என் மலர்
காஞ்சிபுரம்
உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கருவறையில் உள்ள சாமி மணல் லிங்கமாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இப்படி புகழ்பெற்ற இந்த கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.
இந்த மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட பழங்களை தருகிறது. மக்கள்பேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் பழத்தை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தற்போது இந்த மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த மாமரத்தை பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21.05.2021 முதல் இரு முறை என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டால், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கைமுறையாக வருகைப் பதிவு அனுமதிக்கப் பட்டிருந்தது.
தற்போது இந்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக இயக்குநர் காந்தியின் தேசிய ஊரக கடிதத்தில், 16.05.2022 முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 01.05.2022 முதல் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும்போது கையால் எழுதப்படும் வருகைப்பதிவேடு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முழுமையாக என்.எம்.எம்.எஸ் செயலியில் தொழிலாளர்களின் புகைப்படத்துடன் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என்.எம்.எம்.எஸ் செயலியில் வருகை பதிவு மேற்கொள்ள முடியும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் அனைத்தும் என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள விவரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் மணிகண்டன். செம்பரம்பாக்கம் அடுத்த பாப்பன்சத்திரத்தில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மதியம் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1000-த்தை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட உட்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜித்தை (29) கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாடகளாக தொடர்ந்து கோடை மழை கொட்டி தீர்த்தது.
ஆந்திரா பகுதியில் பெய்த கனமழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை முழுவதும் நிரம்பியது.
அங்கிருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது இதேபோல் பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்தும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
இந்த உபரிநீரானது வானியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பாலாற்றில் பாய்ந்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு வந்துள்ளது.
பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடையில் பாலாற்றில் வெள்ளம் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் வெள்ள நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமாக ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கோடை காலத்திலும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ள பெருக்கு காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்:
செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் தனது அக்கா மகன் புகழ் அரசுடன் (வயது12) காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சுங்குவார்சத்திரம் அருகே, குன்னம் பகுதியில் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அஜய், மற்றும் சிறுவன் புகழ் அரசு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் புகழ் அரசு பரிதாபமாக இறந்தான். அஜய் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே வளைவான சாலையில் வேகத் தடை இல்லாததால் அசுர வேகத்தில் இயக்கப்படும் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டி சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 100கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் ஆயிரகணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், உள் நோயாளிகளுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.
அவசர சிகிச்சை பிரிவு ,மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளின் வருகையை உறுதி செய்த அவர், உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் குறைகள் குறித்தும் கேட்டார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும், அவர்களுக்கு திருப்திகரமான சிகிச்சைகள் மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையை விட ஒரு மடங்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விழாவையொட்டி வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவில் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் நீலம் மற்றும் ரோஜா நிற பட்டு உடுத்தி தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி அளித்தார்.
பின்னர் சுவாமி, 73 அடி உயரமுள்ள 7 நிலை கொண்ட பிரமாண்ட தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் குலுங்கியது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதானமும், நீர்மோரும் வழங்கப்பட்டது.
தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மூங்கில் மண்டபம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது.
தேரோட்ட விழாவில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்யபிரியா, எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், வாலாஜாபாத் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் முத்தியால் பேட்டையிலும், உத்திரமேரூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் ஓரிக்கை பகுதியிலும், சென்னை, வேலூர் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஒலிமுகமது பேட்டையிலும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சீபுரம் நகருக்கு வந்தனர்.
தேர் சென்ற வீதிகள் முழுவதும் பாதுகாப்பு முன்ஏற்பாடாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






