என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்தது மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது காரணமாக இன்று பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பறிக்கப்படும் பல்வேறு விதமான பூக்கள் திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது. இதனால் திண்டுக்கல் பூமார்க்கெட் எப்போதும் கூட்டமாக காணப்பட்டது.

    தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூமார்க்கெட் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நேற்றுவரை ரூ. 3,500க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று கிலோ ரூ. 600க்கு விற்பனையானது. அதேபோல் ரூ. 300க்கு விற்ற சம்பங்கி ரூ. 30க்கும், முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.200, ஜாதி பூ ரூ.250, கோழிகொண்டை ரூ.20 அரளி ரூ.20க்கும் விற்பனையானது.

    இது குறித்து வியாபாரி போஸ் கூறுகையில்,

    கடந்த 2 நாட்களாக முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.3,500 வரை விற்கப்பட்டது. பூ மார்க்கெட்டிற்கு 30 டன் வரை பூக்கள் வரத்து வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்தது மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது காரணமாக இன்று பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
    • கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுைக, பேரிஜம் ஏரி உள்ளிட சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

    கடந்த 11ந் தேதி காட்டு யானைககள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனவே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 19ந் தேதி (இன்று) முதல் செயல்படும். பொதுமக்கள் நேரடியா கவோ, தொலைபேசி மூலமாகவோ இந்த மையங்களை தொடர்பு கொண்டு தங்களின் மனு குறித்த தகவல்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
    • மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்ற ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    மகளிர் உரிமைத்தொகை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 14 உதவி மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15ந் தேதி தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பான பொது மக்களின் குறைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டா ட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் 19ந் தேதி (இன்று) முதல் செயல்படும். பொதுமக்கள் நேரடியா கவோ, தொலைபேசி மூலமாகவோ இந்த மையங்களை தொடர்பு கொண்டு தங்களின் மனு குறித்த தகவல்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்ற ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே மனு அளித்த பொதுமக்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சி யருக்கு இணையவழியில் இ-சேவை மையம் மூலம் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்த சந்தேகங்களுக்கு உதவி மைய எண்ணை ெதாடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நத்தம் கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் சலங்கை அணி விழா எனும் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.
    • இதில் சிறுமிகள் முதல் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.

    நத்தம்:

    நத்தம் கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் சலங்கை அணி விழா எனும் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நத்தம் இதயா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறுமிகள் முதல் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு நடனம் ஆடினர். இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.

    இதே போல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அருகில் உள்ள முருகப் பெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. மேலும் காமாட்சி மவுன குருசாமி மடத்தில் பூஜைகள் நடந்தது.

    இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போலவே நத்தத்தில் பெரிய விநாயகர்,வெற்றி விநாயகர், லெட்சுமி விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக வழிபட்டனர்.

    • மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கன மழையாக வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரம் இடை விடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ஏரிச்சாலை, கலையரங்கம், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையினால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாலையில் பெய்த மழையினால் அவர்கள் விடுதிக்கும் திரும்ப முடியாமல் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் தவித்தனர். மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    செண்பகனூர் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வத்தலக்குண்டு மலைச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நகராட்சி மண் அள்ளும் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட மண் சரிவுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில நாட்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியிலும் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே கன மழை சீசனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    கொடைக்கானலில் ஒரே நாளில் 5 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் மூளைத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
    • மாணவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவிலான சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ரமேஷ் மகன் கோகுல் (வயது 11). இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் மூளைத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    மாணவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவிலான சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான மூளைத்திறன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் மாசானம் தனது பேரனின் திறமையை வெளிக் கொண்டு வந்த ஆசிரியர்களுக்கும், தனியார் பயிற்சி மைய நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    • பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறையில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் வீடு கட்டுவதாக இவர் மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

    காண்டிராக்டருக்கு நடிகர் பாபி சிம்ஹா பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது. ஜமீரின் உறவினர் உசேனும் பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள் என்பதால் இந்த கட்டிட பணிகளை அவர் ஒத்துக் கொண்டார்.

    இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காண்டிராக்டர் ஜமீரின் உறவினர் உசேன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப். படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து வீடு கட்டும் பிரச்சினையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

    எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.

    திண்டுக்கல்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இருந்தபோதும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து அதனை நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். மேலும் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளம் முழங்க எடுத்துச் சென்று அதனை கரைக்க வந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், தரசில்தார் செழியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைநதனர்.

