என் மலர்
திண்டுக்கல்
- பெண் திண்டுக்கல் பஸ் நிலையம் மதுரை மார்க்கத்தில் பஸ் செல்லும் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தினார்.
திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டுப்பட்டி மாட்டுப்பட்டி காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி சுமித்ரா (வயது37). இவர் இன்று திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தார். மதுரை மார்க்கத்தில் பஸ் செல்லும் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் சுமித்ராவை சரமாரியாக குத்தினார். இதில் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்தார். சுமித்ரா அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த சுமித்ராவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பஸ் நிலையத்தில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பழைய கரூர் சாலை செல்லமந்தாடி, ஜி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது70). இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளனர். பாண்டித்துரைக்கு காது சரிவர கேட்காது.
இந்நிலையில் உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்தபோது முள்ளிப்பாடி அருகே ரயில் மோதி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் திருமணங்கள், காதணி விழாக்கள் களை கட்டி காணப்பட்டது.
- திருஆவினன்குடி கோவிலில் திருமணம் செய்து கொண்டவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது. மேலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடி வருகின்றனர்.
இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் திருமணங்கள், காதணி விழாக்கள் களை கட்டி காணப்பட்டது. இதனால் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
பழனியில் நேற்று மாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கூடினர். ஆவணி மாத முகூர்த்தம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது. திருஆவினன்குடி ேகாவிலில் திருமணம் செய்து கொண்டவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானை ப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவு பக்தர்கள் வந்ததால் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் களைகட்டிய திருமணங்களால் முக்கிய கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சித்திவிநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பல திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
- கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதிய சுகாதார வளாகம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது .
- மேலும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை குண்டுபட்டியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு உபகரணங்கள் மற்றும் சுகாதார வளாகம் தேவையாக இருந்தது. இதன் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதிய சுகாதார வளாகம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது .
விழாவிற்கு செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவருமான குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார்.
முன்னதாக அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசை ஜான் வரவேற்றார். பெண்களுக்கான சுகாதார வளாகத்தை கல்வி அலுவலர் குகப்பிரியா, மாணவர்களுக்கான சுகாதார வளாகத்தை முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் கிருபா ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- புறம்போக்கு நிலங்களில் செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வரும் லாரிகள் அதிவேகமாக வருவதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.
செம்பட்டி:
செம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய், குளம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் லாரிகள் அதிவேகமாக வருவதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செம்பட்டி அருகே உள்ள பிரவான்பட்டி பகுதியில் செம்மண் ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு சாலையில் அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்தது. செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் பைக்கில் வந்த அடியனூத்தைச் சேர்ந்த சக்திவேல் (32), செம்பட்டியைச் சேர்ந்த அற்புதம் (50) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடியதால் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
லாரிகள் அதி வேகமாக செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும்.
- 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டை, கொடை ரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார் பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டு விநாயகர் சிலைகள் நிலக்கோட்டை நால்ரோடு வந்து அடையும். அங்கு இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் மொத்தம் 115 சிலைகள் கலந்து கொள்வதாக இந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி 115 கிராமங்களிலும் காலை முதல் ஊர்வலம் கிளம்பி நிலக்கோட்டை நால்ரோடு வந்தடைந்து
அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அணைப்பட்டி வைகை ஆற்றில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார். இதை போன்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆன்மீக சேவா சங்கம் சார்பாக சிலுக்குவார் பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்காக சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்டச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:- நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி யில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் , மற்றும் ஆன்மீக சேவா சங்கமம் இணைந்து 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார்.
- கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
- உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
பழனி:
என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். மாரியம்மன் கோவில் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை ஏற்படும். 2014க்கு முன்பு 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. 15 ஆண்டுகள்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் 200 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டுமோ? அதுபோன்ற வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.
தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா.
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது.
காங்கிரசை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள் மம்தாவும், கெஜ்ரிவாலும்.
தற்போது இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இதை மக்கள் எவ்வாறு ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பதும், இந்து தர்மத்தை ஒழிப்பதும்தான் இந்தியா கூட்டணியின் கொள்கை. இந்த கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 400 எம்.பி.க்களோடு மோடியை மீண்டும் பிரதமராக அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் களவு போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலை ஏற்படும். பழனி கோவில் சொத்துக்களும் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகால எதிர்காலத்தை யோசித்து பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விருதுநகரில் நாளை நடைபெறும் தனது நண்பரின் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
- நண்பர்களான பிரபுகுமார், முத்துக்குமார் ஆகியோரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
வேடசந்தூர்:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் அரவிந்த் (26). இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விருதுநகரில் நாளை நடைபெறும் தனது நண்பரின் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் இன்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மற்ற நண்பர்களான பிரபுகுமார், முத்துக்குமார் ஆகியோரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் 4 ரோடு பகுதியில் இவர்கள் வந்து கொண்டிருந்தபோது தவறான பாதையில் எதிரில் வந்த மணல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் அரவிந்த் உள்பட மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
2-வது நாளாக நேற்று காளியம்மன் கோவில் வளாகத்தில் 303 பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விஸ்வஹிந்துபரிசித், ஆன்மீக சேவாசங்க நிர்வாகிகள் மற்றும் சிலுக்குவார்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
- கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலை யம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்க ம்பட்டி, பெருமாள் கோவி ல்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.
