என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    • ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பராமரிப்பு பணிகள் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொறியாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்பட்டது.

    இன்று ரோப்கார் நிலையத்தில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

    • முகமது யாசின் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.
    • 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்தவர் சேக்அப்துல்லா. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மதமாற்ற நடவடிக்கைகளை கண்டித்து போராடியதால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு வீட்டில் இருந்த ஆவணங்கள், சேக்அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

    விசாரணை முடிவுற்ற நிலையில் வருகிற 25ந்தேதி சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த சோதனையால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் அங்கு திரண்டு சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு பகுதியான சம்சுதீன் காலனியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முகமது யாசின் என்பவருடைய வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி கும்பகோணத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை காவல்துறையினருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது யாசின் (35) வீட்டில் இன்று அதிகாலை முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முகமது யாசின் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அதிகாலையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது யாசின் பயன்படுத்தி வரும் செல்போன் மற்றும் வீட்டில் உள்ள நபர்களின் தொலைபேசிகளையும், வீட்டில் உள்ள அவரின் முக்கிய ஆவணங்கள், டைரிகள், உள்ளிட்ட வைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் நடைபெறும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவத்தை அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.

    வத்தலக்குண்டு காந்திநகர் கணவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குறிஞ்சி நகரில் உமர் கத்தாப் (72) என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவரது மருமகன் முகமதுஅலிஜின்னா என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன்பின் முகமது அலி ஜின்னாவின் மகள் நிஷா தற்போது தந்தை உமர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டி.எஸ்.பி.சஞ்ஜீவ்மோன் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் 2 பேரும் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இவர்களது வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடந்ததா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொடைக்கானலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் உள்ள 2 இடங்கள், அப்சர்வேட்டரி சாலை, கான்வென்ட் ரோடு மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் ஒரு இடத்திலும் கொடைக்கானல் அண்ணா சாலையில் முபாரக் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    ஆம்பூர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளர் இம்தாத்துல்லாவின் கொடைக்கானல் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

    • தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி,

    கள்ளிப்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர் ஆவாரம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன.
    • 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன.

    மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் சென்று வர வசதியாக ரோப்கார், மின் இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதாலும், சுற்றுலா அனுபவமாக இருப்பதாலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலரும் ரோப் காரில் செல்லவே விரும்புகின்றனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. ரோப் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தன.

    இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு வல்லுனர் குழு ஆய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
    • கூண்டில் 19 குரங்குகள் சிக்கின.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.

    திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றன.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குணா குகைக்கு வந்த சுற்றுலா பயணியிடம் இருந்து பையை பறித்து அதில் இருந்த பணத்தை சூறை விட்ட சம்பவமும் நடந்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குரங்குகள் தொல்லையால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக குரங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவை நடமாடும் பகுதியில் கூண்டுகளை வைத்தனர். இந்த கூண்டில் 19 குரங்குகள் சிக்கின. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஆகிய இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் உள்ளதால் இவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அய்யர் மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி தோப்புபட்டி, குன்னம் பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர்,

    சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது.
    • நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

    இதேபோல் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அவரது மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.

    மேலும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது. இது பற்றி அறிந்ததும் அமைச்சர் அர.சக்கரபாணி அங்கு சென்றார். மேலும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள், முதலீடு குறித்த ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் தி.மு.க.வில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இவரது வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி இருந்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தெரிவித்து விட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சீலப்பாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது கணவர் துவாரகநாதன் மற்றும் குழந்தைகளுடன் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக ஆத்தூர் தொகுதி சிங்காரக்கோட்டையில் ஏற்றுமதி தரம் கொண்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளை அவரது மருமகன் துவாரகநாதன் கவனித்து வருகிறார். தற்போது அந்த ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர். சோதனை குறித்து அறிந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி, செந்தில்குமார் வீடுகள் முன்பு ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    அமைச்சர் ஐ.பெரியசாமி மீது ஏற்கனவே வீட்டு வசதி துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுதலை பெற்ற நிலையில் மீண்டும் அந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே தற்போது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து முதல் முறையாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சோதனை நடைபெற்று வருகிறது.

    • மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.
    • தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    குறிப்பாக சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல இயக்கப்படும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.

    மேலும் படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுத்ததுடன் ஆங்காங்கு பிரசாதங்கள், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. 

    • தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை.
    • கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறு குறு வணிகர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்துமீறலில் இருந்து சிறு வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும்.

    திருச்சியில் 1 லட்சம் சதுரடியில் அமைய உள்ள பெரு நிறுவனத்தின் கட்டிடம் முன்புறம் சிறு வியாபாரிகள் நசுக்கப்படுவதை கண்டித்து வருகிற 30-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற வேண்டும்.

    இந்த முன்னெடுப்பை அரசுகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு வணிகர்கள் இல்லாமல் போய் விடுவார்கள். பல்பொருட்கள் விற்பனையில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவது உலக மயமாக்கல் கொள்கை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வால்மார்ட் என்ற பெரு நிறுவனத்துக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்திய போது அந்த நிறுவனத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார்.

    தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை. கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.

    ஆனால் தமிழகத்தில் 35 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். எங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை பெற வேண்டுமானால் தமிழக அரசு எங்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இந்தியாவை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்கள் உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்க முன்வர வேண்டும். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவனை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
    • உடலின் பெரும்பாலான பகுதி வெந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவர் தனது குடும்பத்துடன் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டுக்காக சென்றார். விழாவுக்கு வந்த பக்தர்களுக்காக கோவில் அருகே உணவு தயாரிக்கப்பட்டது.

    அங்கு சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன் விளையாடிக் கொண்டு இருந்தான். கறிக்குழம்பு தயார் செய்து அதனை பாத்திரத்தில் வைத்து விட்டு அங்கிருந்தவர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஸ்ரீதரன் எதிர்பாராதவிதமாக அந்த பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதில் அவன் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சிறுவனை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    உடலின் பெரும்பாலான பகுதி வெந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் குலதெய்வ வழிபாட்டுக்கு வந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகம் நிலவியது. சிறு அலட்சியம் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. 

    • பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பழனி:

    பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×