என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, அம்மாபேட்டை, கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், தாளவாடி, கடம்பூர், பெருந்துறை போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50).
    • கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பவானி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50). இவரிடம் பவானி, கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த குமார் (36) என்பவர் வெள்ளைத்தாளில் எண்களை எழுதி, கேரள மாநில லாட்டரிச் சீட்டு என கூறி செல்வராஜிடம் பல முறை விற்பனை செய்துள்ளார்.

    இதுகுறித்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.

    நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வாய்ப்பாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
    • தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.57 அடியாக உள்ளது.
    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.52 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.66 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.79 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,066 கன அடி தண்ணீர் வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.57 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.52 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.66 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    • தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார்.
    • ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65). இவரது மனைவி ரஞ்சனி (55). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன் மணிகண்டன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    ரவிச்சந்திரன், கிருஷ்ணா தியேட்டர் அருகில் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு பேட்டரி 12 மணி நேரம் சேமிப்பு என 4 சேமிப்பு பேட்டரிகள் மூலம் மொத்தம் 48 மணி நேரம் சைக்கிளை இயக்கும்.
    • சோலார் சைக்கிளை நவீன்குமார், சபரி இருவரும் இணைந்து உருவாக்கினர்.

    டி.என்.பாளையம், 

    டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை புதூர் ஊராட்சி, வரப்பள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் கொங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பெருமுகை சைபன் புதூரை சேர்ந்த டி.நவீன்குமார் மற்றும் எஸ்.ஆர்.சபரி ஆகிய இருவரும் 9-ம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.

    நண்பர்களான நவீன்குமார், சபரி இருவரும் பேட்டரி சைக்கிளில் பள்ளிக்கு வந்து சென்று உள்ளனர். ஒரே வகுப்பில் படிக்கும் நவீன், சபரி ஆகிய இருவருக்கும் நாளடைவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்து உள்ளது.

    இதனால் பள்ளிக்கு ஓட்டி வரும் சைக்கிளை இருவரும் இணைந்து சோலாரில் இயங்கும் சைக்கிளாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    48 வாட்ஸ் அளவில் சோலார் தகடுகளை பயன்படுத்தி, ஒரு பேட்டரி 12 மணி நேரம் சேமிப்பு என 4 சேமிப்பு பேட்டரிகள் மூலம் மொத்தம் 48 மணி நேரம் சைக்கிளை இயக்கும் வகையில் சோலார் சைக்கிளை நவீன்குமார், சபரி இருவரும் இணைந்து உருவாக்கினர்.

    பகல் நேரத்தில் சூரிய ஒளியால் சோலார் தகடுகள் மூலமாகவும், இரவு நேரத்தில் சோலார் மின்கலம் (சேமிப்பு பேட்டரிகள்) மூலமாகவும் இந்த சோலார் சைக்கிளை இயக்கி செல்லும் வகையில் உருவாக்கினர்.

    நவீன்குமார், சபரி ஆகிய இருவரும் உருவாக்கிய இந்த சோலார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கொங்கு வித்யாலயா பள்ளி வளாகத்தில் பள்ளியின் முத ல்வரும் அறிவியல் ஆசிரிய ருமான நளினி செங்கோ ட்டையன் தலை மையில் நடை பெற்றது.

    இந்த சோலார் சைக்கிளை பள்ளியின் கணித ஆசிரியர் சங்கர் அவர்களின் உதவி யு டன் உருவாக்கி ய–தா கவும், ஊக்க ப்படுத்திய பள்ளி முதல்வர் நளினி செங்கோ ட்டை யன், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    நவீன்குமார், சபரி இரு மாணவர்களையும் பள்ளியின் முதல்வர் நளினி செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
    • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முறைப்படி கலெக்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் முத்தசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    பொதுமக்கள் குறைகளை தீர்க்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன்.

    இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அள வில் பாடுபடுவேன். பொது மக்கள் தங்களது குறைகளை எண் நேரமும் தெரி விக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்
    • கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்த ஓட்டப்பாறை ஊத்துக்குளி ரோடு, செந்தூர் கார்டன் பகுதிளைய சேர்ந்தவர் துரைச்சாமி (50) இவர் சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் செந்தூர் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்.

    செந்தூர் கார்டன் பிரிவு அருகே திரும்பும் போது சென்னிமலை அடுத்த வாய்ப்பாடி, சுள்ளி மேடு பகுதியைச் சேர்ந்த கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    இதில் கீழே விழுந்த துரைசாமி தலையில் பலத்த அடிபட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • ஒரு கிழங்கில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது.
    • பூவை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சி, கருங்கவுண்டன்வலசு பகுதியினை சேர்ந்தவர் பூபதி.

    விவசாயியான இவர் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிட்டுள்ளார். அதில் ஒரு கிழங்கில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது.

    இந்த பூ பூத்த தகவல் கிராமத்தில் பரவியது. இதை தொடர்ந்து இந்த சேனைக்கிழங்கு பூவை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பவானி, 

    ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வகையில் 10 சக்கரங்கள் கொண்ட டாரஸ் லாரி இரும்பு பைப் ஏற்றிய லோடு உடன் வந்து கொண்டு இருந்தது.

    இந்த லாரியை மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் வெடிமுத்து டிரைவர் ஆக ஒட்டி வந்துள்ளார். உடன் கிளீனர் பெருமாள் என இருவர் வந்துள்ளனர்.

    பவானி ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை கூடுதுறை கோவிலுக்கு செல்லும் வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    லாரி கவிழ்ந்த பகுதியில் பல பொருள் அங்காடி ஒன்று இருந்த நிலையில் அந்த கடையின் முன் இருந்த பைக் சேதம் அடைந்துள்ளது. அதேபோல் அதிர்ஷ்டவசமாக லாரியில் வந்த டிரைவர் மற்றும் கிளீனர் பல பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    லேசான காயம் அடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இரு கிரைன் வரவழைத்து 2 மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த டாராஸ் லாரியை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். 

    • ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிக்கில் (23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவை பட்டறையில் தங்கிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீ பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிக்கில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை விபத்தில் உயிரிழந்தாரா? எவ்வாறு இறந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளி இறந்து கடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×