என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த ராம.பழனிசாமியை மாற்றி விட்டு, அதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயத்தை கட்சி தலைமை திடீரென அறிவித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த அமைச்சரின் ஆதரவாளரும், தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ராம.பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆயத்தமானார்.

    இந்நிலையில் நேற்று மாலை ராம.பழனிசாமியை மாற்றி விட்டு, அதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயத்தை கட்சி தலைமை திடீரென அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த ராம.பழனிசாமியின் ஆதரவாளர்கள் உடனடியாக கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திடீரென கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து, கல், கட்டையால் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

    மேலும் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பிரசார வாகனத்தை அடித்து நொறுக்கினர். கண்ணாடிகளையும் சுக்கு நூறாக உடைத்தெறிந்தனர். அருகில் நின்ற மற்றொரு காரின் முன் பக்க கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்தனர். பின்னர் அமைச்சா் எம்.சி.சம்பத்தின் அறைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் அவரது இருக்கையை அடித்து நொறுக்கினர்.

    மேஜையில் இருந்த கண்ணாடியையும் கீழே தூக்கி போட்டு உடைத்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கத்திற்குள் சென்ற அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி உடைத்தனர். அப்போது அமைச்சரின் மகன் பிரவீன் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் மேல் தளத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார். சத்தம் கேட்டதும் அவர் கீழே வந்தார். உடனே அவரை நோக்கி, ராம.பழனிசாமி ஆதரவாளர்கள் கல் வீசி தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அவரை கட்சி நிர்வாகிகள் மேல் தளத்திற்கு அழைத்துச்சென்று விட்டனர்.

    இருந்தாலும் அவரை சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

    இருப்பினும் இந்த தாக்குதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில் தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ராம.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    ஒரு சிலர் அலுவலகத்தின் கீழ் புறம் நின்று அலுவலகத்தை நோக்கி கற்களை வீசினர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதையடுத்து அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அமைச்சரின் மகன் பிரவீனை போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    இருப்பினும் இந்த தாக்குதலால் கட்சி அலுவலகம் போர்க்களம் போல காட்சி அளித்தது. இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    திட்டக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
    திட்டக்குடி:

    100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திட்டக்குடி பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சகாமூரி தலைமை தாங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் முன்னிலை வகித்தார். இதில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என கூறி அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். அதனை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார்.

    இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் விக்னேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், வேப்பூர் தாசில்தார் செல்வமணி, வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காட்டுமன்னார்கோவில் மற்றும் பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2¼ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வீராணநல்லூர்-பாப்பாக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பல்பு வியாபாரி சுரேஷ் என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் 72 ஆயிரத்து 700 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் காட்டுமன்னார்கோவில் சர்வராஜன் பேட்டை மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தவர்த்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணம் இன்றி ரூ.72 ஆயிரத்து 120-ஐ எடுத்துவந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் திருவாமூர் அருகே சேலம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் ரூ.89 ஆயிரத்து 420 எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கள நாதன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் தாசில்தார் பிரகாஷ், சிறப்பு திட்ட தாசில்தார் உதய குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் அதிக பணபரிவர்த்தனை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கி பணியாளர்களுக்கு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
    கடலூர்:

    சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சைலன்சமாதா இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அபய்குப்தா. மராட்டியத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், புதுடெல்லியில் இருந்து வந்த அஷிஷ் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லும் பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் அச்சகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் குறித்தும் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வருமான வரித்துறையினர் மூலம் வங்கிகளில் பண பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படுகிறது.

    வங்கி பணியாளர்கள், அதிக பணபரிவர்த்தனை நடைபெறும் வங்கி கணக்குகள் குறித்த விவரத்தினை உடனடியாக முன்னோடி வங்கி மேலாளர் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தடுக்க, கண்காணிப்பு குழுவினர் முழு நேர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 18004253168 என்ற எண்ணிலோ அல்லது 04142-220277, 220299 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றனர்.

    இதில் மாவட்ட தேர்தல் வருமான வரித்துறை அலுவலர் நெடுமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, சப்-கலெக்டர்கள் விருத்தாசலம் பிரவின்குமார், சிதம்பரம் மதுபாலன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரஸ்வதி, முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
    கடலூர்:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வசதியை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட சுமார் 800 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    இதில் புதிய வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொண்டனர். மேலும் வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்றும் சரிபார்த்துக்கொண்டனர்.

    அதுபோல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் உரிய ஆவணங்களை கொடுத்தனர். இம்முகாம் நடைபெற்றதை அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடலூரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த முகாமில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பலராமன் கலந்து கொண்டு மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
    ராமநத்தம்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 49). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஆதிமூலத்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் 11-ந் தேதி தந்தையை அழைத்து கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது தொழுதூர் பஸ் நிறுத்தத்தில் உறவுக்கார பெண்ணான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காட்டை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்தியப்பிரியா(26) நின்றிருந்தார்.

    இவரை கண்ட கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார். உடனே அவர், சத்தியப்பிரியாவிடம் எதற்காக இங்கே நிற்கிறாய் என்று கேட்டார். அதற்கு சத்தியப்பிரியா, மங்களூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக வெகுநேரமாக காத்திருப்பதாகவும், லக்கூர் அருகில் மங்களூர் இருப்பதால் தன்னையும் ஆட்டோவில் அழைத்துச்செல்லுமாறு கூறினார். உடனே அவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த தனது உறவினர்களிடம் நலம் விசாரித்த சத்தியப்பிரியா, இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கி விட்டு காலையில் சொந்த ஊருக்கு செல்கிறேன் என்று கூறினார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதற்கிடையில் வேலை சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்று விட்டார்.

    வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாத்தி (40), மகள்கள் கீர்த்திகா(20), மோனிகா(18) ஆகியோரிடம் சத்தியப்பிரியா எனக்கு நர்சு ஒருவரிடம் பழக்கம் உண்டு. அவர் மூலம் ஊசி போட கற்றுக்கொண்டேன்.

    தற்போது தன்னிடம் கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் கொரோனா நோய் வராது என்று கூறினார். இது உண்மை என்று நம்பிய 3 பேரும் கொரோனா தடுப்பூசி போட ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராஜாத்தி உள்ளிட்ட 3 பேருக்கும் சத்தியப்பிரியா ஊசி போட்டார். சில நிமிடங்களில் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மனைவி, மகள்கள் மயங்கி கிடப்பது குறித்து சத்தியப்பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 3 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளேன். இதனால் அவர்கள் தூங்கி விட்டனர். காலையில் சரியாகிவிடும், பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்திக்கும் ஊசி செலுத்தியதால் அவரும் மயங்கி விழுந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோர் கழுத்தில் கிடந்த நகைகளை காணவில்லை. வீட்டில் இருந்த சத்தியப்பிரியாவும் இல்லை.

    அதன்பின்னர் தான் கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, மயக்க ஊசி செலுத்தி ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோரிடம் இருந்த 30 பவுன் நகையை சத்தியப்பிரியா கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்களூருவில் இருந்த சத்தியப்பிரியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 பவுன் நகை மீட்கப்பட்டது. அவர் எதற்காக நகையை கொள்ளையடித்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நல்லப்பரெட்டிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தென்னந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வைத்து விட்டு, மாலையில் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் அங்கு பட்டாசுகள் தயாரிக்க வெடி மருந்து உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. சுமார் 10 நிமிடம் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசு ஆலை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சி அளித்தது.

    கடலூர் தாசில்தார் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை என்பதும், கோவில் திருவிழாவுக்காக 2 மூட்டைகளில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததும், மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக குறிப்பிட்ட அளவில் வெடிமருந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததாலும், அதிகாலை நேரத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதாலும் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
    ராமநத்தம் அருகே விவசாயி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராமநத்தம்:

    பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 50), விவசாயி. இவர் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ஆவட்டி கருப்புசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி, 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் பிச்சை பிள்ளை நேற்று காலை தான் படுத்திருந்த கட்டிலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிச்சை பிள்ளை உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே கடலூர் கைரேகை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், சுரேஷ், மதுமிதா நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிச்சைபிள்ளை உடலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் பிச்சை பிள்ளை பிணமாக கிடந்த இடத்தில் இருந்து அங்குள்ள மெயின் ரோடு வரை ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சை பிள்ளை தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வனவிலங்குகள் ஏதேனும் அடித்துக் கொன்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம் காரில் எடுத்துச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது குறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் செஞ்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 47). என்பதும் அவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்களை மொத்தமாக சப்ளை செய்து வருவதாகவும் அந்த கடைக்காரர்களிடம் இருந்து தற்போது பணம் வசூலித்து செல்வதாகவும் கூறினார்.

    இருப்பினும் அவர் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
    கோடை மழை பெய்தால்தான் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரி மேட்டூர் அணை தண்ணீர் மூலம் நிரப்பப்படும். அதோடு பருவமழை காலத்தில் ஏரி நிரம்பி விடும்.

    கடந்த ஆண்டு பெய்த புயல் மழை காரணமாக வீராணம் ஏரி 2 முறை நிரம்பி வழிந்தது. ஏரியில் இருந்து உபரிநீர் அப்படியே திறந்துவிடப்பட்டதால் வீராணம் ஏரியின் கரையோர கிராமங்கள் தனித்தீவாக மாறியது.

    தற்போது வடவாறு வழியாகவும், செங்கால்ஓடை வழியாகவும் வரக்கூடிய தண்ணீர் வீராணம் ஏரிக்கு வரவில்லை. கொளுத்தும் கோடைவெயில் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு குட்டைபோல் காணப்படுகிறது.

    எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்மட்டம் இன்றுகாலை 8 மணி அளவில் 39.95 அடியாக உள்ளது. பாசனத்துக்கு 24 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னைக்கு 41 கன நீர் அனுப்பப்பட்டது. அது இன்று காலை 25 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 22 அடிவரை நீர்மட்டம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் குறைந்துவிட்டால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும். எனவே கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் பங்கீடு செய்யப்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 5,177 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,820 கட்டுப்பாட்டு கருவிகள், 4,027 வி.வி.பேட் கருவிகள் விருத்தாசலம் தமிழ்நாடு அரசு பண்டகசாலை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் பங்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு பங்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

    விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார்கள் விருத்தாசலம் வேல்முருகன், வேப்பூர் கோவிந்தன், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசீலன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வருகை தந்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    கடலூர் மாவட்டத்தில்அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உரிய ஆவணமின்றி எடுத்து வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் பண்ருட்டி அருகே நத்தம் ராமகுளம் அருகில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கிருஷ்ணராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இரும்பு பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.19 லட்சத்து 74 ஆயிரத்து 500 இருந்தது.

    இது தொடர்பாக காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், ஆனத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உன்னிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மங்களநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வங்கி மேலாளர் உன்னிகிருஷ்ணன் வங்கியில் இருந்து பணத்தை யாருக்கும் கொடுக்க எடுத்துச்சென்றாரா?, அல்லது அது அவரது சொந்த பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×