search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 அதாவது 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
    • பல்லாண்ட தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம், அதாவது 60 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வேளாண்மையை விரிவுப்படுத்துவதற்கான அடுத்த நம்பிக்கை தரிசு நிலங்களே. தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக ஆக்கி சாகுபடி பரப்பினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    இத்திட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 அதாவது 75 சதவீதம், பழச்செடி தொகுப்புகள் வழங்குவதற்கு தொகுப்பு ஒன்றுக்கு ரூ.150 அதாவது 75 சதவீதம், பல்லாண்ட தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம், அதாவது 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

    பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் மா சாகுபடி மேற்கொள்வதற்கு நடவு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை பயன்பெறலாம்.

    ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 5 வகையான பழமரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு (மா, கொய்யா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை) கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, இரண்டு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், தங்களுடைய வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், உழவர் செயலி மூலமாகவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×