என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மொபட் மோதியதில் கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவர் வீட்டில் இருந்து தியாகதுருகத்திற்கு வார சந்தைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கலையநல்லூர் அருகே உள்ள சர்ச் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த மொபட் மோதியதில் வைத்திலிங்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் மொபட் ஓட்டி வந்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் (55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன்மலை வெதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் தீர்த்தமலை(வயது26) நெல் அறுவடை எந்திர டிரைவர்.

    இவர் நெல் அறுவடை எந்திரத்தை, பூட்டை சாலையில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது, அவருக்கு மின்சாரம் தாக்கியதில் தீர்த்தமலை தூக்கி வீசப்பட்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தீர்த்தமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த தங்கவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தன்னை அடிக்கடி கேலி கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவரை வெட்டி கொன்றதாக கைதான மற்றொரு மாணவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மகன் கோகுல் (வயது 17). இவர் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்தபோது 17 வயது மாணவர் அங்கு வந்தார். பின்னர் கோகுலை விருந்துக்கு செல்லலாம் என்று அழைத்தார். ஆனால் கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறினார். எனினும் கோகுல் அந்த நண்பருடன் சென்றார்.

    இந்த நிலையில் கோகுல் திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறிதுடித்தனர்.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். எனினும் இந்த கொலை வழக்கு தொடர்பாக கோகுலை அழைத்து சென்ற நண்பர் கனகநந்தல் கிராமத்தை சேர்ந்த கலையரசனின் மகன் அருண் ஆகாஷ் (17) என்பவரை கைது செய்தனர்.

    இவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தன்னை அடிக்கடி கேலி கிண்டல் செய்ததால் கோகுலை கொலை செய்ததாக தெரிவித்தார். எனினும் இந்த கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும், ஒருவர் மட்டும் இதனை செய்ய முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமரசபடுத்தி அனுப்பிவைத்தனர். கைதான அருண்ஆகாஷ் கடலூர் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கொள்ளையனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்கிற சன் கதிரவன் (வயது 40) என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருக்கோவிலூர் அருகே மண்டபத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரது வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் திருக்கோவிலூர் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் இவர் மீது திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சன்கதிரவனை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருக்கோவிலூர் போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் ஆண் மற்றும் பெண் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் ஆண் மற்றும் பெண் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இப்பணியிடங்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2022 தேதியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையும், இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    மேலும், பகுதிநேர ஆண் தூய்மைப்பணியாளர் தொகுப்பூதியம் ரூ.3,000 வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.சி மற்றும் எம்.பி.சி. விடுதிகளில் பகுதி நேரதூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் விடுதிகளில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30.5.2022ம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் என்ற அச்சத்துடன் அப்பகுதி பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விநாயகர் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் சாலையோரம் மின் கம்பம் உள்ளது.

    இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சிமெண்ட் காரைகள் மிகவும் சேதமடைந்து மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் என்ற அச்சத்துடன் அப்பகுதி பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.

    அதன்படி காலை  சாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்ச்சுனன் மற்றும் பாஞ்சாலி சாமிகள் தேரில் அமர்த்தப்பட்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள்  61 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேரை தோள்களில் சுமந்தவாறு வீதி உலா நடைபெற்றது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று  தீமிதி திருவிழா நிகழ்ச்சி  நடந்தது.  நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7.5 குதிரைத்திறன் கொண்ட சோலார் மின் மோட்டார் அமைப்பினை ஆய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து விவசாயியிடம் கேட்டறியப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கு மடிநோய், செயற்கை கருவுற்றல் மற்றும் குடற்புழு நீக்கம் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் கிராம ஊராட்சி அளவிலான சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7.5 குதிரைத்திறன் கொண்ட சோலார் மின் மோட்டார் அமைப்பினை ஆய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து விவசாயியிடம் கேட்டறியப்பட்டது.

    தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஆலத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடுதல் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை நட்டார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அரசு நிர்ணயித்துள்ள அளவீட்டில் வீடுகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ.13.38 லட்சம் மதிப்பீட்டில் ஆலத்தூர் புத்தேரிக்குளம் புனரமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குளத்திற்கான நீர் வரத்து, வெளியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ஆலத்தூர் கிராமத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 35 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பில் முள்வேலிச் செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்து, ஆழ்த்துறை கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியையும் பார்வையிட்டு, தரிசு நில சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திட வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மனோகரன், வேளாண் துணை இயக்குநர் சுந்தரம், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) நடராஜன், வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, ஆலத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே வட மாநில தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50) விவசாயி. இவர் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீட்டின் வேலைக்காக கடலூரில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர் 3 பேரை அழைத்து வந்தார்.

    தற்போது வீட்டின் வேலை முடிந்த நிலையில் அந்த 3 பேரும் அவர்கள் சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு செல்வதற்கு தயாராகி ஒருவர் சென்றார். மற்ற 2 பேர் நேற்று கிளம்புவதற்கு இருந்தனர்.

    அப்போது ஒருவர் மட்டும் வந்து ஊருக்கு சென்றார். மற்றொரு நபரை காணவில்லை. அதனால் காணாமல் போன நபரை பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் புதிதாக கட்டியுள்ள வீட்டினுள் ஒரு ஓரமாக பூமிக்கடியில் இருந்து ரத்தம் வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தம் வந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு ரத்த வெள்ளத்தில் உடல் ஒன்று இருந்தது.

    பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாயமான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அதை யாரோ கொன்று புதைத்து உள்ளனர். போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 13-ந்தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

    இது ஒரு இலவச பணியே ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் அவ்வப்பொழுது கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ள www.tnprivatejobs.tn.gov.in. என்ற இணையதளத்தில் CANDIDATE LOGIN வழியாக தங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தியாகதுருகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திக்குள்ளானதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மாரிமுத்து (வயது 37) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று தியாக துருகம் அருகே விருகாவூர் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது நாகலூர் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ×