என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது.
    • வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது உக்கிரம் கிராமம். இன்று அதிகாலை இந்த ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று திடீரென நுழைந்தது. இதையடுத்து தெரு நாய்கள் யானையை பார்த்து குரைத்தது. இதையடுத்து சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது யானை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் அந்தயானை அங்கிருந்து வெளியேறி வயல், கரும்பு தோட்டங்கள் வழியாக நம்பியூர் அடுத்த காராப்பாடி பகுதிக்கு வந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். யானை சாலை ஓரமாக வயல் வெளியில் ஓடியது. சிலர் மோட்டார் சைக்கிளில் யானையை விரட்டி சென்றனர்.

    பின்னர் அந்த யானை கோபி செட்டிபாளையம் அருகே உள்ள ஒடையாகவுண்டன்பாளையம் வெள்ளிமலை கரடு என்ற பகுதியில் உள்ள மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சுற்றியது. இதைப்பார்த்த வெங்கிடு என்பவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த ஒற்யை யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அவர்கள் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையையும் விரட்டினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை தேடினர். அப்போது யானை கோபி செட்டிபாளையம் காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அவர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பவானிசாகர் அடுத்து விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து இந்த ஒற்றை யானை வழிதவறி வந்து இருக்கிறது. வழி தெரியாததால் இது உக்கரம், காராப்பாடி வழியாக கோபி செட்டிபாளையம் பகுதிக்கு வந்து இருக்கிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது. வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர்.

    ராசிபும்:

    சேலம்-கரூர் அகல ரெயில் பாதை திட்டத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த கீரனூர், நெ.3 குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுவரையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், ரெயில்வே துறைக்கு நிலம் எடுத்துக் கொடுத்த தாசில்தார் அலுவலக வாகனங்கள், தளவாடப் பொருட்களை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். அங்கிருந்த துணை தாசில்தாரிடம் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை தெரிவித்தனர். ஆனால் தாசில்தார் அங்கு இல்லாததால் கோர்ட் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    இதேபோல் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கும் சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் ஜப்தி செய்ய வந்திருப்பது குறித்து எடுத்து கூறினர். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறினர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் ஊழியர்கள் தாலுகா ஆபீஸ் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளையும் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.
    • ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    ஈரோடு:

    இந்த மாதம் 1-ந் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு வசதியாக கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

    அன்றைய தினமே ஈரோடு மாவட்ட த்திலும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

    அதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன .அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன.

    வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி முடிவடைந்தன.

    இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி கடந்த 5.1.2022 ஆண்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 ஆகும். இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் 29,240 பேர் சேர்க்கப்பட்டனர். 30 ஆயிரத்து 908 பேர் பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று 5-ந் தேதி நாளை கணக்கிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 தொகுதிகளையும் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 23 பேர் உள்ளனர்.

    ஈரோடு மேற்கு தொகுதியில் மொத்தம் 302 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 258 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஈரோடு மேற்கு தொகுதி தான் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது. மற்றவர்கள் 40 பேர் உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 277 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 13 பேர் உள்ளனர்.

    பெருந்துறை தொகுதியில் மொத்தம் 264 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 105 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 8 பேர் உள்ளனர்.

    பவானி தொகுதியில் மொத்தம் 289 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. பவானி தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 17 பேர் உள்ளனர்.

    அந்தியூர் தொகுதியில் மொத்தம் 261 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 17 பேர் உள்ளனர்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 296 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்கள் 9 பேர் உள்ளனர்.

    பவானிசாகர் தொகுதியில் மொத்தம் 295 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 455 வாக்காளர்கள் உள்ளனர்.

    மற்றவர்கள் 21 பேர் உள்ளனர். 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.

    இதேபோல் பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 99 ஆயிரத்து 105 பேர் உள்ளனர். வழக்கப்போல் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 148 திருநங்கைகள் உள்ளனர்.

    • புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
    • இன்று கூடிய மாட்டுச்சந்தையில் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று, கோழி போன்ற கால்நடைகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசும்போது, மாணவர்கள் மத்தியில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முடியாது என்று சொல்லும் மாணவர்கள் ஜெயிக்க முடியாது.

    முடியும் என்று சொல்லும் மாணவர்கள் சாதிக்கலாம். உயர்ந்த பதவியை அடைய கடின உழைப்பு கொடுக்க வேண்டும்.

    கடின உழைப்பு என்றால் படிப்பில் முழு கவனம் செலுத்துதல், கடின உழைப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார்.

    பள்ளி படிப்புக்கு பிறகு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஓய்வு பெற்ற விவசாய ஆசிரியர் மதியழகன், கவுன்சிலர் பரமசிவம், பிரஸ் நந்தகோபால் சதாசிவம், வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • ழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
    • நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணிக்கு நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கடந்த 3-ந் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், கிராம சாந்தியும் நடந்தது. 4-ந் தேதி கொடியேற்று விழாவும், இரவு அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.

    தொடர்ந்து நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பரிவேட்டையும், தெப்பத்தேர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஸ்ரீ அம்மன் சிறப்பு தரிசனம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளது.
    • நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடக்க முடியாத அளவிலும், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கொசு தொல்லைகளும் மற்றும் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.

    எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள 1-வது முதல் 9-வது வீதிகள் வரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி, முத்து நகர் பகுதி பொதுமக்களும் இச்சாலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இச்சாலை நல்லூர் ஊராட்சி மற்றும் மாதம்பாளையம் ஊராட்சி சேர்ந்த சாலை என்பதால் ஊராட்சி தலைவர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய சேர்மன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையன சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32). தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வெள்ளோடு அருகே வந்தபோது மகாலட்சுமி கழிப்பறைக்கு சென்று வருவதாக வருவதாக கூறி, அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் கரையோரம் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார். ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம், சுற்றுப்புற பகுதியில் தேடிப்பார்த்தும் மகாலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    • சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதியை சேர்ந்தவர் சொக்கப்பன் (56). தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

    சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் காவேரி ஆர்.எஸ்.ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி (70). இவர் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்து, கவுதமி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.

    கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் கரும்பு வெட்டிய கூலி பணத்தை வாங்கி சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதையறிந்த கவுதமி, கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது.
    • இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ–மனையில் மாரடைப்பால் இறந்தார்.

    அவரது திடீர் இறப்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    திருமகன் ஈவெரா உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தினசரி ஜவுளி சந்தையில் 260-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று பன்னீர்செல்வம் பார்கில் ஜவுளி வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ×