என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. 
    கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களில் 3,705 பேருக்கு 2020-21-ம் ஆண்டில் அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட உள்ளது.

    வாகனம் சொந்த நிதியில், வங்கிக்கடன் மற்றும் ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்கள், விண்ணப்பிக்கலாம்.

    இந்த விண்ணப்பங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். விண்ணப்பிக்கும் போது எல்.எல்.ஆர். (ஓட்டுனர் பயிற்சி சான்று) சான்று பெற்றிருப்பது அவசியமாகும்.

    விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்று, பணி செய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாங்க விரும்பும் இருசக்கர மோட்டார் வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்திலோ, நேரடியாகவும், பதிவு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    வடலூரில் விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜா(வயது 44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம், ஞானசபை வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், ராமலிங்கத்தை மறித்து ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, தில்லை நடராஜன்(48), மோகனசுந்தரம் மனைவி கஸ்தூரி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    போலி இ-பாஸ் பெற்று கடலூருக்குள் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் எச்சரித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்குள் நுழைபவர்களை பரிசோதனை செய்யும் வகையில் சின்ன கங்கணாங்குப்பம், கண்டரக்கோட்டை உள்பட 5 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் மற்றும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சோதனை சாவடிகள் வழியாக வந்த 2,543 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. அதில், 822 வாகனங்கள் மட்டுமே இ-பாஸ் பெற்று வந்துள்ளன.

    எனவே போலியான இ-பாசுடன் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து இ-பாஸ் பெற்று வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு முகாம்களில் தங்க விருப்பம் இல்லாதவர்கள் தனியார் ஓட்டல், தங்கும் விடுதிகளில் கட்டணத்துடன் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைகளில் பரிசோதனையை தீவிரப்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    வணிகர்கள் தங்களது விற்பனை நேரத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கும் தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருவதை பொதுமக்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
    கடலூரில், சுயஉதவிக்குழு பயிற்றுனர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பயிற்சியை மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளை சேர்ந்த சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுனர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு 2 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு பயிற்சி கடலூர் பாதிரிக்குப்பம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது. பயிற்சியை மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா ஆலோசனையின் பேரில் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே நீங்கள் அனைவரும் இந்த நோய் தீரும் வரை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதோடு, கொரோனாவை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவேண்டும்.

    அப்போது தான் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இங்கு பயிற்சி பெறும் நீங்கள் உங்கள் ஊராட்சிகளில் சென்று பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் சுயஉதவிக்குழு பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தார். வீடியோ மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 51 ஊராட்சிகளை சேர்ந்த பயிற்றுனர்கள், ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
    விருத்தாசலம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜி(வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சி.கீரனூர் மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் மருந்து வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராஜி ஓட்டினார்.

    அப்போது சி.கீரனூரை சேர்ந்த தனசேகரன் மகன் காண்டீபன் என்பவர், ராஜி உள்ளிட்ட 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என கேட்டு, ராஜியை தாக்கியதோடு, மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோர், ஏன் தகராறு செய்கிறாய்? என காண்டீபனை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த காண்டீபன் ஆதரவாளர்களான ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு(42), இளஞ்செழியன்(33), தனசேகரன்(55), சரண்ராஜ்(22), விஜயகுமார்(37), சசிகுமார்(38) ஆகியோருக்கும் ராஜி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் தாக்கப்பட்ட ராஜி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த புகழேந்தி, வினோத்குமார் ஆகியோர் ராஜியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மேலப்பாளையூரை சேர்ந்தவர்களுக்கும், சி.கீரனூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதையடுத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே உயிரிழந்த ராஜியின் ஆதரவாளர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து, ராஜியை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தனர். அதன்அடிப்படையில் காண்டீபன் உள்பட 7 பேரை பிடித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    புவனகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று பயணியர் விடுதி அருகே புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து திரும்பி செல்ல முயன்றனர். இதைபார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து புவனகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் சிதம்பரம் கொய்யாப்பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மாயவன் மகன் பிரபு(24) என்பதும், மற்றொருவர் அவருடைய நண்பரான திருச்சி லால்குடியை சேர்ந்த மதி மகன் சூரியா(20) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து புவனகிரி சின்னப்ப முதலியார் தெருவை சேர்ந்த முபாரக்அலி மற்றும் அவரது உறவினர் இதயத்துல்லா ஆகியோருக்கு சொந்தமான விலை உயர்ந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, பிரபு, சூரியா ஆகியோரை கைது செய்ததுடன் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். மேலும் கைதான 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முதுநகர் மணிக்கூண்டு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கருணாகரன் மகன் அப்பு என்கிற அபினேஷ் (வயது 21), நித்தியானந்தம் மகன் ரித்தீஸ்(19), கம்பளிமேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ஈசமணி என்கிற கீர்த்திவாசன்(20) என்பதும், கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும், அதனை ஆலப்பாக்கம் குறவன்மேட்டை சேர்ந்த ஏழுமலை மகன் தீனா என்கிற தமிழரசன், குறிஞ்சிப்பாடி விருப்பாட்சியை சேர்ந்த பாபுதீன் மகன் ஹனீப்(21) ஆகியோரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அபினேஷ் உள்ளிட்ட 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்கள் கூறிய தகவலின்படி தீனா, ஹனீப் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 19 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேஷ், ரித்தீஸ், கீர்த்திவாசன், தீனா, ஹனீப் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 19-ந் தேதி (அதாவது நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், ஆனி திருமஞ்சன விழா நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இதற்கிடையே ஆனி திருமஞ்சன விழாவுக்கான ஏற்பாடுகளை தீட்சிதர்கள் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விழாவை நடத்துவது குறித்து சிதம்பரத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தீட்சிதர்கள், சுவாமியை உள்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி தரவேண்டும் என கூறினர். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால், அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

    இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆனி திருமஞ்சன விழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசுகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் எளிய முறையில் ஆனி திருமஞ்சன விழாவை நடத்திக் கொள்ளலாம்.

    விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோவிலுக்குள்ளே பூஜைகளை நடத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கொரோனா வைரஸ் பரவும் சூழல் உள்ளதாலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தக் கூடாது. மேலும் விழாவுக்கு ஊரடங்கில் இருந்து எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படாது என்றார்.

    கூட்டத்தில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆனிதிருமஞ்சன விழா தொடங்குகிறது.
    கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் இந்த வைரஸ் பாதிப்பால் தினம் தினம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசுடன், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட 95 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 568 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 471 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 997 பேருடைய உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்தது. இதில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் 3 பேர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த 3 பேருடைய எண்ணிக்கை நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    இதில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவு துணை இயக்குனரான சுமார் 50 வயதான டாக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த நபருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.

    இதுபற்றி அறிந்த காசநோய் பிரிவு துணை இயக்குனர், அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாக்டரிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த டாக்டர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தவிர கடலூரை சேர்ந்த 4 செவிலியர்களுக்கும், சென்னையில் இருந்து கடலூர் வந்த 50 பேருக்கும், செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 20 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர், ஒடிசாவில் இருந்து வந்த 6 பேர், கேரளா, கர்நாடகா, டெல்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒரத்தூர், புவனகிரியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதில் பண்ருட்டியை சேர்ந்த நபர், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உமிழ்நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு யார் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒருவர் மட்டுமே குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். இன்னும் 355 பேருடைய பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

    மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கார் டிரைவரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த நெய்வேலி கணினி மைய உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    விருத்தாசலம் தாலுகா கொடுக்கூர் மேற்குதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் சங்கர் (வயது 38). கார் டிரைவர். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

    அதில் நான் கடந்த 2018-ம் ஆண்டு நெய்வேலியில் உள்ள கணினி மையத்திற்கு சென்றேன். அங்கிருந்த அதன் உரிமையாளர் மந்தாரக்குப்பம் பாலாஜிநகரை சேர்ந்த ஜோதி மகன் பிரவீன்குமார் (32) என்பவர் தனது நண்பரான வடக்குசேப்ளாநத்தம் காமராஜ்நகரை சேர்ந்த வெங்கடாசலம் (46) மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    அதற்கு ரூ.9 லட்சம் வரை செலவாகும் என்றும், ஆனால் முன்பணமாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றார். இதை உண்மை என்று நினைத்த நான், பிரவீன்குமார், வெங்கடாசலத்திடம் பேசி, அவர்கள் கூறியபடி வெங்கடாசலம் பெயரில் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தினேன். ஆனால் அவர்கள் எனக்கு அரசு வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டேன். அதன்பிறகு 2 பேரும் எனது வீட்டுக்கு வந்து ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி தந்தனர். மீதி ரூ.4½ லட்சத்தை தரவில்லை. பின்னர் நெய்வேலி கணினி மையத்திற்கு சென்று பிரவீன்குமார், வெங்கடாசலம் ஆகிய 2 பேரிடமும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் பணத்தை தர முடியாது. மீறி கேட்டால் கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். ஆகவே மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரவீன்குமார், வெங்கடாசலம் ஆகிய 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் வெங்கடாசலம் தற்போது பால் வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கடலூரில், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த அங்காடியில் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் எதுவும் வைக்காமல் கடை நடத்தியதாக புகார் வந்தது.

    இதையடுத்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், தாசில்தார் செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சி, சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரகுநாதன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் திடீரென சென்று ஆய்வு நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதில் 6 கிலோ பூண்டு, 25 லிட்டர் குளிர்பானம், 5 கிலோ சாக்லெட், 10 லிட்டர் எண்ணெய், 5 கிலோ ஊறுகாய் என 16 வகையாான பொருட்கள் காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான எந்த சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த அங்காடி உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, அழித்தனர். இது தவிர அந்த அங்காடி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி, ஒரு வாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதேபோல் சூரப்பநாயக்கன்சாவடி செல்லும் மெயின்ரோட்டில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் அழுகிய பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்த அதிகாரிகள் அங்கு சென்றும் ஆய்வு நடத்தினர். அதில் அழுகிய மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, கத்திரிக்காய், தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த அங்காடி உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கி, ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    ×