என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் ஒன்றியத்தில் பேரணகாவூர் கிராமம் உள்ளது.

    இங்கு இருக்கும் ஒரு விவசாய பண்ணைக்கு, அடிக்கடி வேன்கள் மற்றும் வாகனங்கள் வந்து போயின. இங்கிருந்து அட்டை பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அந்தவிவசாய பண்ணை குடோனில், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது தடை செய்யப்பட்ட குட்கா பாக் கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம்.விசாரணையில், விவசாய பண்ணை குடோனில், குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை தேடி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துரைப்பாக்கம் அருகே திருமண மண்டபத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#arrest

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு நீலாங்கரை வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது கண்ணகி நகரை சேர்ந்த 8 பேர் மண்டபத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தனர். பின்னர் மது பாட்டில்களை மொட்டை மாடியில் இருந்தபடியே ரோட்டில் வீசினார்கள். இதில் பாட்டில்கள் உடைந்து சிதறின.

    இதை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த மணி கண்டன், சதீஷ் ஆகிய இருவரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களை 8 பேரும் சேர்ந்து மதுபாட்டிலால் தாக்கி அடித்து உதைத்தனர்.

    இதையடுத்து இருவரும் ஊருக்குள் சென்று தங்களின் நண்பர்களை அழைத்து வந்தனர். அவர்கள் மண்டபத்துக்கு வந்து தேடிய போது 8 பேரையும் காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷ் நகரை சேர்ந்த மணிகண்டன், சதீஷ், தமிழ்மாறன், தமிழினியன் உள்பட 7 பேரையும், கண்ணகி நகரை சேர்ந்த ஜெகன், குட்டி, விமல், புகழேந்தி, அஜித்குமார், சந்துரு, மணி உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.

    குரோம் பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    சென்னை குரோம் பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (18). அதே பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரகாஷ் (18).

    இவர்கள் இருவரும் ¼ கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி. பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற விஜய்பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் உடல் சிதறி விஜய்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த சம்பவத்தில் மதிவண்ணன் படுகாயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மதிவண்ணனிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பொழிச்சலூர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மீன் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினார்கள். இதனால் காஜா மொய்தீன் அவதிப்பட்டார்.

    மனம் உடைந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு காஜா மொய்தீன், அவரது மனைவி சர்மிளா (30), மகள் பர்தானா (12), மகன் முகமது ஆசிப் (8) ஆகிய 4 பேரும் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குடும்பத்துடன் வி‌ஷம் கலந்து உணவை சாப்பிட்டு விட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.

    அக்கம் பக்கத்தினர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் ஆப்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், 2 குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    துபாயில் இருந்து சென்னைக்கு ஜீன்ஸ்பேண்ட்டில் வளையமாக தொங்கவிட்டு தங்கம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldsmuggling

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர்கள் ஷாஜகான், இஸ்மாயில் ஆகியோரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அணிந்து இருந்த ‘ஜீன்ஸ்’ பேண்ட்டில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக டிசைன் வளையங்கள் தொங்கின.

    அதனை சோதனை செய்தபோது தங்கம் என்பது தெரிந்தது. 2 பேரின் ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்து 300 கிராம் தங்க வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த ஷாஜகான், இஸ்மாயிலிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைப்பையில் மறைத்து வைத்து 337 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். அதனை பறிமுதல் செய்து மலேசியா பெண்ணிடம் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை விமானத்தில் ஷு மற்றும் சூட்கேசில் மறைத்து கடத்திய 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Goldsmuggling

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மத்கானின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அவர் அணிந்து இருந்த ‘ஷு’வை பிரித்து பார்த்த போது ½ கிலோ தங்க கட்டியை வட்டமாக மாற்றி அதில் வெள்ளி மூலாம் பூசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சூட்கேசில் பார்சலாக மறைத்து ½ கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    2 பயணிகளிடமும் மொத்தம் 1.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.33½ லட்சம் ஆகும். தங்க கடத்தல் தொடர்பாக அஸ்மத்கான், பிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடையில் கட்டுகட்டாக அபிதாபி நாட்டு கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரியின் மகள் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு நள்ளிரவு 2 பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதை கண்டதும் அங்கிருந்த காவலாளி அவர்களை தடுத்தார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர். இதுகுறித்து உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37), போரூரை சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் 2 பேரும் எதற்காக மு.க.அழகிரியின் மகள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர் அருகே, தனியார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    திருப்போரூர்:

    மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 19). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக எந்திரம் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் சந்தோஷ், தொழிற்சாலையில் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எந்திரம் பழுதாகி நின்றதால், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்கியதால், அதை பழுதுபார்த்து கொண்டிருந்த தொழிாளி சந்தோஷ், எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், எந்திரத்தில் சிக்கி பலியான தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடித்தது தொடர்பாக அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.

    மேலும் குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக கூடுதலாக ரூ.78 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    மின் திருட்டு சம்பந்தமான புகார்களை 9445857591 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அணுசக்தி மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கதிரியக்க மாசு கட்டுப்பாட்டு திட்டத்தின் படி 3அடுக்கு அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அணுசக்தி மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கதிரியக்க மாசு கட்டுப்பாட்டு திட்டத்தின் படி 3அடுக்கு அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் அவசர நிலை நிர்வாகக்குழுவின் தலைவரும் நிலைய இயக்குனருமான சத்திய நாராயணன் தலைமையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

    அணுமின் நிலையத்தினுள் அணுக்கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக அவசர ஒலி எழுப்பப்பட்டது. இதனால் ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர். அவர்களை கட்டிடத்தின் உள்ளே இருக்கும் படியும் அனைத்து ஜன்னல்களையும் மூடவும் அறிவுறுத்தப்பட்டது.

    காயமடைந்த ஊழியர்களை ஆம்புலன்சில் ஏற்றுவது போன்றும் அனைவருக்கும் அயோடின் மாத்திரை கெடுப்பது போன்றும் நடித்து காண்பிக்கப்பட்டது.பின்னர் அனைவரையும் அவசர வழிகளில் அனுப்பினர்.

    பதட்டம் அடைந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். அவர்கள் வெளியில் வந்த பின்னர் தான் இது ஒத்திகை என்பது தெரிந்தது. பின்னர் கதிரியக்கத்தால் மாசுபட்ட வாகனங்களை ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

    கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்றிரவு மின்சார ரெயில் ஒன்று சென்றது. பரங்கிமலை நிலையம் நெருங்கும் முன்பாக கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் ரெயில் சென்ற போது திடீரென கல் பறந்து வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பயணி சாம்சுந்தர் மீது கல் விழுந்தது.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பரங்கிமலை நிலையத்தில் இறங்கிய அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்ட அவரை உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டையை சேர்ந்த அவர் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி போலீசாரிடம் விளக்கி கூறினார்.

    இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இரவு கல் வீசப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிண்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதி போலீசார் அவர்களை ‘பொறி’ வைத்து தேடி வருகிறார்கள்.

    துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் லாரன்ஸ், தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    ×