என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்களுக்கு சொந்தமான ¾ செண்டு நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் கட்டுவதற்கு நிலம் தேவை என எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த நிலத்திற்கு இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று விஜயன், காளியம்மாள், அவரது மகள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை கூறினர். இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.

    திண்டுக்கல் மக்கான்தெருவை சேர்ந்த தாதர்மைதீன் மகன் சையது இப்ராகிம். இவரது மனைவி ரசீதாபேகம். இவர்களுக்கு அரசு சார்பில் 1 ஏக்கர் 26 செண்டு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை பித்தளைப்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சையது இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் நடந்த விவரங்களை தெரிவித்தனர். நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிய கொடிமரம் அமைப்பதற்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 அடி உயரமுள்ள பர்மா தேக்கால் ஆன மரம் வரவழைக்கப்பட்டு பாலாலய பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் அமைப்பதற்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 அடி உயரமுள்ள பர்மா தேக்கால் ஆன மரம் வரவழைக்கப்பட்டது.

    அந்த கொடி மரத்தை வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது. புதிய கொடி மரத்திற்கு பாலாலய பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் கனகலட்சுமி, மண்டல ஸ்தபதி ஜெயராமன், நிலக்கோட்டை ஆய்வர் பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திண்டுக்க ல்லுக்கு அரசு பஸ்மூலம் வந்து செல்கின்றனர்.
    • படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்லும் இளம்மாணவர்களை கண்டு சமூகஆர்வலர்கள் வேதனையடைகின்றனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திண்டுக்க ல்லுக்கு அரசு பஸ்மூலம் வந்து செல்கின்றனர். கிராமப்பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் மகளிருக்கு இலவசம் என்பதால் பெண்கள் கூட்டமும் அதி கரித்தே காணப்படுகிறது. இதனால் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்லும் இளம்மாணவர்களை கண்டு சமூகஆர்வலர்கள் வேதனையடைகின்றனர். இவர்களை நம்பி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் படிக்கட்டிலேயே பயணம் செய்கின்றனர்.

    இளங்கன்று பயமறியாது என்பது போல் படிக்கட்டுகளில் பயணம் செய்வது பெருமையாக கருதுகின்றனர். சிறிது கரணம் தப்பினால் மரணம் என்பது தெரியாமல் பயணம் செய்யும் அவர்களை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அறிவுரை வழங்கி திருத்த வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
    • 7-ந்தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ம் நாளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்றுமாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பகல் 12 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.20 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் விண்ணை பிழக்க 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆட்டம்பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ரதவீதியில் சுற்றிவந்தனர்.

    ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் நகரமே திக்குமுக்காடியது. மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் என பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

    படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனபுறப்பாடு நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா, இரவு 9 மணிக்கு பெரியதங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறும். அன்றுஇரவு 11 மணிக்குமேல் கொடியிறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    • தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது.
    • தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ன செய்தாலும் பயன் இல்லை.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2 நாட்கள் பயிற்சி முகாமினை தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெயபி ரசாத் ஒருங்கிணைப்பு செய்தார்.

    ஜெரால்ட், ரோட்டரி சங்க தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அட்டுவம்பட்டி பகுதியில் நடந்த தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கான்பெடரேஷன் ஐ.டி. அசோசியேசன் தொழில் முனைவோர் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த அமைப்பினர் சேவை மட்டும் செய்யாமல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும். விவசாயம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் உள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப துறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் உள்ள பிரசினைகளை தீர்ப்பதற்கு தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை.

    2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது. ஊரக பகுதிகளில் அனைத்து வகையான கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ன செய்தாலும் பயன் இல்லை. உதயசூரியன் உதித்துக் கொண்டே இருக்கும். நல்ல தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறந்த கொள்கை உடைய, உறுதியான தொண்டர்களைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது.

    கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்காக நாங்கள் பணி செய்து வருகிறோம். திராவிட மாடல் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் எந்த நிலையில் இதை பேசுகிறார் என்று நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சமாதான கொள்கை சமுதாய ஒற்றுமைக்கு எதிரானது நம்ப வைத்து ஏமாற்றி வருகின்றார்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாலிபர் ஒருவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெற்று வருகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இவற்றை கண்காணித்தபோதும் விற்பனையை தடுக்க முடியவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் 3 நாட்களாக வனப்பகுதியில் மயங்கி கிடந்தனர். மேலும் கஞ்சா, போதை காளான் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்று வியாபாரிகளை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நாகராஜ் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் இவர் மீது எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.

    குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி சதீஷ் என்ற நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.
    • பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 29-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது.

    ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் 'அரோகரா... அரோகரா..' முழக்கம் விண்ணை பிளந்தது.

    தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கிறது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • நள்ளிரவு நடந்த இந்த விபத்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னிபஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை ராயப்பன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (50) என்பவர் ஓட்டிவந்தார்.

    பஸ்சில் 36 பயணிகள் அமர்ந்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே பஸ் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறிஅடித்து கூச்சலிட்டனர்.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    விபத்தில் டிரைவர் சுரேஷ், போடியை சேர்ந்த காமாட்சி (70), சென்னையை சேர்ந்த சரஸ்வதி (40), வெள்ளைத்தாய் (58), முனீஸ்வரன் (33) ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    நள்ளிரவு நடந்த இந்த விபத்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது.
    • பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார்-பிரியங்கா, இவர்களுக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமண விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தமிழகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு திருமணத்தை நடத்தினர்.

    கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இதனால் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்த அளவே உள்ளது.

    இதனை பாதுகாக்கும் வகையில் காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று எங்கள் திருமணத்திற்கு முன்னதாகவே முடிவு செய்தோம்.

    அதன்படி எங்கள் திருமணத்தின்போது நாங்கள் பாசமாக வளர்த்துவரும் ஜல்லிக்கட்டு காளை, பசு மாடுகளுக்கு பூமாலை அணிவித்து குங்குமத் திலகமிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

    மேலும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயத்துடன் சேர்த்து நாட்டு மாடுகளை வளர்த்து விவசாயத்தை பெருக்கி நமது பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.

    அதுமட்டுமின்றி இளைஞர்களும். பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தேரோட்டம் இன்று மாலை ரதவீதியில் நடைபெறுகிறது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைதொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைகாண அலைகடலென பழனியை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைகோவில் வரை இயக்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர். இன்று காலையிலும் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • உழவன் பாதுகாப்பு திட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சார்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
    • மூலஉறுப்பினர்களுடன் மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் சார்பு உறுப்பினர்களாக இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெறலாம்.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் உழவர்பாதுகாப்பு திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து சமூகபாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் 10லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சார்பு உறுப்பினர்கள் உள்ளனர்.

    திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிதிஉதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக கிராமங்களில் பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவு விண்ணப்பங்களே வரப்படுகிறது.

    இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலங்கள் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலங்கள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை உள்ள சிறுகுறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தின்கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதியுடைவர்கள்.

    மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் பதிவு செய்யலாம். விவசாயம் என்பது தோட்டக்கலை, பட்டுவளர்ப்பு, கால்நடைவளர்ப்பு மற்றும் பால்பண்ணை, தீவனபயிர்வளர்ப்பு, மேய்ச்சல், நாற்றாங்கல் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களை உள்ளடக்கியது.

    இதில் மூலஉறுப்பினர்களுடன் மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் சார்பு உறுப்பினர்களாக இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெறலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகபாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    ×