என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,624 ஆக அதிகரித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 031 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,624 ஆக அதிகரித்துள்ளது.

    காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் திருகாளிமேடு அருந்ததிநகர் பகுதியில் வசிப்பவர் பூபாலன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக பூபாலன் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த அவர், கடன்தொல்லைக்கு உள்ளானார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட பூபாலன், வீட்டில் தூக்குபோட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில், போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி, போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
    வாலாஜாபாத்,

    வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    போலீஸ் நிலைய பணிகள் பாதிக்காத வகையில் வாலாஜாபாத் இந்திரா நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் செயல்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா அறிவித்துள்ளார்.
    படப்பை அருகே டீ விற்பனையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57). சைக்கிளில் டீ விற்பனை செய்து வருபவர். இவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு திடீரென தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    குவைத்தில் இருந்து சென்னை வந்த டிரைவர் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டபோது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பாலாஜி (வயது 32). குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து குவைத் நாட்டுக்கு சென்றார். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் பாலாஜி நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வளாகத்தில் பரிசோதனை செய்து 15 நாள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் மையம் அமைந்துள்ளது.

    பாலாஜி இந்த கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்தார். இந்த மையத்துக்கு வந்த பாலாஜி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    சிறிது நேரத்தில் தான் தங்கி இருந்த முதல் மாடி கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக கட்டுமான பணி நடந்து வரும் வழியாக கீழே குதித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் பாலாஜி அசைவின்றி கிடந்தார். அவரை மீட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த இளையனார்வேலூரை சேர்ந்தவர் தாட்சிணாமூர்த்தி. இவரது மகன்கள் தினேஷ் (வயது 17). விக்கி (15)., இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் இளையனார்வேலூரில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டிச்சென்றார். இளையனார்வேலூர் குண்டு மதகு அருகே செல்லும்போது பின்னால் வந்த மணல் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.

    இதில் தினேஷ் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தம்பி விக்கி ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்து நடந்த சிறிது நேரத்தில், கல்குவாரி மற்றும் மணல் லாரிகளால் இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது என்று கூறி இளையனார்வேலூர் பொதுமக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.
    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் ஜங்சன் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிய வந்தது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த ராஜா (வயது 30), ஜெகன் (35), சுரேஷ் (33), பார்த்திபன் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
    மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தீனா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியதால் நகராட்சி அதிகாரிகள் தகரத்தை அகற்றினர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், அவர் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியை இரும்பு தகடுகள் அமைத்து தடுப்புகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு வசிக்கும் இதர குடியிருப்புவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவரின் வீட்டின் வாசலை மட்டும் அடைத்து சென்றார்கள்.

    அங்குள்ள ஊழியர்களிடம் தடுப்புகள் அமைக்க வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தும், வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாது வகையில் அடைத்து விட்டார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டில் தடுப்புகளால் அடைக்கப்பட்ட இரும்பு தகரத்தை உடனே அகற்றினர். கொரோனா சிகிச்சை பெற்ற அந்த வீட்டின் நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலம் முடிவதற்கு முன்பே, வெளியில் நடமாடுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்ததால் வீட்டு வாசலை தகடு வைத்து அடைத்ததாகவும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கித்தர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமம் கவரை தெருவில் சாயக்கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவரை விஷவாயு தாக்கியது. அவரை சுனில்குமார் என்பவர் காப்பாற்ற முயன்றார். 2 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். முத்தியால்பேட்டை பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் சாயக்கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய கூறியது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்தார்.

    பின்னர், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
    காஞ்சிபுரம் அருகே குடிபோதையில் நண்பர் என நினைத்து ஆள்மாறி இரும்பு கம்பியால் அடித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 30). இவரது நண்பர் ஜெகன் (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்த போது கணேஷ், ஜெகன் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ், ஜெகனை சராமாரியாக தாக்கியதில் அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த நிலையில், வழக்கமாக தான் படுத்து உறங்கும் ரேஷன் கடை அருகே படுக்காமல் ஜெகன், அங்குள்ள தேவாலயத்தில் படுத்துள்ளார். அப்போது ரேஷன் கடைக்கு குடிபோதையில் வந்த கணேஷ், துணி போர்த்தியபடி தூங்கி கொண்டிருந்த முதியவர் ஒருவரை ஜெகன் என நினைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தார்.

    இதையடுத்து தான் தாக்கியது அதே ஊரை சேர்ந்த எட்டியப்பன் (70) என்பதை அறிந்த அவர், தப்பி ஓடி விட்டார். ஆனால் தாக்கப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான தலைமறைவாக இருந்த கணேசை போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,706 ஆக அதிகரித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 047 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,706 ஆக அதிகரித்துள்ளது.

    ×