என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இவர்களில் அன்னதான குழு, அலங்கார குழு, காவடிக்குழு, பஞ்சாமிர்த குழு என பல குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி எடப்பாடி பக்தர்கள் குழுவினர் கடந்த 7-ந்தேதி எடப்பாடி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதில் பஞ்சாமிர்த குழுவினர் கடந்த 9-ந்தேதி பழனிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை மானூர் சண்முகநதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் மகா பூஜை நடத்தி வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணி அளவில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தனர்.

    பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து எடப்பாடி குழுவினர் தயாரித்த பஞ்சாமிர்தம் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் குழுவினருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் 'ஓம்' வடிவில் ஓவியம் வரைந்தனர்.

    இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழுவினர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர். பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது.
    • சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கன்னிவாடி போலீஸ் நிலையம் எதிரே உள்ள பெருமாள் கோவிலில் சவுமிய வருட கல்வெட்டு உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஒட்டன்சத்திர அலுவலக ஆய்வாளர்கள் லட்சுமணமூர்த்தி மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது. கன்னிவாடியில் பெரியகாளி கோவில் காவலுக்கு குமார நரசிம்ம அப்பயன் என்பவரை நியமித்துள்ளனர்.

    இதற்கான செலவீனங்களை கொப்பம்மா என்பவர் ஏற்றுள்ளார். சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் வனப்பகுதியில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகம் சப்ளை செய்யப்படுவதால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் வனப்பகுதியில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் நாயுடுபுரம் பகுதியில் சோதனையிட்டனர்.

    அப்போது வீட்டில் கஞ்சா, போதைகாளான் பதுக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராம்குமார் மனைவி வேளாங்கண்ணி ஜெனிபர் (வயது23) என்பவரை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையில் ராம்குமார் கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் தனது நண்பர்கள் மூலம் கொடைக்கானலில் உள்ள மனைவி ஜெனிபருக்கு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளார். அதனை கேரள மாநிலம் கொச்சி கல்லூர் பகுதியை சேர்ந்த அல்கத் (25) என்பவர் மூலம் விற்பனை செய்துள்ளார். மேலும் பாக்கியபுரம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்த அந்தோணிராகுல் (20) என்பவரும் போதை காளான் மற்றும் கஞ்சாவை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த மாதம் கடும் உறை பனி நிலவியது.
    • கோடை காலத்தை நோக்கி பருவநிலை நகர்வதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த மாதம் கடும் உறை பனி நிலவியது. அதன் பிறகு தற்போது பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ணம் காணப்படுகிறது. தற்போது பனிக்காலம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கி அதன் தொடர்ச்சியாக வசந்தகாலம் வர உள்ளது. கோடை காலத்தை நோக்கி பருவநிலை நகர்வதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமலும், கடும் குளிர் இல்லாமலும் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தேன் சிட்டுக்குருவிகள் அதிக அளவு முகாமிட்டுள்ளன. பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற காலம் என்பதால்  இவை தனது கீச் குரலில் ரீங்காரமிட்டபடி மரங்களில் தங்கியுள்ளன. சிட்டுக்குருவிகளின் செல்ல குரலை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் பல வண்ண நிறங்களில் காணப்படும் இதன் அழகையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    வசந்தகாலத்தில் கொடைக்கானலில் பல்வேறு வகையான பூக்கள் பூக்கும் என்பதால் அந்த பூக்களில் இருந்து தேனை பருக இந்த பறவைகள் வருவதாக பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இந்த குருவிகள் தேன் சிட்டுக்குருவிகள் என அழைக்கப்படுகிறது.

    • பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் தைப்பூச திருவிழா முடிவடைந்த பின்னரும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலை தவிர்க்க பிரதான பாதையான படிப்பாதை வழியே சீரான முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் தரிசனம் முடித்த பின்னரும் சீரான அளவில் கீழே இறக்கப்பட்டனர். படிப்பாதையை தவிர்த்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அதேபோல் கோவிலில் பொது, கட்டண வழி என அனைத்து தரிசன வழிகள், அன்னதானக்கூடம் செல்லும் இடம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அந்த வகையில் நேற்று சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • பைக் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (வயது35) என்பவர் ஓட்டி வந்தார்.

    திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை ம.மு.கோவிலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே பைக் வந்தது. அதன்மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் பயணிகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் ஸ்ரீதர்பாண்டி(36), கண்டக்டர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுசாபட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து நெல்மணிகளை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி தவசி செல்வம் அவருக்கு சொந்தமான வயல் ஆடுசாபட்டியில் 100 ஏக்கரில் உள்ளது. அங்கு நெல் பயிரிட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்து நெல் மணிகளை குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கமே நேரடி நெல் கொள்முதல் செய்கிறது.

    இந்த நேரடி கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தையை விட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்பினார்கள். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் விவசாயிகள் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது ஆடுசாபட்டியிலிருந்து விராலிப்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி, நிலக்கோட்டை, ராமராஜபுரத்திற்கு எடுத்து செல்வதற்கு வண்டி வாடகை ஏற்றுக் கூலி, இறக்கு கூலிக்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே வத்தலகுண்டு பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு செலவுத்தொகை குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என்றார்.

    ஆடுசாபட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு மஞ்சள் ஆற்றில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுத்தால் தண்ணீர் வீணாகாமல் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அமைச்சர் இ. பெரியசாமி விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.

