என் மலர்
கிருஷ்ணகிரி
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58), இவரது மனைவி சாந்தாமணி (45). இவர்களுக்கு ரவீந்திரன் (28) , சுரேந்திரன் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் சுரேந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். மூத்த மகன் ரவீந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்துள்ளனர். ஆனால் ரவீந்திரனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனது பெற்றோரிடம் , ரவீந்திரன் தகராறு செய்து வந்தார். இதனால் மகன் இப்படி தகராறு செய்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் முருகேசனும், சாந்தாமணியும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர். இதனால் கடந்த 22-ந் தேதி முருகேசனும், சாந்தாமணியும் கீழ்குப்பம் சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தன்னால் தான் தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்று ரவீந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் கடந்த ஒரு வாரமாக மிகுந்த சோகத்துடன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இனி உயிர் வாழ்வதே விட சாவதே மேல் என்று அவர் முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு ரவீந்திரன், கீழ்குப்பம் சுடுகாட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாய்- தந்தை உடல்கள் எரிக்கப்பட்ட இடத்தில் வைத்து ரவீந்திரன் விஷம் குடித்தார். சிறிதுநேரத்தில் மயங்கி அங்கேயே ரவீந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இன்று காலையில் சுடுகாடு பாதை வழியாக சென்ற கிராம மக்கள், ரவீந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரவீந்திரன் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது 34). இவர் பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
இன்று காலை 7-45 அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காடு வந்துகொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை மீறி நிலைதடுமாறி சென்றது.
இதனால் கார் எதிரே உள்ள ரோட்டுக்கு தாறுமாறாக சென்றது. அப்போது பெங்களூரை சேர்ந்த சுமந்த் (வயது 30) காரில் வந்து கொண்டிருந்தார். இதில் 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த கோபி மற்றும் எதிரே மற்றொரு காரில் சென்ற சுமந்த் ஆகியோர் காரின் இடுபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கோபி மற்றும் சுமந்த் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான 2 கார்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






