search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

    • மார்ச் 7-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மார்ச் 8-ந்தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 21-ந்தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலுக்கு வந்தடைவார்கள். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

    அதையடுத்து கோவிலில் பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். அன்றையதினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து, நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிக்கப்படும். பின்னர் 24-ந்தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் 3-ந்தேதி அன்ன வாகனத்திலும், மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுத்தல், கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி மார்ச் 7-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலையில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×