search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் கொலை
    X
    வாலிபர் கொலை

    விருத்தாசலம் அருகே இருதரப்பினர் மோதலில் வாலிபர் அடித்துக்கொலை

    விருத்தாசலம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜி(வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சி.கீரனூர் மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் மருந்து வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராஜி ஓட்டினார்.

    அப்போது சி.கீரனூரை சேர்ந்த தனசேகரன் மகன் காண்டீபன் என்பவர், ராஜி உள்ளிட்ட 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என கேட்டு, ராஜியை தாக்கியதோடு, மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வினோத்குமார், புகழேந்தி ஆகியோர், ஏன் தகராறு செய்கிறாய்? என காண்டீபனை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த காண்டீபன் ஆதரவாளர்களான ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு(42), இளஞ்செழியன்(33), தனசேகரன்(55), சரண்ராஜ்(22), விஜயகுமார்(37), சசிகுமார்(38) ஆகியோருக்கும் ராஜி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் தாக்கப்பட்ட ராஜி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த புகழேந்தி, வினோத்குமார் ஆகியோர் ராஜியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மேலப்பாளையூரை சேர்ந்தவர்களுக்கும், சி.கீரனூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதையடுத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே உயிரிழந்த ராஜியின் ஆதரவாளர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து, ராஜியை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தனர். அதன்அடிப்படையில் காண்டீபன் உள்பட 7 பேரை பிடித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×