    அனுமதி வழங்கப்படாத இடத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்ாான சூழல் நிலவியது. போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.

    மேலும் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் மற்றும் சங்கர் கணேஷ் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
    • ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 நாட்களாக ஆவணிமாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.

    ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மல்லிகை கிலோ ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.100, பட்டன் ரோஜ் ரூ.150, செண்டு மல்லி ரூ.20, கலர் பிச்சி ரூ.300, வெள்ளை பிச்சி ரூ.400, செவ்வந்தி ரூ.100, முல்லை ரூ.400, காக்கரட்டான் ரூ.400, வாடாமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.20, துளசி ரூ.30, மரிக்கொழுந்து ரூ.40 என விற்பனை ஆனது.

    • திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
    • விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    திண்டுக்கல்:

    முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.

    இங்குள்ள 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. அதனை தொட ர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இதே போல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகல்நகர் ரயிலடி சித்தி விநாயகர் கோவில், ரவுண்டு ரோடு கற்பக விநாயகர் கோவில், நேருஜிநகர் கணபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விநாயகருக்கு பிடித்த மான கொலுக்கட்டை, சுண்டல், பழங்கள், பொரிகடலை போன்றவை படையலாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய வடி விலான களிமண் சிலைகள் தயார் செய்து விற்கப்பட்டன. இந்த சிலைகள் ரூ.10 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை யில் விற்பனையானது. விதவிதமான வடிவங்களில் பல வண்ணங்களில் தயார் செய்து விற்கப்பட்டன. மேலும் விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ மாலையும் விற்பனை செய்யப்பட்டன.

    இதுதவிர பூஜைக்கு தேவையான பூக்கள், தேங்காய், வாழைப்பழம், பேரிக்காய், கொய்யா, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் அதிக அளவில் விற்பனை யாகிறது.

    • கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
    • பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவு வந்து செல்லும் நிலையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான ஸ்டால்களில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வார்கள்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.35க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ.5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது.

    டின் பஞ்சாமிர்தம் ரூ.40ல் இருந்து ரூ.45க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ.35ல் இருந்து ரூ.40க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. புதிய விலையை பேனாவால் மாற்றி விற்பனை நிலையங்களில் வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து வி.எச்.பி. மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், தமிழகத்திலேயே அதிக வருவாய் கொண்ட கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. அதனால்தான் மத்திய அரசு பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

    கோவிலுக்கு வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையை எதற்காக உயர்த்த வேண்டும். நெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்டதால் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    பழனிச்சாமி : பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி அதனை தங்கள் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அவ்வாறு ஒருவர் 50 முதல் 100 டப்பாக்கள் வரை கூட வாங்கிச் செல்வார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வரும் பக்தர்கள் இது போன்ற கூடுதல் பஞ்சாமிர்தங்களை வாங்கிச் செல்ல முடியாது. வணிக நிறுவனங்கள் போல லாப நோக்கில் தேவஸ்தான பிரசாதங்களை விற்கக்கூடாது. இதில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மூலம் தயார் செய்யப்படுவது. திருப்பதியில் இலவச லட்டு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு தேவைப்பட்டால் விலை கொடுத்து லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அங்கு கூட விலை ஏற்றப்படவில்லை. அதே போல பழனி கோவில் பஞ்சாமிர்தத்தையும் பழைய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றார். 

    • குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே மாதம்கோடை கால சீசனாகும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை கவரும் விதமாக கோடை விழா மலர்க்கண்காட்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஆப் சீசன் எனப்படும் 2வது சீசன் நடைபெறும். அப்போது குளிர்ந்த சீதோசனம் நிலவி அவர்களை உற்சாகப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், குணாகுகை, பிரையண்ட் பார்க், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, அப்சர்வேட்டரி பகுதிகளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் பகல் பொழுதில் இதமான வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் என இதமான சீதோசனத்தை அனுபவித்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோவில், பழனிமலை காட்சிப்பகுதி, மன்னவனூர் எழும்பள்ளம் ஏரி, கூக்கால் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி விளங்குகிறது. இதற்காக வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் ஏரியை சுற்றி சவாரி செய்ய சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் யானைகள் குட்டிகளுடன் அங்கு முகாமிட்டதால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகள் பேரிஜம் ஏரிப்பகுதியிலேயே சுற்றி வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆர்வமுடன் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×