என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது.
    • மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் நினைவு சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது. விழாவிற்கு மதுரை முகவை திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜே.சி. குழுமத்தைச்சார்ந்த ஜெயசுரேஷ், ஜெய திலகர், ஜெயமனோகர், ஜெயபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஈடன் கார்டன் உரிமையாளர் கென்னடி கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் எட்வின் செல்லையா வரவேற்புரை ஆற்றினார்.பள்ளியின் தலைமைஆசிரியை ஷீபா நன்றி கூறினார். குருத்துவசெயலர் ரவீந்திரவிக்டர்சிங் நிறைவு ஜெபம் செய்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கடந்த சில மாதங்களாக குடிநீர், சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை
    • கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரி தெரிவித்தவுடன் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர், சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பலமுறை யூனியன் அதிகாரிகள் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு, கிருஷ்ணா நகர், மல்லையாபுரம் காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். பின்னர் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், தங்கள் பதவிக்கு விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரி தெரிவித்தவுடன் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தமிழகத்தில் நடைபெறுவது விரோத ஆட்சியாகும், அவர்களது இயலாமையால் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகின்றனர்.
    • அண்ணாவின் பெயரை மறைத்து கருணாநிதி பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காந்தி கலையரங்கத்தில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் பிரதி கவுண்டர் தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் , ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, நகர அவைத் தலைவர் ஷேக் ஒலி, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் ஷேக் தாவுது, மாவட்ட கவுன்சிலர்கள் சின்ன கவுண்டர், பார்வதி மணிகண்டன், விவசாய அணி செல்லையா, பேச்சாளர் சுல்தான் உள்ளிட்ட பலர் பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது, தற்போது தமிழகத்தில் நடைபெறுவது விரோத ஆட்சியாகும், அவர்களது இயலாமையால் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகின்றனர். அண்ணாவின் பெயரை மறைத்து கருணாநிதி பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆரும், அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் அண்ணாவின் புகழை பெருமைப்படுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதைக் காத்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய அரசு அண்ணாவின் பெயரை மறந்து விழா நடத்தி வருகின்றனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் சனாதனம் என்ற பிரச்சனையை கையில் எடுத்து மக்களை திசை திருப்பி வருகின்றனர். தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியல் மக்களிடம் இனி எடுபடாது. மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநில மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். அனைத்து மக்களுக்கும் விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முதல்-அமைச்சர் நடுநிலையாக செயல்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது.

    இதற்கு காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கண்ட இடங்களிலும் தாராளமாக நடக்கிறது. இதனால் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் அரசு பாதுகாப்பு உத்தரவாதம் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். நகர நிர்வாகி கருப்பையா நன்றி கூறினார்.

    • தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    வேடசந்தூர்:

    என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

    தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

    சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.

    செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா மகள் என்பதற்காக டி.என்.ஏ டெஸ்ட் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் அளிக்க தயாராக உள்ளேன்.
    • அகில இந்திய எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயராகும்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியபடி வலம்வரும் ஜெ.ஜெயலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன்பாபு எனது தந்தை. எனது தாயாரை பல காரணங்களுக்காக நான் சந்திக்கவில்லை. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது 2 முறை சந்தித்துள்ளேன். கடைசியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரு முறை சந்தித்தேன். நடிகையாக இருந்தபோது போயஸ்கார்டன் வீட்டில் வசித்துள்ளேன்.

    அவர் எழுதிய டைரி என்னிடம் உள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் என்வசம் உள்ளன. பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அடையாயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மகள் என்பதற்காக டி.என்.ஏ டெஸ்ட் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் அளிக்க தயாராக உள்ளேன்.

    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளேன். அகில இந்திய எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயராகும். கட்சியின் சின்னம் இரட்டைரோஜா. இரட்டை இலைக்கு பதிலாக அல்லது போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காகத்தான் கொடைக்கானல் வந்துள்ளேன். எம்.பி தேர்தலில் 39 தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும். ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது. எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    எனது கட்சியின் கொள்கையே எனது அம்மாவின் ஆசைதான். ஜெயலலிதாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும் மலைகிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் தீ பிடித்தது. இதில் ராஜா மற்றும் கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 2 பேர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆலையை நடத்தி வந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள், தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
    • இந்நிலையில், உயர் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததால், அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, தெற்கு மேட்டுப்பட்டி வழியாக, தூத்துக்குடியில் இருந்து கொச்சின் வரை மின்சாரம் உயர் மின் கோபுரம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. செம்பட்டி அடுத்த, வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட, வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள், தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், உயர் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததால், அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர். அதன்பின்னர் அவர், நடவடிக்கை எடுத்ததின் பேரில், விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர்.

    அதன்பின்னர், மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தெற்கு மேட்டுப்பட்டி பகுதிக்கும் சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீடு தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பணிகள் செய்ய விடாமல் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கொழுந்தான் (58), மாரிமுத்து (45), விக்னேஷ் (25), சரவணன் (42) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீண்டும் மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்குகிறோம் என கூறி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுநாள்வரை முறையாக உரிய இழப்பீடு தொகையை தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றனர். இந்நிலையில் மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் பணிகள் செய்ய விடாமல் தடுத்ததாக தெற்கு மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீது செம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி விபத்து தொடர்பாக வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சுந்தரபுரியில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் பாறை உடைக்க வைத்த வெடி, வெடித்து விபத்துக்குள்ளானது.

    இந்த வெடி விபத்தில், அரசம்பட்டியைச் சேர்ந்த நாராயணன், சுந்தரபரியை சேர்ந்த வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
    • குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும்.

    அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொசுப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • குவாரியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாறை வெடித்து சிதறியது.
    • 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுந்தராபுரியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் இன்று பாறைகளை உடைப்பதற்காக அதிக சக்தி கொண்ட வெடிகள் வைக்கப்பட்டது.

    அதன் அருகிலேயே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாறை வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலைபார்த்து கொண்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த நாராயணன்(47), சுந்தராபுரியை சேர்ந்த வேலு(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாறைகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து ஓட தொடங்கினர். தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் வேறு எங்கேனும் வெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்று குவாரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திண்டு க்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன் பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் தாடிக்கொம்பு பீடரில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னமநாயக்கன் பட்டி, பூதிப்புரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய் மூகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    • போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் ராமன் (23) இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பின்பு உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.

    தகவலறிந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மிதந்த ராமன் உடலை போலீசார் மீட்டனர்.இதில் துர்நாற்றம் அதிகமாக வீசியது. போலீசாருக்கு அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே ராமனை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மொட்டமலைபட்டியை சேர்ந்த குணசேகரன், கார்த்திக் ராஜா, சின்னக் கரந்தி, அம்மணி உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ×