என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதி தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் ஆண் மற்றும் பெண் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2022 தேதியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையும், இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேலும், பகுதிநேர ஆண் தூய்மைப்பணியாளர் தொகுப்பூதியம் ரூ.3,000 வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.சி மற்றும் எம்.பி.சி. விடுதிகளில் பகுதி நேரதூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் விடுதிகளில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30.5.2022ம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






