என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (49). குன்னூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 19 வயதில் மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர்.

    குன்னூர் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் விஜயரா கவனின் வியாபாரம் பாதிப்புக்குள்ளானது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மேட்டுப்பாளையம் செல்வதாக கூறிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து விஜயராகவனின் அண்ணன் ஜெயராமன் (56) குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக விஜயராகவனின் அண்ணன் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஜெயராமன் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று பார்த்த போது மீட்கப்பட்டிருப்பது தனது தம்பி விஜயராகவன் தான் என அடையாளம் காட்டினார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 18-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையிட்டு வந்தனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஜவுளி சந்தை மந்த நிலையில் நடைபெற்று வந்தது. இதேப்போல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாபாரமும் பாதிப்பு ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 54 நாட்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவடைந்தது. தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    • அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது.
    • இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனது கையில் வைத்திருந்தது.

    பின்னர் கடந்த 2021-ம்ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானிசாகர், பவானி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சியில் கூட்டணி கட்சியான பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியது.

    இதில் அந்தியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும், கிழக்கில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும் 38.41 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இந்த தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 66 ஆயிரத்து 233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகள் பெற்றார். இது 0.84 சதவீதமாகும். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 110156 வாக்குகள் பெற்றார். இது 64.58 சதவீதமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43923 வாக்குகள் பெற்றார். இது 25.75 சதவீதமாகும். இதே போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10827 வாக்குகள் பெற்றார். இது 6.35 சதவீதமாகும். கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்தது கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கணிசமாக அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்து காணப்படும் இந்த தொகுதியில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் பல்வேறு வியூகங்களும் அமைத்து அ.தி.மு.க.வின் ஓட்டுகளை காங்கிரசுக்கு விழ வைத்துள்ளனர். இதனால் கடந்த தேர்தலை விட அதிக ஓட்டு வித்யாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது.
    • தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் இந்த வெற்றியின் பெருமைகள் சேரும். அவரின் 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் ராகுல்காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து முதல்-அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிற சட்டப்பேரவையில் நானும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல் திறனிலும் பல மடங்கு உயர்ந்தவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இன்றைக்கு சில பேர் தேர்தல் ஆணையம் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை, மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி கொடுத்தபோது, தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாக அவரே கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நாகரிகமாக, நாணயமாக, சட்டப்படி நடந்து கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனுமதியின்றி செயல்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    எனது மகன் விட்டு சென்ற பணியை நான் தொடர உள்ளேன். ஏற்கனவே என் மகன் இங்கு பல பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்றனர்
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

    இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

    • காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    • அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பதிவானது இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதுவரை 12 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.

    அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதனிடையே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

    காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை.

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    • அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

    தற்போதுவரை வெளியான 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்றுள்ள இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது. அவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,666 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானதை அடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    • எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
    • செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.

    தொடர்ந்து இன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் செல்லியாண்டி அம்மனுக்கு சிவா சிவாச்சாரியார் குழுவினர் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் ஓம் சக்தி, ஓம் சக்தி என கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. நகரில் முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலை அடைந்தது.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
    • கார் மற்றும் வேன் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    கோபி:

    ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் ஆர்ச் பகுதியில் ஒரு காரில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு வேன் வந்தது. அப்போது கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் கார் மற்றும் வேனின் முன் பகுதி சேதமானது.

    இதில் காரில வந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
    • காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரை சேர்ந்த குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவ ர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
    • சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிறுவலூர் புது காலனி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விமலா தேவி (33). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் விமலா தேவிக்கு தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பார்த்துள்ளனர்.

    மருத்து செலவுக்காக தங்கவேல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விமலாதேவி தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், இதற்காக கடன் சுமை அதிகரித்தது என்றும் மன வேதனையில் இருந்து உள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விமலா தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×