என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் வசந்த காலத்தை வரவேற்கும் தேன் சிட்டுக்குருவிகள் முகாம்
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த மாதம் கடும் உறை பனி நிலவியது.
- கோடை காலத்தை நோக்கி பருவநிலை நகர்வதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த மாதம் கடும் உறை பனி நிலவியது. அதன் பிறகு தற்போது பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ணம் காணப்படுகிறது. தற்போது பனிக்காலம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கி அதன் தொடர்ச்சியாக வசந்தகாலம் வர உள்ளது. கோடை காலத்தை நோக்கி பருவநிலை நகர்வதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமலும், கடும் குளிர் இல்லாமலும் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தேன் சிட்டுக்குருவிகள் அதிக அளவு முகாமிட்டுள்ளன. பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற காலம் என்பதால் இவை தனது கீச் குரலில் ரீங்காரமிட்டபடி மரங்களில் தங்கியுள்ளன. சிட்டுக்குருவிகளின் செல்ல குரலை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் பல வண்ண நிறங்களில் காணப்படும் இதன் அழகையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
வசந்தகாலத்தில் கொடைக்கானலில் பல்வேறு வகையான பூக்கள் பூக்கும் என்பதால் அந்த பூக்களில் இருந்து தேனை பருக இந்த பறவைகள் வருவதாக பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இந்த குருவிகள் தேன் சிட்டுக்குருவிகள் என அழைக்கப்படுகிறது.






