என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே சின்ன எலசகிரி அனுமந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வளர்மதி (வயது 59). சம்பவத்தன்று இவர் சின்ன எலசகிரி காமராஜ் காலனி பக்கமாக அரிசி மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து. கண் இமைக்கும் நேரத்தில், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.பி அணை அருகே உள்ள சிறிய மலைக்குன்றில் சிறுத்தை ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகள் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தைகள், மான் போன்ற விலங்குகள் உள்ளன, இவை அவ்வப்போது உணவு தேடி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைவது தொடர் சம்பவமாகவே உள்ளது.

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.பி அணை அருகே உள்ள சிறிய மலைக்குன்றில் சிறுத்தை ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை புலியை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த சிறுத்தை புலி தற்போது இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூசு மலை என்னும் சிறுமலை குன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியே வரும் சிறுத்தை அருகே உள்ள பாஞ்சாலி ஊர் கிராமத்தில் நுழைந்து ஆடு மற்றும் நாய்களை கடித்து இழுத்துச் செல்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை புலி பதுங்கி இருப்பதாக கூறப்படும் கூசுமலைகுன்று அருகே கூண்டு வைத்துள்ளனர். அதில் ஒரு நாய்க்குட்டியை கட்டிவைத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கவில்லை.

    பொதுமக்களில் சிலர் அங்கு சென்று பார்த்த போது கூண்டில் நாய் வைக்கப்பட்டு கதவு திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. வனத்துறை அலுவலர்கள் முறையாக கண்காணிக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி அருகே தலையில் கல்லைப்போட்டு தோட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் அருகே மிட்டபாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது83). இவர் மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மாந்தோப்பில் பல ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பெருமாளின் தம்பி மகன் அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகள் மேய்த்து வந்தார். மேலும் தோட்டத்தில் உள்ள கோழிகளையும் திருடி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காவலாளி பெருமாள் தோட்டத்தின் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தோட்டத்தில் மாடுகள் மேய்க்க கூடாது என செல்வம், அப்பாபுலியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த பெரியப்பாவான பெருமாள் மீது அப்பாபுலி கோபத்தில் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த அப்பாபுலி தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெருமாளை கடுமையாக தாக்கினார். மேலும் பெருமாளின் தலையில் கல்லைப்போட்டு விட்டு அங்கிருந்து தப்பிஓடினார். இதில் படுகாயம் அடைந்த பெருமாளை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக குடிபோதையில் அப்பாபுலி தனது பெரியப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அப்பாபுலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அம்மன் கோவிலில் உண்டியல் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் அருகே சப்பலம்மா கோவில் உள்ளது. மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த கோவில் பூசாரி ராஜாப்பா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, கோவில் உண்டியலில் இருந்து ரூ.30 ஆயிரம், 4 கிராம் தங்க நகை ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ஓசூர் அருகே தோட்ட பராமரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் தோட்ட பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த எல்லப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளத்தின் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    கிருஷ்ணகிரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், விதிகளை முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பித்து உரிமம் பெறுவோர், உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்து கொள்ளக்கூடாது.

    மேலும் அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமைதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். பட்டாசுகளை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகளை ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும்.

    உரிமத்தை அலுவலர்களின் தணிக்கையின் போது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது போன்ற உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விற்பனையாளரின் உரிமைத்தை ரத்து செய்வதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே தக்கட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது மோட்டார் சைக்கிளில் மது கடத்தி வந்த பிலிகுண்டுலு பகுதியை சேர்ந்த ஏசுராஜ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 94 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
    ஓசூர் அருகே கடையில் துளை போட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே பாகலூர் ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் தீபக் (வயது 23), இவர் பாகலூர் பஸ் நிலையம் அருகில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம் போல் கடைக்கு வந்தார். கடையை திறந்த போது கடையின் ஒருபக்கம் சுவரில் துளை போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பகலில் கடையை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரவு நேரத்தில் கடையின் ஒரு பக்க சுவரில் துளை போட்டு கடைக்குள் புகுந்துள்ளனர்.

    பின்னர் கடையில் இருந்த 20 செல்போன்கள் அதாவது ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி விட்டு அந்த துளை வழியாக தப்பி சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த திருட்டு சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், அவர்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த திருட்டு குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்தில் தீபக் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பாகலூர் பஸ் நிலையம் பகுதியில் கடையில் துளை போட்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் மாதேஷ் (வயது 40), இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வயிற்று வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த மாதேஷ், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாதேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவன் படித்த வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, கடந்த 8-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டடது.

    இதேபோல் மேலும் 3 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

    இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவன் படித்த வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் பாரூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது29), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேகர் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேகர் தனது ஆதரவாளர்களுடன் மோகனை தாக்கினர். இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் மோகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், சிவா (25) அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    கிருஷ்ணகிரி:

    கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலையில் ஒரு இடத்திலும், மாலையில் வேறு இடத்திலும் என 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.

    இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×