என் மலர்
கரூர்
- குளித்தலை பகுதியில் வாகன விதிமுறைகளை மீறியதாக 1,452 பேர் மீது வழக்குப்பதியபட்டுள்ளது
- போலீசார் ரூ.19 லட்சத்தை அபராதமாக விதித்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைகவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது. அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது. சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 1,452 பேர் மீது குளித்தலை போக்குவரத்து போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், அவர்களுக்கு மொத்தம் ரூ.18 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
கரூர்,
கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாட்டுவண்டியில் மணல் திருடி கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மணல் திருடியதாக கரூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 45), காமராஜ் (55) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
- கரூர் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை போனது
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் அருகே உள்ள புலியூர் கணேசாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் புலியூரில் சொந்தமாக வாட்ச் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் புலியூருக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
மேலும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், மூக்குத்தி, வளையம், ஆரம் உள்பட 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கரூர் மாநகர பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்
- நிர்வாகம் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்
கரூர்,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது எண்ணிலடங்காத வகையில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் நகரம் என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தங்களின் குடியிருப்புகளை நோக்கி செல்லும் பொதுமக்கள் முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை தெரு நாய்களின் நடமாட்டம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை மொத்தமாக பிடித்துச் சென்று, திரும்பவும் இதே பகு திகளில் இறக்கி விட்டு செல்லும் நிகழ்வும் தாந்தோணிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கும் இந்த பகுதியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஒட்டுமொத் தமாக தெரு நாய்களின் நடமாட்டத்தையும், அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த தேவை யான அனைத்து ஏற்பா டுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரு கின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
- கல்லடையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியில் சுமார் 1500க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர், தற்பொழுது குருவை சாகுபடி செய்த நெல்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக கல்லடைப்பகுதி மாரியம்மன் கோவிலில் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கல்லடை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு செயல்படாததால், குவித்து வைத்துள்ள நெல் மணிகள் திடீரென பெய்யும் மழையில் நனைய நேரிடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள்
கல்லடையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி தோகைமலை முதல் திருச்சி செல்லும் சாலையில் கல்லடை கைகாட்டி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இப்பகுதி மூன்று ரோடுகள் இணைக்கும் பகுதி என்பதால் மூன்று புறங்களில் இருந்தும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனை அறிந்த தோகைமலை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த டிஎஸ்பிஸ்ரீதர் மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது.
- கரூர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் :
தோட்டக்குறிச்சி சேங்கல்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பூஜையில் பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகள், வாகனங்களின் சாவிகளை கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர். இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் :
புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரிய ரெங்கம்பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள முள்காட்டில் மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கற்கருத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்ராஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, வளர்மதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், குளித்தலை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். வக்கீல். இவரது மனைவி வளர்மதி (வயது 33). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக வளர்மதிக்கு தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லையாம். மேலும் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வளர்மதி தனது குழந்தைகளின் துணிகளை எடுத்து வருவதாக கூறி குளித்தலைக்கு வந்துள்ளார். தனது வீட்டிற்கு வந்த வளர்மதி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, வளர்மதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளித்தலை அருகே மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது
- பந்தயத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் மையிலாடி பகுதியில் ரேக்ளா சோக் காரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாடு மற்றும் குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளிலும், இரட்டை மாடு, பெரிய ஒத்தை மாடு, சிறிய ஒத்தை மாடு, தேன் சிட்டு மாடு என 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் இரட்டை மாடு வண்டி பந்தயத்தில் சென்ற வண்டியில் ஒரு பகுதி சக்கரம் முறிந்து விழுந்த நிலையிலும் தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிய மாட்டு வண்டியும் அதனை ஓட்டிச் சென்ற சாரதியின் முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த சம்பவத்தை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மற்றும் மூன்று பரிசு என 3 பரிசுகள் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது.
போட்டியில் கரூர், திருச்சி, தஞ்சை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியை காண குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான ரேக்ளா ஷோக்தாரிகள், ஆர்வலர்கள் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். போட்டியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- குளித்தலையில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது
- சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்றது
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கூடுதல் முதன்மை நீதிபதியும், குற்றவியல் நடுவர் நீதிபதியுமான பிரகதீஸ்வரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.எஸ்.எம்.சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் என 34 வழக்குகளுக்கு ஒரு கோடியே ரூ.96 லட்சம் தீர்வு காணப்பட்டது.
இதில் வாகன விபத்தில் கணவனை இழந்த மலர்விழிக்கு குளித்தலை வழக்கறிஞர் கார்த்திகேயன் திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன வாகன விபத்து இழப்பீடாக ரூ.55 லட்சம் பெற்றுக் கொடுத்தார். இதற்கான உத்தரவை சார்பு நீதிபதி மன்ற நீதிபதி சண்முகக்கனி வழங்கினார். திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட மேலாளர் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திக், செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞர் குளித்தலை நாகராஜன், நிக்கில்அர்விந்த், ராஜகோபால், மணிவேல் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள், சட்டப் பணிகள் குழு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கரூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மாயம் ஆனார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்.
கரூர் :
கரூர் கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பாரதி (வயது 19). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை பாரதி எழுதி உள்ளார். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கக்கூடும் என பாரதி கவலை அடைந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பாரதி நீண்டநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பாரதி கிடைக்கவில்லை. இதுகுறித்து பாரதியின் பெற்றோர் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்.
- டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
கரூர் தேவகவுண்டனூரை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 46). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வெள்ளியணை தெற்கு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் டீக்கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி திராவிடமணியிடம் இருந்து ரூ.150-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






