என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை- எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தல்
    X

    கோபிசெட்டிபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை- எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தல்

    • பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது.
    • வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது உக்கிரம் கிராமம். இன்று அதிகாலை இந்த ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று திடீரென நுழைந்தது. இதையடுத்து தெரு நாய்கள் யானையை பார்த்து குரைத்தது. இதையடுத்து சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது யானை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் அந்தயானை அங்கிருந்து வெளியேறி வயல், கரும்பு தோட்டங்கள் வழியாக நம்பியூர் அடுத்த காராப்பாடி பகுதிக்கு வந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். யானை சாலை ஓரமாக வயல் வெளியில் ஓடியது. சிலர் மோட்டார் சைக்கிளில் யானையை விரட்டி சென்றனர்.

    பின்னர் அந்த யானை கோபி செட்டிபாளையம் அருகே உள்ள ஒடையாகவுண்டன்பாளையம் வெள்ளிமலை கரடு என்ற பகுதியில் உள்ள மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சுற்றியது. இதைப்பார்த்த வெங்கிடு என்பவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த ஒற்யை யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அவர்கள் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையையும் விரட்டினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை தேடினர். அப்போது யானை கோபி செட்டிபாளையம் காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அவர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பவானிசாகர் அடுத்து விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து இந்த ஒற்றை யானை வழிதவறி வந்து இருக்கிறது. வழி தெரியாததால் இது உக்கரம், காராப்பாடி வழியாக கோபி செட்டிபாளையம் பகுதிக்கு வந்து இருக்கிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது. வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×