என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    நல்லம்பள்ளி:

    தொப்பூர் அருகே உள்ள பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அப்போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 20), சந்துரு (19) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா விற்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் குளத்து புதூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60) விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- கள்ளிமந்தயம் பைபாஸ் ரோட்டில் திருமலை கவுண்டன் வலசு அம்மன் கோவில் வளைவு அருகே சென்ற போது தண்டபாணி மீது பின்னால் வந்த கார் மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 

    தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அஞ்செட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்செட்டி அடுத்த கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கொப்பக்கரை வனச்சாலையில் உள்ள ஆலமரத்து வளைவில் வந்த போது ஆட்டோ, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.


    இதையும் படியுங்கள்... 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

    ஓசூரில் பர்னிச்சர் கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மநகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 42). இவர், தின்னூர் பிரகாஷ் நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தீபாவளியையொட்டி கடையில் மும்முரமாக விற்பனை நடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு இவரது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து, பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சொக்கலிங்கம் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கொய்யாப்பழம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேப்பனப்பள்ளி வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்குமார் (வயது23) என்பவர் ஓட்டி வந்தார். உடன் பிரசாந்த் (22) என்பவர் வந்தார். வேப்பனப்பள்ளி அருகே உள்ள போடூர் வனப்பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பிரசாந்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோகன்குமார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஅள்ளியை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 75). இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் இறந்துவிட்டார். இவருக்கு 2 பேத்திகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் மர்ம நபர்கள் தாக்கி இருந்தனர். இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் மூதாட்டி கொலை தொடர்பாக உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த மாது (45) என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மாது மங்கம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    நான், மளிகை கடையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மங்கம்மாளிடம் எனது கணவருக்கு தெரியாமல் பணம் கடன் வாங்கினேன். அவர் கொடுத்த பணத்தை அடிக்கடி திரும்ப கேட்டு வந்தார். அப்போது பணத்தை கொடுக்காவிட்டால் உனது கணவரிடம் பணம் வாங்கியதை கூறி விடுவேன் என்றார். இதனால் கடன் வாங்கியது வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என கருதினேன்.

    இந்தநிலையில் கடந்த 30-ந் இரவு நான் மூதாட்டி வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கி கொன்றேன். பின்னர் டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அங்கிருந்து வந்து விட்டேன். 1-ந் தேதி அக்கம் பக்கத்தினர் மங்கம்மாள் வீட்டில் இருந்து டி.வி. சத்தம் அதிகமாக வந்ததால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது மங்கம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து மாதுவை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
    கடையநல்லூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    தீபாவளி அன்று அவரது வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை திறந்து பார்த்த போது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். உடனே பொதுமக்கள் கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தென்காசி:

    புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகன் (வயது 25). தொழிலாளி. கடந்த 31-ந் தேதி முருகன் தனது மோட்டார் சைக்கிளில் டி.என். புதுக்குடி- அய்யாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சமுத்திர மலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மத்திய அரசு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அவசர செயற்குழு சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஏற்றுமதி யாளர்கள் அவசர தேவையின்றி நூல் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்.

    சில நாட்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது நூல் விலை சீராகிவிடும். நூல் விலை அக்சசரீஸ், ஜாப்ஒர்க் கட்டணங்கள், தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் வெளி நாட்டு வர்த்தகரிடம் ஆடை விலையை உயர்த்தி பெறவேண்டும்.

    உலகம் முழுவதும் இந்த அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே ஆடைக்கு நிச்சயம் விலை உயர்வு கிடைக்கும். மத்திய அரசு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும். 

    பஞ்சு, நூல் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிடவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    ஓசூரில் காரில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 ஆயிரத்து 230 மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த பெங்களூரு ஆடுகோடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×