என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் பாய்லர் வெடித்து முதியவர் பலி
- பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த வெண்டி பாளையத்தில் தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 10 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்ற முதியவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிறுவனம் பாலை கொண்டு பால்கோவா உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. இன்று அதிகாலை ராமன் தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிக அழுத்தம் காரணமாக எதிர்பாராத விதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மற்றொரு ஊழியர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தாலுகா மற்றும் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாதுறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.