    • கைகால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
    • கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு ஒரு வாலிபர் உடல் மிதப்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினருடன் சென்று அவரது உடலை மீட்டனர்.

    கைகால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் மணி(23) என்பது உறுதியானது. இவரது தந்தை இறந்துவிட்டார். இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். கட்டிட வேலைக்கு அவர்கள் சென்று வருகின்றனர். திருமணமாகாத மணி ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து அதனை போட்டிக்கு அனுப்பி வந்ததுடன் தானும் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கி வந்துள்ளார். இதுதவிர கபடி விளையாட்டிலும் பங்கேற்று பல்வேறு ஊர்களுக்கு சென்றுவந்தார்.

    இவ்வாறு உள்ள சூழ்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது எப்படி என குஜிலியம்பாறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கருங்குளத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும், கரூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுடன் மணியும் பழகி வந்துள்ளார்.

    இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் தனது கள்ளக்காதலியை பார்க்க வரக்கூடாது என மணியை அவர் எச்சரித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது தொடர்பு நீடித்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அதன்படி வேலை இல்லாமல் இருந்த மணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி குஜிலியம்பாறைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அங்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணியை தாக்கி உடலில் கல்லை கட்டியும், கை,கால்களை கட்டியும் வீசிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பழனி-ஈரோடு ரெயில் திட்டத்திற்காக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது.
    • கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திண்டுக்கல்:

    ரெயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், வணிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு போதிய ரெயில் சேவை இல்லாததால் பஸ் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

    நாட்டில் ரெயில் சேவையின் புதிய புரட்சியாக வந்தேபாரத் ரெயில் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரெயில் தடங்களில் கூட மீண்டும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. குறிப்பாக போடி-மதுரை அகல ரெயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

    இதேபோல் திண்டுக்கல், திருப்பூா, ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான பழனி-ஈரோடு அகல ரெயில்பாதை திட்டமும் கிடப்பில் போடப்பட்டு ள்ளது. 1915ம் ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் நெல், பருத்தி, மஞ்சள், மானாவாரி பயிர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.

    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ெதாழில் அதிக அளவு நடந்து வருகிறது. இங்கிருந்து துணி, எண்ணெய் வித்துகள், மஞ்சள், பெட்சீட், ஜமுக்காளம் போன்றவை அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கோவில் நகரான பழனிக்கு வருடம் முழுவதும் ஈரோடு, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    இவர்களுக்கும் பழனி-ஈரோடு அகல ரெயில்பாதை திட்டம் பெரிதும் பயனுள்ள தாக இருக்கும். கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது. தொடர்ந்து 2006-2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து சர்வே பணிகள் நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் இந்த ரெயில்வே திட்டத்திற்கு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது.

    பழனியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, சங்கூர் வழியாக 91.5 கி.மீ. தூரத்தில் ஈேராட்டுக்கு ரெயில்வே தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரெயில்வேகேட் அமைக்கப்படுகிறது.

    இத்திட்டத்திற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை கடிதம் மற்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த ஆண்டி லாவது பழனி-ஈரோடு ரெயில் திட்டத்திற்கான பணிகளை தொடங்க முன்வரவேண்டும். தற்போது ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்ற போதிலும் முதல்கட்ட பணிகளை தொடங்கி கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் வணிகர்கள் தெரிவிக்கை யில்,

    மஞ்சள் மாநகரான ஈரோட்டுக்கும், பழனிக்கும் இடையே அகல ரெயில்பாதை திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுக்கும் மேல் கனவாகவே உள்ளது.ஒவ்வொரு முறை பாராளுமன்ற தேர்தல் வரும்போது இப்பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் இன்னும் நிறைவேற்றப்படா மல் உள்ளது.

    இத்திட்டம் நிறைவேறி னால் வெளி நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து அன்னியச் செலவாணி நாட்டிற்கு கிடைக்கும். பழனிக்கு வரும் பக்தர்களும் அதிகரி ப்பார்கள். எனவே மத்திய அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

    • இறந்தவர் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தனியார் தோட்டம் வழியாக மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
    • எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் புதூர் மயானத்திற்கு கொண்டு சென்றனர். போகும்வழியில் ஆற்றில் தண்ணீர் போனதால் செல்லமுடியவில்லை.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது தோட்டத்து வழியாக சென்றனர். ஆனால் இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியசாமியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் தர்மலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெரியசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    மங்களப்பட்டி புதூர் மயானத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்து தர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மார்ச் 7-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மார்ச் 8-ந்தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 21-ந்தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலுக்கு வந்தடைவார்கள். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

    அதையடுத்து கோவிலில் பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். அன்றையதினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து, நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிக்கப்படும். பின்னர் 24-ந்தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் 3-ந்தேதி அன்ன வாகனத்திலும், மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுத்தல், கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி மார்ச் 7-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலையில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார்.
    • வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரகாந்தி. இவர் பணியில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் தென்மண்டல ஐ.ஜி.க்கு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த அப்போதைய திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரிக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியின் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா விசாரணை மேற்கொண்டார்.

    புகார் அளித்த பெண் காவலர், அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீரகாந்தி தனது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை பெண் காவலருக்கு அனுப்பி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார். கடந்த 2 வருடமாக பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.

    இந்நிலையில் வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரகாந்தி திண்டுக்கல் மதுவிலக்கு மற்றும் எஸ்.பி. தனிப்படை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலியல் புகாரில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×