என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.

    கடலூரில், காலாவதியான பொருட்கள் விற்பனை - பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

    கடலூரில், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த அங்காடியில் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் எதுவும் வைக்காமல் கடை நடத்தியதாக புகார் வந்தது.

    இதையடுத்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், தாசில்தார் செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சி, சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரகுநாதன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் திடீரென சென்று ஆய்வு நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதில் 6 கிலோ பூண்டு, 25 லிட்டர் குளிர்பானம், 5 கிலோ சாக்லெட், 10 லிட்டர் எண்ணெய், 5 கிலோ ஊறுகாய் என 16 வகையாான பொருட்கள் காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான எந்த சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த அங்காடி உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, அழித்தனர். இது தவிர அந்த அங்காடி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி, ஒரு வாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதேபோல் சூரப்பநாயக்கன்சாவடி செல்லும் மெயின்ரோட்டில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் அழுகிய பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்த அதிகாரிகள் அங்கு சென்றும் ஆய்வு நடத்தினர். அதில் அழுகிய மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, கத்திரிக்காய், தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த அங்காடி உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கி, ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×