தமிழகத்தில் நாளை ஆவணி மாத கடைசி மூகூர்த்தம் என்பதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை அதிரடி யாக உயர்ந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கடந்த வாரம் ரூ.150 க்கு விற்பனையான கனகாம்ப ரம் தற்பொழுது ரூ.800க்கு விற்பனையாகிறது. ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூ.800க்கு விற்பனை ஆகிறது. ரூ.250 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.120க்கு விற்பனையான சம்பங்கி ரூ.400க்கும் விற்பனையாகிறது. ரூ.50 விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. செண்டுமல்லி கிலோ ரூ.30 க்கும் வாடாமல்லி கிலோ ரூ.35க்கும் விற்பனை ஆகிறது.
- வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரும், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்துதல், நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்வது போன்ற பயிற்சிகளை வழங்கினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர்களில் வைரஸ் தாக்கத்தை தடுப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வில்பட்டி கிராமத்தில் உருளைகிழங்கு சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் வயலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரும், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நோய் எதிர்ப்பு கொண்ட ரகங்களை பயிரிடுதல், நோய் தாக்கப்பட்ட நடவு பொருட்களை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்துதல், நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்வது போன்ற பயிற்சிகளை வழங்கினர்.
- விலைவாசி உயர்வு, சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்சினை களால் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர்.
- அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்தால்தான் பெண்களுக்கு உரிமை த்தொகை ரூ.1000 கிடைத்து ள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள்விழா பொது க்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பேரவை செயலாளர் பாரதிமுருகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க பொருளாளரு மான திண்டுக்கல் சீனிவா சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய தாவது, தி.மு.க ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. அமலாக்கத்துறையால் ஒரு அமைச்சர் கைதாகி சிறையில் இருக்கிறார்.
தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு, சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்சினை களால் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர். இதை திசைதிருப்ப முதல்-அமைச்சர் தனது மகனை சனாதனம் குறித்து பேச வைத்துள்ளார். இந்த சர்ச்சை தீயாக மாறியதால் பல பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டதால் சனாதனம் குறித்து யாரும் பேசக்கூடாது என முதல்-அமைச்சர் அறிக்கை விடு கிறார்.
அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்தால்தான் பெண்களுக்கு உரிமை த்தொகை ரூ.1000 கிடைத்து ள்ளது. அதுவும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு தான் கொடுக்கப்படுகிறது. அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வரை அ.தி.மு.க போராடும். ஒவ்வொரு நபருக்கும் ரூ.29 ஆயிரம் தி.மு.க அரசு பாக்கி வைத்துள்ளது. நல்ல வேளையாக ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படு கிறது. இல்லையென்றால் தி.மு.க.வினர் அதிலும் கமிசன் வசூலித்திரு ப்பார்கள்.
ஒருவீட்டுக்கு ரூ.3.5 லட்சம் கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை தி.மு.க அரசு மாற்றியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகி யும் பேனா மற்றும் மை தேடிக்கொண்டி ருக்கின்ற னர். மேலும் கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு, 5 லட்சம் காலிப்பணி யிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் என பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசின் வருவாய் குடிமகன்களை நம்பி உள்ளது. ரூ.1000 பெண்க ளிடம் கொடுத்துவிட்டு அதை குடிமகன்கள் மூலம் மதுவிலை உயர்த்தி பறிக்கப்படுகிறது. பட்டியலைமைப்பை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. எனவே சிறுபான்மையினர், பட்டியலினமக்கள் பாதுகாப்பாக இருக்க அ.தி.மு.கவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெ ண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ,தலைமை கழக பேச்சாளர் உமாசங்கர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி, நடராஜன், பிரேமகுமார், அவை தலைவர் சங்கரநாராயணன், முன்னாள் மாநில பொது க்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திவான் பாட்சா, ரவிக்குமார், ஜெயபாலன்,ஜெயராமன், பழனிச்சாமி, லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் . இறுதியில் மாநகராட்சி எதிர்கட்சி துணைதலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.






