என் மலர்tooltip icon

    கரூர்

    • இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழந்தார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழப்பு

    கரூர்.

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 32). டிரைவரான இவர், வெள்ளியணை-ஜெகதாபி சாலை திருமலை நாதன்பட்டி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜோதீஸ்வரன் தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
    • கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது

    கரூர்.

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம்.

    இதே போல் சம்பவத்தன்று வடிவேல் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனவிரக்தியில் வடிவேல் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தோகைமலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • க.பரமத்தி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த விசுவநாதபுரி அருகே தண்ணீர்பந்தல் பிரிவு பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விசுவநாதபுரி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சிலம்பன் மகன் நாகராஜன் என்பவர் மது விற்பனைக்காக 6 பாட்டில்கள் பதுக்கி இருந்தது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், நாகராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்
    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் நடந்தன.

    கரூர்:

    கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில், கலந்து கொண்ட மாணவர்களில் அருண்குமார், செந்தில்ராஜன், ராஜராஜேஸ்வர் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் முதல்நிலை 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சப்-கலெக்டர் சைபுதீன், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


    • சிறுவன் திடீர் பரிதாபமாக இறந்தான்
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அட்லாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவரது மகன் பிரணவ்யோசின் (வயது 8). இவன் முசிறி அருகே திருஈங்கோய்மலை பகுதியில் உள்ள மடத்துப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் குளித்தலை அருகே உள்ள மேல ஆரியம்பட்டியில் வசிக்கும் தனது பாட்டி அமிர்தம் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இச்சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் சிறுவனை பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் நேற்று அதிகாலை இச்சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து உடனடியாக அச்சிறுவனை அவரது உறவினர்கள் பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு அச்சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் பிரணவ்யோசின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்த் குமார் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி் அடைந்துள்ளனர்
    • வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மணவாசி, மகாதானபுரம், லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, சரவணபுரம், வயலுார், பஞ்சப்பட்டி, சிவாயம், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கரும்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு, வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூமி குளிர்ச்சி அடைந்து வெப்பம் தணிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாயனுார் கதவணை அருகில் மீன்கள் விற்பனை மும்முரமாக இருந்தது
    • தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரு வதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து வந்து, வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது. ஜிலேப்பி மீன்கள் கிலோ ஒன்று 150 ரூபாய், கெண்டை மீன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர், குளித்தலை, லாலாப் பேட்டை, திருக்காம்புலியூர், சேங்கல், புலியூர் இடங்களில் இருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர், நேற்ற, 400 கிலோ மீன்கள் விற்கப்பட்டன.


    • தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (45). கூலி தொழிலாளி. இந்தநிலையில் வடிவேலுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வடிவேலு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடிவேலுவின் தாய் ரெங்கம்மாள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரகம்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் அவர்கயிடமிருந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சி அரசக்கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் லோகநாதன் (வயது31). இவர் விராலிப்பட்டி பகுதியில் உள்ள நான்கு ரோடு அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சேகர் மகன் சிவக்குமார்(32) தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி அரசு மதுபானக்கடை அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்து லோகநாதன், சிவக்குமார் ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • கரூரில் நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    கரூர்:

    திண்டுக்கல் மாவட்டம், குட்டைதாவரம் பட்டியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (வயது 52) விவசாயி. இவரது மகள் செல்சியா கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி நர்சிங் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற செல்சியா திரும்பி வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜான் பீட்டர் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது
    • ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நுங்குகளின் வரத்து மிகுதியால் ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் உக்கிரத்தால் தற்போது வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில்: உள்ளூரில் பனை மரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி விடுகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நுங்கு சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். லாரி வாடகை, வெட்டுக் கூலி உள்ளிட்ட செலவினங்களால் நுங்கு விலை தரத்திற்கு ஏற்ப விற்று வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக நுங்குகளை விரும்பி வாங்குகின்றனர் என்றார்.

    • தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
    • பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    கரூர்:

    இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், இன்று நீட் தேர்வு நடக்கிறது.

    அதில் 1,700 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆகவே காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர்.

    செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் எடுத்து வரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    ×