என் மலர்
கடலூர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.
இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.
28-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ந் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வநிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்றபின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை கண்டித்தும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 43 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதலாமாண்டு பல் மருத்துவம் தவிர்த்து மற்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ கல்லூரி நேற்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாகவும் மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவியர் விடுதியில் உணவுக்கு பணம் செலுத்தி உள்ளோம். வெளியில் செல்ல மாட்டோம் என தெரிவித்து கலெக்டரை சந்திக்க கடலூருக்கு வந்தனர். கடலூரில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது மாணவர்கள் கூறுகையில், தமிழக அரசுடனும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடனும் பேசுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் கல்லூரி கால வரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாணவர்கள் கூறினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்களை வெளியேற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால் மாணவ-மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற மறுத்து விடுதி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை கல்லூரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 1½ வயதில் இரணியன் என்ற ஆண்குழந்தை இருந்தது.
நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயகிவிட்டது. இதைத் தொடர்ந்து வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தையை பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் குழந்தை விழுந்திருக்கலாம் என கருதி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க் கால் மற்றும் அங்குள்ள பகுதிகளில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
மேலும் மாயமான குழந்தையை கண்டுபிடிப்பதற்காக விருத்தாசலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடினர்.
இன்று காலைவீட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் வெலிங்டன் பாசன கால்வாயில் குழந்தை இரணியன் பிணமாக மிதந்தான். இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விளையாடிய குழந்தை இரணியன் வாய்க்காலில் தவறி விழுந்ததில் அடித்து செல்லப்பட்டான்.
தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.
சேலத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ்சை காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் குபேந்திரன் (வயது 47) ஓட்டினார். இன்று அதிகாலை புவனகிரி அருகே இரட்டை குளம் என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறினர்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், ஒருவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் அந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.
புதுவையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளரங்கங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 100 சதுர மீட்டருக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 200 நபர்களும், திறந்த வெளிப்பகுதிகளில் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவிகிதம் வரையிலான நபர்களும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று பங்கேற்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 150-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல்வெப்ப பரிசோதனை மற்றும் நோய் அறிகுறி குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோய் அறிகுறியற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நோய் அறிகுறி மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பின், மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்து, நெகட்டிவ் என சான்று பெற்ற பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
65 வயதுக்கு கூடுதலான மூத்த குடிமக்கள், சுவாச நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக் குறைபாடு உடையவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
ஜோதி தரிசன நிகழ்ச்சியை டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்குகள், நாடகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.
சத்தியஞானசபை பெருவெளி மற்றும் ஜோதி தரிசனம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனைத்து வகை கடைகளுக்கும், ராட்டினம் முதலான பொழுதுபோக்கு செயற்பாட்டிற்கும் அனுமதி கிடையாது. மேலும் ஜோதி தரிசன நாளன்று மது மற்றும் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது. இதுதவிர பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை, பொட்டலங்களாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலந்து கொண்டு, இரு சக்கர வாகனத்தை ஓட்டி சக போலீசாருடன் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வ அமைப்பினர் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனங்களில் நகர முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர்.
முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டுபிரசுரம் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தினர்.
இதில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன், மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.






