என் மலர்
கிருஷ்ணகிரி
- வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராம்பள்ளி சவுத்ரி. இவரது மனவைி புல்மாசியா தேவி. இவரது மகள் ஜோட்டி குமாரி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்சில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. இதுகுறித்து பெண்ணின் தாயார் புல்மாசியாதேவி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுல் சவுத்ரி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.
- சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர்.பூசாரிப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர். பூசாரிப்பட்டி-தானம்பட்டி ரோட்டில் சுமார், 350 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த காலங்களில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் இறந்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் பள்ளி, மசூதி, தேவாலயம் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்னைகள் உள்ளிட்டவைகளாலும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து விசாரித்து டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 அதாவது 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
- பல்லாண்ட தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம், அதாவது 60 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வேளாண்மையை விரிவுப்படுத்துவதற்கான அடுத்த நம்பிக்கை தரிசு நிலங்களே. தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக ஆக்கி சாகுபடி பரப்பினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 அதாவது 75 சதவீதம், பழச்செடி தொகுப்புகள் வழங்குவதற்கு தொகுப்பு ஒன்றுக்கு ரூ.150 அதாவது 75 சதவீதம், பல்லாண்ட தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம், அதாவது 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் மா சாகுபடி மேற்கொள்வதற்கு நடவு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை பயன்பெறலாம்.
ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 5 வகையான பழமரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு (மா, கொய்யா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை) கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, இரண்டு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், தங்களுடைய வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், உழவர் செயலி மூலமாகவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 277 மனுக்களை வழங்கினார்கள்.
- 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எம்.சரயு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 277 மனுக்களை வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஊத்தங்கரை ஒன்றியம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் தனது 3 குழந்தைகளும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்தவ உதவி வேண்டி மனு கொடுத்தார். அந்த மனுவின் மீது உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, அந்த குழந்தைகளின் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கினார்.
தொடரந்து குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அரசு பஸ்களில் செல்லும் போது அவர்களுக்கு இலவச பஸ் பயண வசதி வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் சையத் அலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது.
- அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூரில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது அவர் கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கீழ் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது39). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் பலனில்லை. இதனால் மனவருத்ததில் இருந்த ராதாகிருஷ்ணன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி சீபம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (வயது27). இவருக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 5மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமூர்த்தி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதுகுறித்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மகேஷ்வரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் கோபித்து கொண்டு திருமூர்த்தியுடன் குடும்ப நடத்தமாட்ேடன் என்று கூறிவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த திருமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி பொன்னல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் படவேஸ்வரா. இவரது மனைவி லட்சுமி தேவி (வயது21). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. படவேஸ்வராவும், லட்சுமிதேவியும் கடந்த 2வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக மனவேதனையில் இருந்த லட்சுமி தேவி நேற்று திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடங்கள் ஆனநிலையில் லட்சுமி தேவி இறந்த சம்பவம் குறித்து ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.
- வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சூடபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது52). பெயிண்டரான இவர் வேலைக்காக கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை பழையபேட்டையில் நிறுத்திவிட்டு ஒரு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்துபார்த்தபோது வண்டியை காணவில்லை. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யகுமார் (22). இவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சாப்பிட சென்றார். வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ெதரிவித்தார். அடுத்தடுத்த கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தருமபுரி மாவட்டம் கொங்குவேம்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள், அரூர் அருகே மதியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து 2 இடங்களில் திருடியது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 சிறுவர்களை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், பிரேம்குமாரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர்.
- அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
- மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத் துவமனையில் தீவிர சிகிச் சைப் பிரிவு விரிவாக்க பணியை உடனடியாக தொடங்கக்கோரி ஊத்தங்கரை சுற்றுவட்டார பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்க பணிக்கு ரூ.23.75 கோடி பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கி ஒரு வருட காலம் ஆகியும் பணிகளை துவங்காமல், இடத்தை தேர்வு செய்யாமல் மெத்தனமாக உள்ள, அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மேலும், அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய தனியார் பள்ளி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காட்டேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர், ஜெயலட்சுமி, பூபதி ஆகியோர் தலைமையில், ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார்.
- நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை பா.ஜனதா மட்டுமே ஏற்படுத்தும் என பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க., என்ற கட்சியை தொடங்கினார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தது போல இந்தியாவையும் திறமையுடன் ஆட்சி செய்வார். இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான்.
அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அவரது கருத்தை நாங்கள் ஏற்கிறோம். பிரதமர் மோடி உலக தலைவர்கள் போற்றும் அளவுக்கு சிறப்பான ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார், கலாசாரத்தை எங்கும் பேசி நம்மை தொடர்ந்து பெருமை படுத்துகிறார்.
பா.ஜனதா அரசு கடந்த, 9 ஆண்டுகளில் என்ன செய்தது எனக்கேட்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த காலக்கட்டத்திற்கு முன்பு 18 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது என்ன செய்தது என்று கூறட்டும். நீட் தேர்வை அப்போது எதிர்க்காமல் இப்போது விலக்கு ஏற்படுத்துவோம் என கூறி வருகின்றனர். கடந்த, 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செய்தோம் என தி.மு.க., வினர் கூறுவது வெட்ககேடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுதானியத்தின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுதானிய திருவிழா கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியதாவது:-
ஐ.நா.சபை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகளை பொதுமக்களிடமும், இளைய தலைமுறையினரிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறுதானிய கண்காட்சி நடத்தப்படுகிறது.
சிறுதானியத்தின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நமது பாரம்பரியத்தை போற்றும் வகையில் நம் முன்னோர்கள் சிறுதானிய உணவுகையை உட்கொண்டு வந்தனர். கருவுற்ற தாய்மார்களும் இந்த உணவுகளை உட்கொண்டால் கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், வளர்ந்து வரும் சந்ததியினருக்கு பாரம்பரிய உணவு குறித்தும், அவற்றின் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறவேண்டும்.
பொதுமக்கள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்நாள் முழுவதும் சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் இதில், மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமண்டல மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், பையூர் அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் சிவகுமார், ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், டாக்டர் சண்முகவேலு, அரிமா சங்க முன்னாள் கவர்னர் ரவிவர்மா மற்றும் ஞானசேகரன் ஒய்.வி.எஸ்.ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள், தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
- இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி,
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. தங்கக் கவச அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.
இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோயில் மற்றும் சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது
- இன்று காலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர் மன்ற தலைவர் பரிதாநவாப் ஆகியோர் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி,
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வரவேற்கும் விதமாக இன்று காலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர் மன்ற தலைவர் பரிதாநவாப் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் எஸ்.எம்.சி குழுவினர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.






