என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வெண்டி பாளையத்தில் தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 10 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்ற முதியவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிறுவனம் பாலை கொண்டு பால்கோவா உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. இன்று அதிகாலை ராமன் தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதிக அழுத்தம் காரணமாக எதிர்பாராத விதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மற்றொரு ஊழியர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து தாலுகா மற்றும் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாதுறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.
    • 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் ரேஷன் அரிசி கடத்தி வருபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் நேற்று இரவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (24) என்பதும், வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி வந்தததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.39 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பெற்று வருகிறது.

    பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது
    • 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்கால் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் கரைகள் பழமை காரணமாக ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக அமைக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    இந்நிலையில் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நேற்று முன்தினம் மாலையில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது.

    இந்த தண்ணீர் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீர் ஓடை வழியாக இடது புறக்கரைக்கு சென்றதால் அங்கும் உடைப்பு ஏற்பட்டது.

    வாய்க்காலில் 1300 கன அடி நீர் சென்று கொண்டிருந்ததால் உடைந்த இரு கரைகளில் இருந்தும் வெளியேறிய தண்ணீர் வெள்ளத்தைப் போல விளை நிலங்கள் வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பாலப் பாளையம், சின்னியம் பாளையம், கூர பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், வாழை, கரும்பு , தென்னை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் இந்த ஊர்களில் செல்லும் தார் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் விலை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் வடிய தொடங்கி உள்ளது. நேற்று கரை உடைப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி இன்னும் 10 நாட்களுக்குள் வாய்க்கால் கரை உடைப்பு சீரமைக்கப்படும் என்றார்.

    இந்நிலையில் இன்று முதல் வாய்க்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணி துறையினர் அங்கு முகாமிட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் நேற்று இரவுவே வரவழைக்கப்பட்டு உள்ளன.  

    • காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் உள்ளன.

    தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது.

    பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

    • சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்
    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

     ஈரோடு,

    ஈரோடு மூலப்பாளையம் பாரதிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 58). ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறை–வால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.

    கடந்த 9-ந் தேதி இரவில் சுரேந்தின் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று தூங்க சென்றார். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த குமுதா நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தார்.

    அப்போது சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது

    புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி முத்து விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (36). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

    இவர் சம்பவத்தன்று டானா புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் டீ குடிக்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்குள் சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதி அம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சந்த கடை பகுதி அருகே புளியம்பட்டி போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.

    அவரை விசாரித்ததில் அவர் அந்தியூர் அடுத்த செம்புளி ச்சாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. 

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
    • சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடும் குளிர்வாட்டி எடுக்கிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் மழையும் குளிருடன் சேர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பேர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளுக்கு வறட்டு இருமலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ–மனைகளிலும் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, இரவில் நிலவும் கடும் குளிர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க கம்பளி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

    மேலும் காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைக்கும் வகையிலான குல்லா உள்ளிட்டவைகளை அணிந்து செல்லலாம்.

    காது மற்றும் மூக்கு வழியாகவே பனிக்காற்று உடலில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. இதைப்போல் நீரை காய்ச்சி குடிப்பதும் நல்லது என்றனர். 

    • வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊரு மற்றும் விளை நிலயங்களில் தண்ணீர் புகுந்தது
    • கால் வாயை சீரமைத்து விளைந்த பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது

    ஈரோடு,

    பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊரு மற்றும் விளை நிலயங்களில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டி ருந்த மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவை நீரில் மூழ்கின. சேதமடைந்த கால்வாயை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-

    தொடர் மழை காரண மாக கால்வாயின் இரு கரையோரங்களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், உடைப்பு ஏற்படுவதற்கு முன்பு அணையில் இருந்து நீர் திறப்பை 2000 முதல் 1000 கன அடியாக நீர்வளத்துறை குறைத்தது.

    கரை உடைப்புக்குப் பின், அணை யிலிருந்து நீர்திறப்பு முழு மையாக நிறுத்தப்பட்டது.

    10 நாட்களுக்குள் கால் வாயை சீரமைத்து விளைந்த பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 9-ந் தேதி முதல் தண்ணீர் விநி யோகத்தை மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஏற்கனவே அரசு அனு மதித்துள்ள ரூ.710 கோடி மதிப்பிலான கால்வாயின் நவீனமயமாக்கல் திட்டத்தை எதிர்த்தும், ஆதரவளித்தும் விவசாயிகள் 2 பிரிவுகளாக உள்ளனர்.

    இந்த விவகா ரத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வர கடந்த மாதமும் 2 குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். பேச்சு வார்த்தைகள் தொடரும்.

    மேலும், அருகில் உள்ள கிராமங்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் கால்வாய் நீர் புகுந்ததால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரி சீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    • விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அரச்சலூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

    இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

    தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
    • வீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதிகளில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் குண்டேரிபள்ளம், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானி, தாளவாடி, ஈரோடு, பவானிசாகர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கவுந்தப்பாடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்.

    இந்நிலையில் இன்று காலை முதலே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியில் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மாணவ -மாணவிகள் குடைப்பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர்.

    இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

    • வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி வசந்தா (72).

    நேற்று முன்தினம் வசந்தா தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து எச்.1 என்ற குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார்.

    இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலில் இருந்து இறங்கி பெருந்துறை கிளம்பி சென்று விட்டனர்.

    வீட்டிற்கு சென்ற பிறகு வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதன் பிறகு தான் வசந்தா தான் அணிந்திருந்த நகையை ரெயிலில் விட்டு வந்தது பெரிய வந்தது. இது குறித்து அவர் உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைன் 182-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், ரகுவரன் தலைமையில் போலீசார் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் பயணம் செய்த எச் 1 பெட்டியை சோதனையை செய்தனர்.

    அதில் வசந்தா பயணம் செய்த படுக்கையின் கீழ் பகுதியில் செயின் இருந்தது தெரியவந்தது. செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இது குறித்து வசந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக வசந்தாவின் மருமகன் ஸ்ரீதரன் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து நகையை பெற்றுக் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    ×