என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதையடுத்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் முத்து பெருமாள், மாநில தூதுவர் அருள்மணி, தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் கேபில் குமார், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சந்தோஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், காடுகெம்பத்பள்ளியில் ரூ.11.50 கோடி மதிப்பில் 5 உயர் மட்ட பாலங்களின் கட்டுமான பணிகளையும், ரூ.12.50 கோடி மதிப்பில் 15 தார்சாலைகள் வலுப்படுத்தும் பணிகளையும், பாகூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.23.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். ஓசூர் பிரகாஷ் எம்.எல்.ஏ, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சேவகானப்பள்ளி ஊராட்சி, கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் சீனிவாசரெட்டி, வெங்கடசாமி, உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், மாது, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சுபாராணி, தாசில்தார்கள் சுப்பிரமணி, சரவணமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.
    • கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பல்வேறு மலர்கள் மட்டுமின்றி முள்ளங்கி, கேரட், பீட்ருட், பாகற்காய், புடலை, அவரை, துவரை, பீர்க்கன், வெள்ளரியுடன் சேர்த்து தற்போது கோவைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை சீராக பலன் கிடைப்பதால், ஓசூர் பகுதியில் கோவக்காய் சாகுபடி பரப்பினை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில், கோவைக்காயை கிராம மக்கள் சமையலில் தவறாமல் பயன்படுத்தி வந்தனர். மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காயின் பயன்பாடு, தற்போது நகரப்பகுதியிலும் அதிகரித்துள்ளது. இதனால், நுகர்வு இரட்டிப்பாகியுள்ளது.

    இதையடுத்து, ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பாகலூர், கெலவரப்பள்ளி விவசாயிகள் கோவைக்காய் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

    ஒரு முறை நடவு செய்தால், 3 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கிறது. குறைந்தளவு தண்ணீர் போதுமானது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ரத்தம் சுத்திகரிப்பு, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக திகழ்வதால், விற்பனை அதிகரித்து வருகிறது.

    நடவு செய்து 60 நாளில் கொடிகள் நன்கு வளர்ந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடுகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஏக்கருக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

    கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். உள்ளூரிலும் அதிக வரவேற்பு உள்ளது. தற்போது, கிலோவுக்கு ரூ.40 வரை விலை கிடைக்கிறது என்றனர்.

    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி மற்றும் சிலர் தங்களுக்கு தெரிவிக்காமல் எப்படி கோவில் உண்டியல் பணத்தை எண்ணலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் உண்டியல் பணம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி, ராசு வீதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 11-ந் தேதி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் உத்தரவுபடி அக்கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது.

    அப்போது அங்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி மற்றும் சிலர் தங்களுக்கு தெரிவிக்காமல் எப்படி கோவில் உண்டியல் பணத்தை எண்ணலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உண்டியல் பணம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அளித்த புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    • விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளை ஞர்களது பணியை அங்கீ கரிக்கும் பொருட்டு, முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருதில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படுகிறது.

    அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

    அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திடீரென்று அவரை விஷ பூச்சிஒன்று கடித்ததாக தெரிகிறது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது76).

    விவசாயியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அவரை விஷஜந்து ஒன்று கடித்ததாக தெரிகிறது.

    இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். உடனே காந்திமதியை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தலப்பள்ளி மாதன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது27). இவர் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தும் பணியை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இந்த டாஸ்மாக் உள்ளது. தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், இளைஞரணி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • போலீசார் ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையொட்டி உள்ள ஜூஜூவாடி பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் போதைபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வெளிமாநிலத்தில் இருந்து மர்ம நபர்களால் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக-கர்நாடக எல்லை வழியாக வாகனங்களில் கடத்தி கொண்டு வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி., போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையொட்டி உள்ள ஜூஜூவாடி பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பெங்களூருவில் இருந்து கரூருக்கு 43 பேக்குகளில் சுமார் 196 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இந்த காரை கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது28) என்பவர் ஓட்டி வந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 196 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    • தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவராஜ் மகாலில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், நரசிம்மன், செல்வம், சுப்பிரமணி, கோவிந்தன், தனசேகரன், குமரேசன், ரஜினிசெல்வம், அறிஞர், குண.வசந்தரசு, பேரூர் கழக செயலாளர்கள் பாபு சிவக்குமார், தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவருக்கும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்து கூற வேண்டும். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தகுதியுள்ள அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைவரும் இந்த ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம்.

    அதை நிறைவேற்றிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் நல்ல முறையில் படித்து உயருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டத்தையும், கல்விக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.
    • மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 12-வது புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    ஓசூர் மூக்கண்ட பள்ளியில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை, உணவு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

    விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், நடைபெற்ற விழாவில், புத்தக கண்காட்சி தலைவர் அறம் கிருஷ்ணன் வரவேற்றார். இதில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-

    விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு அமைக்கப்படும் என அறிவித்து, முதற்கட்டமாக இந்தாண்டு 10 சட்டமன்ற தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தென்மாவட்டங்களில் உள்ள குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மதுரையில் சுமார் ரூ.150 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை, முதலமைச்சர், நாளை (15-ந் தேதி) காமராஜர் பிறந்த நாளில் திறந்துவைக்க உள்ளார். மாணவர்கள் நல்ல முறையில் படித்து உயருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டத்தையும், கல்விக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல். ஏ.பி.முருகன், ஓசூர் பி.எம்.சிடெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சேது ராமன், துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா வெகுவிமர்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசு வீதியில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பர்கூர் அரசு மருத்துவ–மனையில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்டத்தினையும் டாக்டர் செல்லக் குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவின் போது மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தவர் சேகர், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, மூத்த வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார்,சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியினர் போச்சம்பள்ளி, ஓசூர், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டிணம், நாச்சிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காமராஜரின் உருவச்சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    ×