என் மலர்
காஞ்சிபுரம்
குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
வாலாஜாபாத்:
நெல்லை மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அனு (21) என்பவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் அனுவுக்கு தெரியவந்தது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார்.
இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அனு பாலமுருகனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அனு தனக்கும், தன் குழந்தைக்கும் பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. வேலைக்கு செல்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு ஒரகடம் வந்தார்.
தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இதை அறிந்து கொண்ட கணவர் பாலமுருகன் புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து சமாதானம் செய்ய முயன்றார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக அறுத்து விட்டு தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். கழுத்து அறுபட்ட அனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக தங்கும் விடுதி காவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பாலியனார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஜாபூர் ராஜ்கார் பகுதியை சேர்ந்தவர் மவுனித்குமார். இவருடைய மகன் அபிநய் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள எம்.சேண்ட் கிரஷரில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இதே கிரஷரில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் (18) என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் அருகில் உள்ள தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தார். அப்போது அபிநய் எந்திர கன்வேயர் பெல்ட்டுக்கு கீழ் உள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த பிரசாந்த் அவரை தூக்க அருகில் சென்ற போது மின்கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று மற்ற தொழிலாளர்களை அழைத்து வந்தார். பின்னர் மின் இணைப்பை துண்டித்து அபிநய்யை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிநய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
படப்பை:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). இவருடைய மனைவி விமலா ராணி (35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 14 வயதில் மகன் உள்ளார். இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர்.
தங்கவேல் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 31 -ந்தேதி தங்கவேலின் தந்தை திருமலையாண்டி (70) மற்றும் சகோதரர் சக்திவேல் (47) ஆகியோர் தங்கவேலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது தங்கவேலின் மனைவி போனை எடுத்து சரியான பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். அதன் பின்னர் சக்திவேலின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தங்கவேலின் தந்தை திருமலையாண்டி, மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.
அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் மகன் தங்கவேல், மருமகள், பேரன் மாயமானதாக தங்கவேலின் தந்தை திருமலையாண்டி புகார் செய்தார். மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கவேலின் மனைவி விமலா ராணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து விமலா ராணியை போலீசார் கைது செய்தனர்.
பின்பு விசாரணையில் விமலா ராணி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
விமலா ராணிக்கும் அவருடைய கணவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவரின் கழுத்தை வெட்டி கொன்று சேலத்தை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜா என்பவருடன் அச்சரப்பாக்கம் அருகே வனப்பகுதியில் உடலை எரித்துள்ளார்.
விமலா ராணிக்கும் சேலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் இந்த கொலை நடந்துள்ளது.
கடந்த 2-ந்தேதி அச்சரப்பாக்கம் அருகே எரிந்த நிலையில் கரிக்கட்டையாக உடல் கண்டெடுக்கப்பட்டது. அது தங்கவேலின் உடலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து ராஜா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சந்தவேலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). நிலத்தரகராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் காமராஜர் நகரை சேர்ந்த சிவராஜ் (32). இவரிடம் அவசர தேவைக்காக அய்யப்பன் 5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அய்யப்பன் காஞ்சீபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கி்கொண்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த சிவராஜ், அய்யப்பன் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்சில் வைத்திருந்த கட்டையால் அய்யப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அய்யப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரகடம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லம் சந்திப்பு அருகே செல்லும் போது, எதிரே வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார்த்திக்கும், மொபட்டில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிசோதிப் மெஹந்தி (38), ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நசரத்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 23), அப்பு என்ற விக்னேஷ் (24) ஆகியோர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை போலீஸ் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மேற்படி 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஏரிக்கரையில் அந்த பகுதியை சேர்ந்த மலர் (40) என்பவர் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துச் கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து மலரின் மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் முசரவாக்கம், ரேணுகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த சீராளன் (வயது 39) என்பவர் மலரின் தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் சீராளனை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய உதவிய பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சோமசுந்தரம் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் அவரது குழுவினரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.
சுங்குவார்சத்திரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கீரநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அந்த வழியாகதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தோம். இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர்.
உத்திரமேரூர் அருகே கிணற்றில் துணி துவைக்க சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 39). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று மாலை மகேஸ்வரி வயலில் உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக சென்றார்.
அப்போது கால் வழுக்கி திடீரென கிணற்றில் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-
நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத்தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1½ அடி உயரம், 4½ அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும்.
இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள். முதலில் பிராமியும், 2-வதாக மகேஸ்வரியும் 3-வதாக கவுமாரியும் 4-வதாக வைஷ்ணவியும் 5-வதாக வராகியும் 6-வதாக இந்திராணியும், 7-வதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள்.
பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை. இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள். ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும்.
இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். உலகெங்கிலும் தாய் தெய்வ வழிபாடு என்பது நீக்கமற நிறைந்துள்ளது.
வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ, வெற்றியின் அடையாளமாக மன்னர்கள் நாட்டை வென்றிட இன்ன பிற நன்மைகள் வேண்டி மன்னர் முதல் மக்கள் வரை வழிபட்டது தாய்வழி வழிபாடாகும்.
இதன் முதல் வழிபாடாக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக இந்த எழுவர் அன்னையர் வழிபாடு உள்ளது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக இந்த எழுவர் கன்னியர் வழிபாடு தொடர்கிறது. காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் போன்ற நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காண கிடைக்கின்றன. கி.பி. 6-ம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்ற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த குறிப்புகள் உள்ளது.
நாங்கள் கண்டெடுத்த இந்த புடைப்பு சிற்பதொகுப்பானது சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கி கொண்டிருக்கும் இந்த பக்தி வரலாற்று கலைபொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






