என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24).
இந்த நிலையில் நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
காரில் சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்தசிகரளபள்ளி அடுத்த திம்மராயன் கொட்டாய் கிராமத்சை சேர்ந்தவர் திம்ம ராயப்பா (வயது 56). இவரது நண்பர் சேகர் (40).
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு 9 மணியளவில் சூளகிரி வனப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக வெடிகளை வைத்திருந்தார்.
அப்போது வனப் பகுதியில் இருட்டாக இருந்ததால் காட்டுப் பன்றிக்கு வைத்த வெடியை திம்மராயப்பா , தெரியாமல் காலால் மிதித்து விட்டார். இதில் வெடி வெடித்ததில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் நண்பர் சேகர், படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து சூளகிரி வனத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று, வெடி வெடித்து பலியான திம்ம ராயப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியால் வேட்டையாட போனவர் பலியான சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து காட்டு 3 யானைகள் வெளியே வந்தன. பின்னர் அந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு திம்மசந்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தது.
பின்னர் நேற்று காலை லிங்கதீரணப்பள்ளி ஏரி பகுதிக்கு அந்த யானைகள் வந்து முகாமிட்டுள்ளன. இதையடுத்து விவசாய நிலங்களுக்கு சென்ற கிராம மக்கள் 3 யானைகள் ஏரியில் முகாமிட்டுள்ளதை பார்த்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து ஏரியில் நின்ற 3 யானைகளை விரட்டினர். அப்போது அங்குள்ள ராகி நிலங்களை காலால் மிதித்து நாசம் செய்து கொண்டு மீண்டும் திம்மசந்திரம் காட்டு பகுதிக்குள் யானைகள் சென்றன. பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னபேட்டு கானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40), விவசாயி. இவருக்கு திருமணமாகி நிலா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சுரேஷ், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்ன பேட்டகாண பள்ளி சேர்ந்த கோவிந்தன் என்பவர் நிலத்தில் நடந்து சென்ற போது அங்கிருந்த மின்வேலியில் சுரேஷ் கால்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தன் தனது நிலதத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் வந்து சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இரவு நேரத்தில் அங்கு நடந்து வந்த சுரேஷ், மின்சார வேலியில் கால்பட்டு பரிதாபமாக பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் மின்வேலி அமைத்த கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம், உத்தனப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






