என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு கல்வி உதவிகளை மாணவர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும்
- மாணவர்கள் நல்ல முறையில் படித்து உயருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டத்தையும், கல்விக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.
- மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 12-வது புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் மூக்கண்ட பள்ளியில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை, உணவு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், நடைபெற்ற விழாவில், புத்தக கண்காட்சி தலைவர் அறம் கிருஷ்ணன் வரவேற்றார். இதில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு அமைக்கப்படும் என அறிவித்து, முதற்கட்டமாக இந்தாண்டு 10 சட்டமன்ற தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்மாவட்டங்களில் உள்ள குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மதுரையில் சுமார் ரூ.150 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, முதலமைச்சர், நாளை (15-ந் தேதி) காமராஜர் பிறந்த நாளில் திறந்துவைக்க உள்ளார். மாணவர்கள் நல்ல முறையில் படித்து உயருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டத்தையும், கல்விக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல். ஏ.பி.முருகன், ஓசூர் பி.எம்.சிடெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சேது ராமன், துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






