜ் (40), ஜான்பால் (42), ஜேம்ஸ் (52), பிலிப் (63), ஜோசப் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
    சூளகிரி அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராமர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை போலீசார் பொதுப்பணித்துறை குடியிருப்பு பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரியமுத்தூர் ராமசாமி (வயது 30), கொல்லகொட்டாய் திருப்பதி (36), துவாரகாபுரி செந்தில்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    தளி அருகே கோவிலில் ரூ.2 லட்சம் நகை, உண்டியல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் பழைமைவாய்ந்த ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே பீரோவிலிருந்த தங்க நகைகள், தங்கத்தாலி மற்றும் வெள்ளி பொருட்கள், தட்டு, சொம்பு, கிரீடம் (சடாரி), தீர்த்தம் கொடுக்கும் வெள்ளி தம்ளர் ஆகியவற்றை திருடினர். மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் முழுவதையும் திருடியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று காலையில், வழக்கம்போல அர்ச்சகர் நித்திய பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது திருட்டு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி கமலா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). கூலித் தொழிலாளி. உடல்நலக்குறைவால் இருந்த அவர் சம்பவத்தன்று சூளகிரி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே பேக்கரி மாஸ்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 38). இனிப்பு கடையில் மாஸ்டராக உள்ளார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), மணிகண்டன் (21) ஆகிய 2 பேரும் சிவலிங்கத்துடன் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இது குறித்து சிவலிங்கம் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மருத்துவமனையில் சேர்க்காததால் கொரோனா நோயாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார கிராமங்களில், கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று போச்சம்பள்ளி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா அறிகுறியுடன் போச்சம் பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு வெளியே அனுப்பினர். இதை கண்டித்து அந்த நபர் போச்சம்பள்ளி நான்கு சாலை சந்திப்பில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது :

    இங்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கூடுதலாக மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். இங்கு, 45 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் குறைந்த நபர்கள் கிருஷ்ணகிரி, பர்கூரில் உள்ள சிறப்பு முகாம்களில் தான் சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 145 குடும்பங்கள் உள்ளன. இதில், 528 பேர் வசித்து வருகின்றன
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளின் நிலைமை பரிதாபமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் இலங்கை அகதிகள் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 145 குடும்பங்கள் உள்ளன. இதில், 528 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசித்து வருபவர்களில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 32 பேர் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து, இந்த அகதிகள் முகாமினை தடை செய்யப்பட்ட பகுதியாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த முகாமை சேர்ந்தவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது,, புதிய நபர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    முகாமிற்கு செல்லக்கூடிய பகுதிகள் அடைக்கப்பட்டு, போலீசாரும் நுழைவு பகுதியில் கண்காணிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அக்கா, தங்கைகள் 3 பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தங்கைகள் இருவரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், அக்கா ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த இரு வாரங்களில், அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்தனர். மூத்த அக்காவின் மகளான, (38 வயது) தனியார் வங்கி மேலாளர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


    கெலமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலத்தை அடுத்த முகளூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிஎல்லப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பசு மாடுகளை ஜெ.காருப்பள்ளி அருகே உள்ள ஏரியில் மேய்க்க விட்டுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி லட்சுமம்மா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்தீபன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கூலித் தொழிலாளி முனி எல்லப்பா உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
    சூளகிரி அருகே வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை இந்திரா நகரை சேர்ந்தவர் சாமுண்டி (வயது 35). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

    இதனால் மனமுடைந்த சாமுண்டி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாமுண்டி இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் அருண் (21). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருண் தனது தந்தை சஞ்சீவனிடம் பணம் கேட்டார். அப்போது அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த அருண் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×