என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
    • உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகள், இதர பழக்குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்ற ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டிக்கன், செல்வன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    பழ வியாபாரிகள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் அப்பழங்களை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே அவ்வாறு பழுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான குறைபாடுகளை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் கேட்டு கொண்டனர்.

    • செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர்.
    • 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், யாம் அறக்கட்டளை இணைந்து 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

    வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் நடந்த விழாவில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் புடவை, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், கனி வகைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர். பின்பு 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது. இதில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பச்சப்பாளி பகுதியில் முகமது சித்திக் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதி அவரிடம் வாங்க வற்புறுத்தினார்.

    இதை வாங்க விருப்பம் இல்லாத அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் பச்சப்பாளியை சேர்ந்த மாரிசாமி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் தொட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (26) என்பவர் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்ய வைத்து இருந்தார்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் அவரை பிடித்து விசாரித்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சித்தோடு அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்த ஜெகதீசன் (37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சத்தியசீலன் (73), சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவா (42) என தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள 90 லாட்டரி சீட்டுகள் ரூ.20 ஆயிரத்து 500 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (49) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.480 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகள், ரூ.17 ஆயிரத்து 700 பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
    • குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால் தண்டனை விதிக்க நேரிடும்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குறைந்த பட்ச ஊதிய சட்டம், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் இம்மாதம் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கைக்கு இணை ஆணையரிடம் கேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    கொத்தடிமை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், 16 செங்கல் சூளைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணியாக, 31 மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிற்கூடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

    அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணி புரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பாளையம் புதூர் என்ற ஊர் வழியாக சென்று அங்குள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை கடந்தால் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.

    இந்த சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், இது குறித்து புகார் கொடுத்தும் சிறுக்களஞ்சி ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த 26-ந் தேதி சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சிறுக்களஞ்சி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

    பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று பொது–மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சுமூக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது,

    ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் 40 அடி அகலத்தில் சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    பின்னர் சாலை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதாக பொதுமக்கள் கூறிவிட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும்

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கோவை மண்ட லத்தின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் பரத நாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில்

    5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரோடு பவானி சாலை பி.பெ.அக்ரஹாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.

    மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்க ளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில்

    வருகிற 1- தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு 9842780608 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்க ப்படும் எனவும்,

    இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.
    • 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    ஈரோடு, ஏப். 29-

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி-– அரக்கன்கோட்டை வாய்காலி லும் தண்ணீர் ஓடுகிறது.

    இப்பகுதியில் அதிகமாக சாய, சலவை, தோல் ஆலைகள், உட்பட பல ஆலை கழிவுகளை நேரடியாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் கலக்கின்றனர்.

    இதனை கண்காணிக்க காளிங்கராயன் வாய்க்காலில் மட்டும் 3 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு அளவீடு செய்யும் கருவி அமைத்துள்ளனர்.

    அக்கருவி அளவீடு செய்து ஆன்லைனில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அளவீட்டை தெரிவிக்கும்.

    இதற்கிடையில் பவானிசாகர் அணையிலும், பவானி ஆற்றிலும் ஆலை கழிவுகள் திறக்கப்படுவதால் கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் உதயகுமார் கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் ஆலை கழிவு அல்லது மாசுபட்ட தண்ணீர் கலப்ப தாக புகார் தெரிவி க்கப்ப ட்டது. உடனடியாக அணைக்கு மேல் பகுதி, அணை மற்றும் அணையில் இருந்து பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் என அனைத்து இடங்களில் தொடர்ந்து தண்ணீரில் டி.டி.எஸ். (டோட்டல் டிஸால்விடு சால்ட்) உள்ளிட்ட கலப்பு குறித்து பரிசோதித்தோம். அப்படியே குடிக்கும் அளவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம்.

    தொடர்ந்து மாசுபாடு ஏற்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறோம். தவிர மாதம் 2 முறை பவானிசாகர் அணையிலும், அணைக்கு முன், பின்பாக அளவீடு செய்வோம்.

    அந்த அளவீட்டுடன் இதனையும் ஒப்பீடு செய்தோம். அணைக்கு பல இடங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் உள்ளிட்டவை மக்கி, அதன் மூலம் காஸ் அல்லது கருப்பு நிறமாக வெளியேறி இருக்கும் என கருதுகிறோம்.

    மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் 2 இடங்கள், பவானி ஆற்றில் 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    இதற்கான அனுமதி பெறப்பட்டு கருவிகள் வந்ததும் பொருத்தப்படும்.

    இக்கருவியில் இருந்தும் அளவீடுகள் ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கும், சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆணைய அலுவலகத்துக்கும் ஆன்லைனில் சென்றடையும்.

    கூடுதலாக சில இடங்களில் வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாசுக ட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும்.
    • வரும் 1-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ந் தேதி மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து வரும் 1-ந் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.

    இன்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், 5.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியிலும், 6 மணிக்கு மரப்பாலம், அண்ணா டெக்ஸ் மேடு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.

    முன்னதாக ஈரோடு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    • பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பங்களாப்புதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து கொண்டு பணம் மற்றும் சீட்டு கட்டுகளுடன் சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர்.

    இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (52), திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்த அருள்மணி (46), டி.என்.பாளையம் காமராஜ் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (58), டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ராஜகோபால் (50) மற்றும் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4,700 பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.
    • இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கீதா.இவர்கள் 2 பேருமே ஆட்டோ டிரைவர்கள். இவர்களுக்கு யோகேஸ்வரன் (22) என்ற மகன் உள்ளார்.இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சந்திசேகருக்கு கையில் அடிப்பட்டதால் அவர் ஆட்டோ ஓட்டாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து அவரது மனைவி கீதா மட்டும் ஆட்ேடா ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இவர்களது மகன் யோகேஸ்வரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதையடுத்து கீதா வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இதுவரையும் மாயமான யோகேஸ்வரன் பற்றி எந்த தகவலும் இல்லை.

    இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் கீதா ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.

    இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண் ஆட்டோ டிரைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர் மாயமான என் மகனை மீட்டுத்தர வேண்டும். சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கிடைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    பின்னர் பெண் போலீசார் உதவியுடன் கீதாவை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

    அப்போது தான் ஆட்டோவில் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

    அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 142 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்தபட்சமாக 66 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 74 ரூபாய்க்கும், சராசரியாக 73 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மொத்தம் 48 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.

    ×