என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    சூளகிரி அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகே உள்ள கிருஷ்ணகவுனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 34), விவசாயி. சம்பவத்தன்று இவரது தாயார் வெங்கட்டமா (75) என்பவர் வேம்பள்ளி அணை அருகே ஆடுகளை மேய்க்க சென்றார். அந்த பகுதியில் அவர் ஆடுகளை மேய விட்டு விட்டு தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வெங்கட்டமா பையில் வைத்திருந்த ¼ பவுன் தங்க நகையை திருடிச்சென்று விட்டார். இது குறித்து ரங்கசாமி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகரரெட்டி சிலை திருட்டு சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என். கொத்தூர் கிராமத்தில் 2 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இரவு மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு ராஜசேகர ரெட்டியின் சிலை உடைத்து திருடி தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் ராஜசேகர ரெட்டியின் சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து குடிப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து குடிப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ராஜசேகரரெட்டி சிலை திருட்டு சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனாவுக்கு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதற்கிடையே நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 29 பேர் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 42 ஆயிரத்து 25 பேர் குணம் அடைந்தனர். தற்போது 271 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 335 ஆக உள்ளது.
    தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் இருதுகோட்டை திருமாநகரை சேர்ந்த மல்லேஷ் (வயது 35) என்பதும், 403 மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மது பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி சோக்காடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). சம்பவத்தன்று இவர் மனைவியுடன் மொபட்டில் மோரமடுவு கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மற்றொரு மோட்டார்சைக்கிளில் பாலேகுளியை சேர்ந்த முருகன் (24) , பி.மருதேப்பள்ளியை சேர்ந்த தங்கவேல் (21) ஆகியோர் வந்தனர். அவர்கள் ராஜேந்திரன் மீது மோதுவதை போல வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் கேட்டார்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேந்திரனை, முருகனும், தங்கவேலும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் மோரனப்பள்ளி சுவாகத் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியன் (வயது 54). தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து உள்ளே இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்து இளங்கோ சுப்பிரமணியன் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முதல் மகனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராததால் தாய்- தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50 இவரது மனைவி சாந்தாமணி (45), இவர்களுக்கு ராகவேந்திரன் (27) என்ற மகனும். சுரேந்திரன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    முதல் மகன் ராகவேந்திரன், அப்பகுதியில் சுவீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் சுரேந்திரன், திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இளைய மகன், திருப்பூரில் வேலை பார்த்த போது ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் முதல் மகன் ராகவேந்திரனுக்கு திருமண ஏற்பாடுகள் தள்ளிக் கொண்டே போனது. மேலும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுத்ததால் முருகேசனும், சாந்தா மணியும் மன வேதனையில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் முருகேசனும், அவரது மனைவி சாந்தாமணி இருவரும் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையே இன்று காலை கீழ்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு வழியாக சிலர் சென்ற போது, முருகேசனும், சாந்தாமணியும் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கணவன்- மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகலூர் அருகே மின்சார மோட்டாரில் வயர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் அருகே உள்ள ஜி.மங்கலத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 59). விவசாயி. சம்பவத்தன்று கனிமங்கலத்தில் இவரது நிலத்திற்கு அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதியில் இருந்த மின்சார மோட்டார் கேபிள் வயர் 60 மீட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து வஜ்ஜிரவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்தேவனப்பள்ளியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து ஸ்ரீநாத் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் பேலாளம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் ராஜேஷ் (வயது32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
    சிங்காரப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள பொம்மதாசம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மாதேவி (வயது 36) . இவர்கள் ஓசூரில் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வந்தனர். பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த மாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×