என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    சந்தன மரம் கடத்தல் வழக்கில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்களை கர்நாடக மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பனப்பள்ளி:

    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் கம்பள புரா ஹரகலதேவி வனப்பகுதியில் மிகப்பெரிய சந்தனமரங்கள் உள்ளது. சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய மலைகள் சிறு குன்றுகள், வனப்பகுதிகள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தன மர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர் மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (வயது28) மல்லப்பா(58) கிருஷ்ணா(28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய நபர்களை கர்நாடக போலீசார் தேடி வருகிறார்கள்.

    கர்நாடக போலீசார் நடத்திய விசாரணையில் சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பலில் சுமார் 12 முதல் 15 பேர், மலைப்பகுதியில் தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகியோரிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல் நத்தம் இருளர் காலனியை சேர்ந்த 5 பேரை சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அவர்களை கர்நாடக போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள 15 பேர் கொண்ட கும்பலில் மேலும் பர்கூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் வேப்பனப்பள்ளிக்கு கைதான மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் கர்நாடக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு உண்டியல் நத்தம் இருளர் காலனிக்கு அழைத்து சென்று, அவர்களது கூட்டாளிகள் இருக்கிறார்களா? என்று கர்நாடக போலீசார் சோதனை செய்தனர்.

    சந்தன மரம் கடத்தல் வழக்கில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்களை கர்நாடக மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி போலீசார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஏனுசோனையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 54), ஜோகிர்பாளையம் கதிர்வேல் (44), வெப்பாலப்பள்ளி வேணு (27), சூளகிரி கே.கே.நகரைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் ஒற்றை யானையை விரட்டினர்.

    தேன்கனிக் கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானை கூட்டம் அடிக்கடி இடம் பெயர்ந்து நொகனூர், மரகட்டா ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை கூட்டம் நொகனூர் கிராமத்தின் அருகில் மின்கம்பங்கள் மீது உரசி மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை மின்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அந்த யானை கூட்டத்தில் இருந்து விலகிய ஒற்றை ஆண் யானை தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரகட்டா கிராமத்தின் சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒற்றை யானை சாலையில் சென்ற பஸ்சை வழிமறித்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளை விரட்டியும் அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த யானையின் அட்டகாசத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் விரட்டினர். வனத்துறையினருக்கே போக்கு காட்டிய ஒற்றை யானை அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சியால் சாலை ஓரத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.

    வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, “இப்பகுதியில் சாலைகளில் அடிக்கடி யானை கூட்டம் வாகனங்களை வழிமறிப்பதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் வனத்துறையினர் இங்கு முகாமிட்டு வனப்பகுதியில் இருந்து வெளிவராதவாறு யானைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றனர்.
    கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆனேக்கல்-தேன்கனிக்கோட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜவளகிரி அருகே சென்ற சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், ராம்நகர், கடுசிவனஅள்ளி பகுதியை சேர்ந்த குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வேன், ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் சரக்கு வேனில் கர்நாடகாவுக்கு கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோபி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    பர்கூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த நபர் குறித்தும், அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை சேர்ந்தவர் நதியா (வயது 32). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்தனர். அவர்கள் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த 2 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடினார்கள். சத்தம் கேட்டு நதியா எழுந்து பார்த்த போது திருடர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நதியா கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேவசமுத்திரம் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாரதியார் நகர் கோவிந்தராஜ் (வயது 38), மணிகண்டன் (30), அம்பேத்கர் நகர் கரிமுல்லா (22), லட்சுமணன் (31), வடிவேல் (42), ராஜசேகர் (45) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    பேரிகை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பேரிகை அருகே முகுலப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 47), விவசாயி. சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்ள டிராக்டர் ஓட்டிச்சென்றார். வழியில், ஒரு பள்ளத்தில் டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் நாராயணப்பா டிராக்டருக்கு அடியில் மாட்டிக்கொண்டும், அதில் இணைக்கப்பட்டிருந்த இரும்புக்கலப்பை அவரது மார்பு பகுதியில் குத்தியதாலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பர்கூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40), கூலித் தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷத்தை குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபலன் அளிக்காமல் காமாட்சி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது . இந்த திடீர் மழையால் சாலை ஓரங்களில் மழை வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடித்து வந்தது.

    நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் கிருஷ்ணகிரியில் பல இடங்களில் மழைதண்ணீர் தேங்கி நின்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை தண்ணீரில் நடந்து சென்றனர்.

    பள்ளியில் தேங்கிய மழை தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கிருஷ்ணகிரி- 125. 2
    ஊத்தங்கரை- 42.4
    போச்சம்பள்ளி- 16.6.
    பர்கூர்- 22.2
    தேன்கனிக்கோட்டை- 20.4
    ஓசூர்- 10.5

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 278.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 23.2 மில்லி மீட்டர் பதிவானது.
    குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    மராட்டிய மாநிலம் பம்ராக்கட் பகுதியை சேர்ந்தவர் விஜய் பிரேம் (வயது 26). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் தங்கி அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் தன்னுடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அமீர் ஆசாத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புளியரசிமேடு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜய்பிரேம், முகமது அமீர் ஆசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் பிரேம் இறந்தார். முகமது அமீர் ஆசாத் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள நடுஜோகிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தனியார் நிறுவன காவலாளி. கடன் பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×